You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சீனா வருடத்திற்கு 600 கோடி கரப்பான்பூச்சி உற்பத்தி செய்வதன் பின்னணி
கரப்பான்பூச்சி பலராலும் வெறுக்கப்படக்கூடியதாக இருக்கலாம். ஆனால் அவற்றுக்கு மருத்துவ குணங்கள் இருப்பதாக கூறப்படுவதால், சீன மருந்து தொழிலில் இந்த பூச்சி முக்கிய பங்கு வகிக்கிறது.
வறுக்கப்பட்ட கரப்பான்பூச்சிகள் சீனாவில் பல ஆண்டுகளாக உண்ணப்பட்டு வருகின்றன. பல ஆசிய நாடுகளிலும் கரப்பான்பூச்சி உணவாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. இந்நிலையில் தற்போது கரப்பான் பூச்சி உற்பத்தியானது மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
மிகப்பெரிய அளவில் மருந்துகளை தயாரிக்கும் ஒரு மருந்து நிறுவனம் தற்போது ஆண்டுக்கு 600 கோடி கரப்பான் பூச்சிகளை தயாரித்து வருகிறது.
நாட்டின் தென் மேற்கு நகரமான ஷிசங்கில் இது அமைந்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு
இரண்டு கால்பந்து மைதானத்தின் அளவுக்கு இருக்கும் கட்டடத்தில் இந்த பூச்சிகள் வளர்க்கப்படுகின்றன என தென் சீன மார்னிங் போஸ்ட் நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.
உள்ளே பரந்த வரிசையில் உள்ள அலமாரிகளில் திறந்த உணவு மற்றும் நீர் கொள்கலன்கள் உள்ளன. அவை சூடாகவும், ஈரப்பதம் மிகுந்ததாகவும் மற்றும் இருட்டாகவும் இருந்தன.
பண்ணைக்குள் பூச்சிகள் சுதந்திரமாக சுற்றலாம் இனப்பெருக்கம் செய்யலாம் ஆனால் அவை அங்கிருந்து வெளியேறவோ பகல் வெளிச்சத்தை பார்க்கவோ முடியாது.
செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான ஒரு கருவி அமைப்பு இந்த பண்ணையை கட்டுப்படுத்துகிறது. வெப்பநிலை, ஈரப்பதம், உணவு வழங்குதல் உள்ளிட்ட அனைத்துவித சேவைகளையும் இந்த அமைப்பு ஒழுங்குபடுத்துகிறது.
இந்த பண்ணையின் நோக்கம் கரப்பான்பூச்சிகள் எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு வேகமாக இனப்பெருக்கம் செய்ய உதவுவதே.
மருத்துவப் பயன்
கரப்பான்பூச்சி இளம்பருவத்தை அடைந்ததும் பிரத்யேக முறையில் ஒரு அமைப்பு மூலம் கவரப்பட்டு கொல்லப்படும். இறந்த பின்னர் அவை பதப்படுத்தப்பட்டு, பாரம்பரிய சீன மருத்துவத்தில் பயன்படுத்தப்படக்கூடிய சிகிச்சை முறைக்கான திரவ மருந்தை உருவாக்கப் பயன்படுத்தப்படும்.
இந்த திரவ மருந்தானது மோசமான நாற்றத்துடன் இனிப்பான சுவையுடன் இருக்கும். இது காங்ஃ புக்ஸின் என அறியப்படுகிறது. இரைப்பை குடல் அழற்சி, கடுமையான வயிற்றுப் புண் மற்றும் அழற்சி, சுவாச பிரச்சினைகள் மற்றும் சில பிணிகளுக்கும் மருந்தாக இது பயன்படுத்தப்படுகிறது.
''உண்மையில் அவை அற்புதமான மருந்து'' என ஷான்டாங் விவசாய பல்கலைகழகத்தின் பேராசிரியர் மற்றும் ஷான்டோங் மாகாணத்தின் பூச்சி சங்கத்தின் தலைவருமான லியூ யூஸெங் பிரிட்டிஷ் நாளிதழான தி டெலிக்ராஃபிடம் கூறியுள்ளார்.
'' அவை நிறைய வியாதிகளை குணப்படுத்தும் மற்றும் மற்ற எந்த மருந்துகளை விடவும் வேகமாக செயல்பட்டு பலனளிக்கும்'' என அவர் கூறியுள்ளார்.
''மலிவான'' மாற்று
''சீனா வயதானவர்களை அதிகம் கொண்டிருக்கும் பிரச்னையை சந்தித்துவருகிறது'' என பேராசிரியர் விவரித்தார்.
'' முதியோர்களுக்காக நாங்கள் புதிய மருந்துகளை கண்டுபிடிக்க முயன்றுகொண்டிருக்கிறோம். மேலும் இவை பொதுவாக மேற்கத்திய மருந்துகளை விட மலிவானவை'' என அவர் தெரிவித்தார்.
மருத்துவ பயன்பாடுகளுக்காக கரப்பான்பூச்சிகள் உற்பத்தி செய்யப்படுவதை அரசாங்கம் ஊக்குவிக்கிறது. மேலும் இந்த பூச்சிகளில் இருந்து பெறப்படும் பொருட்கள் மருத்துவமனைகளில் சாதாரணமாக பயன்படுத்தப்படுகின்றன என்றபோதிலும் அங்கே எதிர்ப்புக் குரல்கள் இருக்கின்றன.
''இந்த திரவ மருந்தானது ஒன்றும் எல்லா நோய்களையும் தீர்க்கக்கும் அரிய மருந்து அல்ல. நோய்க்கு எதிராக செயல்படும் எந்த மந்திர சக்தியும் இம்மருந்துக்கு இல்லை'' என பெய்ஜிங்கில் உள்ள சீன மருத்துவ அறிவியல் கல்விச்சாலையின் ஆராய்ச்சியாளர் ஒருவர் தன்னைப் பற்றி பெயர் உட்பட எந்த தகவலும் வெளியிடவேண்டாம் என்ற வேண்டுகோளோடு தெரிவித்துள்ளார் என தென் சீன மார்னிங் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
இன்னொரு அறிஞரின் கருத்துப்படி பண்ணையில் மிகப்பெரும் எண்ணிக்கையில் பூச்சிகள் அடைத்து வைக்கப்பட்டிருப்பது மிகவும் ஆபத்தானதாகும்.
'' மனித தவறுகளினாலோ அல்லது பூகம்பத்தாலோ நூற்றுக்கணக்கான கோடி கரப்பான் பூச்சிகள் வெளியேறினால் அது பேரழிவாக இருக்கும்'' என அதே நாளிதழில் பேராசிரியர் சூ சாவ்டோங் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்