குடியேறிகளை வெறுக்கும் ஹாங்காங்: கால்பந்து மூலம் தீர்வு முயற்சி #CrossingDivides

பட மூலாதாரம், All Black FC
ஹாங்காங்கில் உள்ளூர் மக்கள் குடியேறிகளுடன் அரிதாகவே கால்பந்து விளையாடுகின்றனர்.
இது ஆச்சரியமான சேதி அல்ல. அநேகமாக மூன்றில் ஒருபங்கு சீன ஹாங்காங்கினர் பேருந்தில் மற்ற இனத்தவர்களுக்கு அருகில் உட்காருவதை கூட விரும்புவதில்லை, அவர்கள் வீட்டுக்கு அருகில் வசிக்க விரும்புவதில்லை, தங்களது குழந்தைகளை குடியேறிகளின் குழந்தைகளின் வகுப்புத் தோழர் தோழியராக்க விரும்புவதில்லை என்கிறது ஹாங்கான் யூனிசன் எனும் அரசு சாரா அமைப்பின் அறிக்கை.
அருமையான கால்பந்தாட்டம் இந்த பாகுபாடுகளை முறியடிக்க உண்மையில் வலுவான ஓர் விஷயமாக இருக்கிறதா?
2016-ல் இருந்து ஓர் அகதி கால்பந்தாட்ட அணியான - ஆல் பிளாக் எஃப் சி தனது விளையாட்டு வீரர்களை ஒருங்கிணைத்து ஹாங்காங் மக்களிடையே ஆஃப்ரிக்கர்களுக்கு நல்லபடியாக ஒரு முகம் கிடைக்க முயன்று வருகிறது.
மத்திய ஆஃப்ரிக்க குடியரசை சேர்ந்த ஒரு முன்னாள் கால்பந்தாட்ட வீரரான மெடார்ட் பிரிவட் கோயாதான் இந்த அணியின் நிறுவனர். முதலில் ஆல் பிளாக் எஃப் சி அணியில் அனைவரும் ஹாங்காங்கில் தஞ்சம் புகுந்த ஆஃப்ரிக்க வீரர்களாக இருந்தனர். பின்பு உள்ளூர் சீனர்கள் மற்றும் மற்ற இன சிறுபான்மையினர் ஆகியோரை வரவேற்று அணி விரிவடைந்துள்ளது.
''கால்பந்து எங்கள் அனைவரையும் ஒன்றிணைத்துள்ளது'' என அவர் கூறுகிறார். ''நாங்கள் புது யோசனைகளை முன்வைக்கிறோம், எங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறோம் மற்றும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்கிறோம்'' என்கிறார் மெடார்ட் பிரிவட் கோயா.
ஹாங்காங்கில் தஞ்சம் புகுவோருக்கு அங்கே வேலை செய்ய அனுமதி இல்லை. அவர்கள் அந்நகரத்தில் பல வருடங்களாக வாழ்ந்தாலும் இதே நிலைதான்.

பட மூலாதாரம், All Black FC
டோகோவில் இருந்து தஞ்சம் தேடி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஹாங்காங் வந்த டாரியஸ் தற்போது கால்பந்தாட்ட அணியின் அணித்தலைவராக இருக்கிறார். அவருக்கு வேலை செய்ய அனுமதி இல்லை என்பதால் ''கால்பந்தாட்டம் தனக்கு எதிர்கால வாழ்வுக்கான ஓர் அர்த்தத்தை தருகிறது'' என கூறுகிறார்.
''இது மிகவும் கடினமான நிலை. உங்களது இளம் வாழ்க்கையில் ஐந்து அல்லது ஏழு ஆண்டுகள் காத்திருந்தே கழிப்பது மக்களுக்கு மெல்ல மெல்ல இறந்துபோகும் உணர்வை அளிக்கிறது. உங்களது எதிர்காலம் என்னவாக இருக்கும் என்ற கவலையே உண்மையில் உங்களை சூழ்ந்துகொள்ளும். எந்தவித பயிற்சியும் இன்றி, வேலையும் இன்றி நீங்கள் நெடுங்காலம் இருந்தால் பின்னாளில் நீங்கள் என்ன வேலை செய்வீர்கள்? உங்களை யார் வேலைக்கு எடுப்பார்கள்?'' எனக் கேட்கிறார் டரியஸ்.
அவர் ஆல் பிளாக் எஃப் சி அணியில் இணைந்த பிறகு, அது அவருக்கு நம்பிக்கை அளித்துள்ளது. ''என்னைப் போன்ற நிலையில் இருக்கும் வீரர்கள் சேர்ந்து இங்கே ஓர் குழுவாக இருக்கிறோம். நாங்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு விஷயத்துக்காக போராடுகிறோம். எங்களது திறமையின் அடிப்படையில் மக்கள் எங்களை மதிக்கிறார்கள்'' என்கிறார் டரியஸ்.
அணியின் மிகவும் திறமை வாய்ந்த வீரர்களுக்கு சில பெரிய விஷயங்கள் கிடைக்கக்கூடும். வெகு சிலர் உள்ளூர் கால்பந்து கிளப்புகளில் விளையாட தேர்ந்தெடுக்கப்படலாம். அதன்பின்னர், அவர்கள் ஹாங்காங்கில் சட்டப்பூர்வமாக வேலை செய்ய அயல்நாட்டு நுழைவுச்சான்று வேண்டி விண்ணப்பிக்கலாம்.
மூக்கைப் பொத்தும் உள்ளூர்வாசிகள்
ஆல் பிளாக் எஃப் சியில் ஆஃப்ரிக்கர்கள் அல்லாதவர்கள் மற்றும் உள்ளூர்வாசிகளை பார்ப்பதற்கான வேலைகளுக்கு மெடார்ட் ஊக்கமூட்டுகிறார்.
அணியில் சிலருக்கு வித்தியாசமான அனுபவங்கள் ஏற்பட்டுள்ளன.
வீட்டு உரிமையாளர்கள் அயல்நாட்டவர்களை வெறுப்புடன் பார்ப்பதால் நகரத்தில் ஒரு வீடு வாடகைக்கு கிடைப்பது குடியேறிகளுக்கு மிகவும் சிரமமான காரியம் என டரியஸ் தெரிவிக்கிறார்.
பிபிசி சீன மொழி சேவையுடன் பேசிய, கம்பியா நாட்டைச் சேர்ந்த 26 வயது சாலமன் ந்யாஸி, ஹாங்காங்கில் தனது முதல் நாள் அனுபவம் குறித்து குறிப்பிடுகையில், ''என்னை கடந்து செல்கையில் உள்ளூர் மக்களில் சிலர் தங்களது கையை வைத்து மூக்கைப் பொத்திக் கொண்டு சென்றனர்'' என்கிறார்.
''சில நேரங்களில் நான் அங்குள்ள தெருக்களில் நடக்கும்போது சீன சுற்றுலா பயணிகள் தன்னைச் சுற்றிக்கொண்டு படம் எடுத்துக் கொள்ள வேண்டி கேட்கிறார்கள். இது எனக்கு அவமானமாக இருந்தது'' என தெரிவித்தார் சாலமன்.

பட மூலாதாரம், All Black FC
சாலமன் தனது தோழியான 20 வயது ஹாங்காங் பெண் லூயிஸ் சானை ஆல் பிளாக் எஃப் சி போட்டியின்போது சந்தித்துள்ளார். ஆஃப்ரிக்கர்கள் முதிர்ந்த அனுபவம் உடையவர்களாகவும், சுய உந்துதலுடன் இருப்பதாகவும் அவள் நம்புகிறார். மேலும் அவரது குடும்பம் இந்த இணையின் உறவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. ஆனால் மக்களில் சிலரின் எதிர்வினைகள் அவளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
''ஹாங்காங் மக்கள் குறுகிய எண்ணம் கொண்டவர்கள்'' என்கிறார் துணிக்கடை ஒன்றை சொந்தமாக வைத்திருக்கும் லூயிஸ். ''ஆஃபிரிக்க மக்கள் குறித்து தவறான கட்டுக்கதைகளை சொல்லும் கட்டுரைகளை என்னிடம் அனுப்புகின்றனர். நான் மிகவும் ஏமாற்றம் அடைந்தேன்'' என லூயிஸ் குறிப்பிடுகிறார்.
ஆப்ரிக்கர்கள் உக்கிரத்துடன் கால்பந்து விளையாடுபவர்கள் என ஹாங்காங் உள்ளூர்வாசிகள் எண்ணுகின்றனர் என்கிறார் டரியஸ்.
''நாங்கள் எப்போதும் எங்கள் வீரர்களிடம் ஒழுக்கத்துடன் விளையாடுமாறு கூறிவருகிறோம். நடந்ததைப் பற்றி கவலை கொள்ளாமல் நாம் அமைதியாக விளையாட வேண்டும். அவர்கள் நம் மேல் முத்திரை குத்த அனுமதிக்க முடியாது'' என அணித்தலைவர் கூறியுள்ளார்.

பட மூலாதாரம், Louise Chan
'நான் இனம் பார்க்கவில்லை'
கடந்த ஜூலை 2017 முதல் ஆல் பிளாக் எஃப் சியில் ஹாங்காங்கைச் சேர்ந்த 34 வயது டோ ட்ஸீ விளையாடிவருகிறார். முதலில் என்னை ஆஃப்ரிக்க வீரர்கள் முழுமையாக வரவேற்றது போல உணரவில்லை என்றார் டோ ட்ஸீ.
ஆனால் அவர் கால்பந்தில் தனது முழு உத்வேகம் மற்றும் ஈடுபாடு ஆகியவற்றை காட்டியதும், அந்த அணியில் உள்ள வீரர்களோடு நல்ல நண்பர்களாகி இப்போது ஒன்றாக வெளியே சுற்றி வருகின்றனர்.
''நான் இனம் பார்ப்பதில்லை. நான் நல்ல வீரர்களை மட்டுமே பார்க்கிறேன்'' என அவர் அடுக்குகிறார்.
ஒரு கல்லூரியின் கால்பந்தாட்ட வீரரான கெவின் ஃபங் சமீபத்தில் ஆல் ஃபிளாக் எஃப்சியில் விளையாடியுள்ளார். மேலும் ஆப்ரிக்க வீரர்கள் ஹாங்காங் நாட்டு வீரர்களை ஊக்குவிப்பதாக அவர் நம்புகிறார்.
''அவர்கள் உணர்ச்சிகரமாக விளையாடுகிறார்கள். கடினமாக உழைப்பது மட்டுமின்றி கவனம் செலுத்தி விளையாடுகிறார்கள். ஆனால் ஹாங்காங் வீரர்கள் எளிதில் முயற்சியை விட்டுவிடுகிறார்கள் '' என கெவின் தெரிவித்துள்ளார்.
''ஹாங்காங் மக்கள் மற்ற வேலைகளிலும் படிப்பிலும் கவனம் செலுத்துகின்றனர். தங்களது ஓய்வு நேரத்தில் கால்பந்துக்கு குறுகிய நேரமே செலவழிக்கின்றனர்'' என்கிறார் கெவின்.
இந்த ஒரு காரணத்தின் பொருட்டு ஹாங்காங்கில் கால்பந்து விளையாட்டு உண்மையில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த உதவுமா என சந்தேகப்படுகிறார் கெவின்.

பட மூலாதாரம், Biu Chun Rangers
''கால்பந்தாட்டம் இங்கே மிகப்பிரபலமானது அல்ல. ஹாங்காங்கில் வெகு சில கால்பந்தாட்ட போட்டிகள் நடைபெறும். அதிகாரபூர்வ கால்பந்து போட்டிகள் இங்கே முழுமையாக ஒளிபரப்பப்படுவதில்லை. யாரும் இங்கே உள்ளூர் கால்பந்தை கண்டுகொள்வதில்லை. இன ரீதியான பிரச்னைகளை கால்பந்து மூலம் தீர்ப்பது சிரமமானது'' என அவர் தெரிவித்துள்ளார் கெவின் ஃபங்
ஆல் பிளாக் எஃப் சி இதனை புரிந்துகொள்ளும். சமூக மாற்றத்துக்கு அவர்கள் நினைக்கும் இலக்கை மேற்கொண்டு அடைவதற்கு விளையாட்டு வீரர்கள் மேற்கொண்டு முதியவர்கள் இல்லத்துக்குச் செல்வது போன்றவற்றைச் செய்யும்போது பரந்த சமூகத்துடன் தங்களை தொடர்புபடுத்திக் கொள்ள முடியும்.
''இவை உள்ளூர் மக்களின் மனநிலையை மாற்றும்'' என்கிறார் டரியஸ்.
''இந்த அணுகுமுறையால் இன்றைக்கு நேரடி பலன் இல்லாமல் போகலாம். ஆனால் அடுத்த தலைமுறையினர் எதிர்காலத்தில் தஞ்சம் தேடுவோர் மற்றும் அகதிகள் போன்ற இன சிறுபான்மையினர் மீதான பார்வை ஹாங்காங்கில் மாற உதவும்'' என தெரிவித்துள்ளார்.

பிபிசி தமிழ் தளத்தில் ’Crossing Divides’ எனும் பகுதி உலகின் வெவ்வேறு துருவ மக்களுக்கு இடையே இணைப்பை உருவாக்கும் மக்கள் குறித்த வார கட்டுரைகளை கொண்டிருக்கிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












