You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உலகப் பார்வை: சுவீடனில் 1500 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த படுகொலைகள் கண்டுபிடிப்பு
கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.
1500 ஆண்டுகளுக்கு முன்பு சுவீடனில் நடந்த படுகொலைகள் கண்டுபிடிப்பு
கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் சுவீடனில் பெரிய அளவிலான படுகொலைகள் நடந்ததற்கான ஆதாரங்களை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு சேண்ட்பி மாளிகையில் நடத்தப்பட்ட தாக்குதலில், ஒரு பிறந்த குழந்தை உள்பட பலர் கொல்லப்பட்டதாகவும், அந்த மாளிகையில் 200 முதல் 250 பேர் வரை வசித்திருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
எனினும், இந்தக் கொலைகளுக்கு காரணமானவர்கள் யாரென்று தெரியவில்லை.
காணாமல் போன இரான் முன்னாள் மன்னரின் 'மம்மி' கிடைத்தது
இரான் தலைநகர் டெஹ்ரான் அருகே கடந்த திங்களன்று கண்டெடுக்கப்பட்ட 'மம்மி' இஸ்லாமியப் புரட்சிக்கு முன்பு இரானை ஆட்சி செய்த பஹ்லாவி அரச குடும்பத்தை சேர்ந்த கடைசி மன்னரின் தந்தையாக இருக்கலாம் என்று அக்குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
மன்னர் ரேசா ஷா பஹ்லாவியின் கல்லறை 1979 இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு அழிக்கப்பட்டது. எனினும், அவரது இறந்த உடலின் எச்சங்கள் என்ன ஆயின என்று தெரிந்திருக்கவில்லை.
ரேசா ஷா நிறுவிய பஹ்லாவி அரச குடும்பம் 1925 முதல் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இரானை (அப்போது 'பெர்சியா' என்று அழைக்கப்பட்டது) ஆட்சி செய்தது.
இஸ்ரேல் : கொலைக்கு தண்டனையாக ஒன்பது மாத சிறை
போராட்டத்தில் ஈடுபட்ட பதின்வயது பாலத்தீன சிறுவன் ஒருவனை 2014இல் சுட்டுக் கொன்ற இஸ்ரேல் எல்லைக் காவல் படையைச் சேர்ந்த காவலர் ஒருவருக்கு இஸ்ரேல் நீதிமன்றம் ஒன்று ஒன்பது மாதங்கள் சிறை தண்டனை வழங்கியுள்ளது.
17 வயதான நாடிம் நுவாரா மேற்குக் கரையில் நடந்த ஒரு போராட்டத்தின்போது பென் தெரி எனும் காவலரால் கொல்லப்பட்டார்.
சர்ச்சைகளுக்கு மத்தியிலும் லாபமீட்டும் ஃபேஸ்புக்
பயனாளிகளின் தனிப்பட்ட தகவல்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு மத்தியிலும் ஃபேஸ்புக் நிறுவனத்தின் வருவாய் அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டின் முதல் காலாண்டில் அந்நிறுவனத்தின் வருவாய் 11.9 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. அதற்கு முந்தைய காலாண்டில் அந்நிறுவனத்தின் வருவாய் எட்டு பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்