You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிரான்ஸ்: பிணைக்கைதிக்கு பதிலாக தன்னை பணையம் வைத்த போலீஸ் உயிரிழப்பு
பிரான்ஸின் தென்பகுதியிலுள்ள நகரமான ட்ரெப்பிலுள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் துப்பாக்கிதாரியால் பிடித்து வைக்கப்பட்டிருந்த பிணைக்கைதிக்கு பதிலாக உள்ளே சென்ற போலீஸ் ஒருவர் உயிரிழந்தார்.
உயிரிழந்த அர்னாட் பெல்ட்ராம் "ஒரு சிறந்த நபர்" என்றும் "விதிவிலக்கான தைரியத்தை" வெளிக்காட்டியதாகவும் அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மக்ரோங் பாராட்டியுள்ளார்.
தெற்கு பிரான்சில் மூன்று பேரை சுட்டுக்கொன்ற துப்பாக்கிதாரியை கொன்று அங்கு நிலவிய மோசமான சூழ்நிலையை கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கு இந்த போலீஸ் அதிகாரி காரணமாக திகழ்ந்தார்.
பெல்ட்ராமின் தியாகம் குறித்து வானொலி நேர்காணல் ஒன்றில் பேசிய அவரது சகோதரர், "அவர் வழிப்போக்கர்களுக்காக தனது உயிரையே கொடுத்துள்ளார். தான் உயிர் பிழைப்பதற்குரிய வாய்ப்பே கிடையாது என்பது குறித்து அவருக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கக் கூடும். இந்த செயல் அவரை உயர்ந்த மனிதராக ஆக்காவிட்டால் வேறென்ன ஆக்க முடியும்?" என்று கூறியுள்ளார்.
முன்னதாக பொதுமக்களை பிணைக்கைதிகளாக வைத்திருந்த துப்பாக்கிதாரி போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். ஆனால், அந்த துப்பாக்கிதாரி ஒரு பெண்ணை மனித கேடயமாக வைத்திருந்தார்.
அந்த பெண்ணிற்கு பதிலாக, பிணையாக அர்னாட் உள்ளே சென்றார்.
மொரோக்கோவை சேர்ந்தவராக கருதப்படும் அந்த துப்பாக்கிதாரி லக்டிம், தான் ஐ.எஸ் அமைப்பை சேர்ந்தவர் என்று கூறியிருந்தார்.
போலீஸ் அதிகாரியான அர்னாட் உயிரிழந்ததை ட்விட்டரில் அறிவித்த அந்நாட்டின் உள்துறை அமைச்சர் கெரார்ட் கொலொம்ப், "அவர் தன் நாட்டுக்காக உயிரிழந்துள்ளார். அவரது துணிவையும், தியாகத்தையும் பிரான்ஸ் என்றும் மறக்காது" என்று கூறியுள்ளார்.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் மூவர் உயிரிழந்தனர், 16 பேர் காயமுற்றனர் மற்றும் இருவர் படுகாயமடைந்தனர். இது "இஸ்லாமிய பயங்கரவாதத்தின் செயல்" என்று அதிபர் மக்ரோங் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் 13ல் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற தாக்குதல்களில் 130 பேர் உயிரிழந்தனர். சம்பவத்தில் உயிருடன் இருக்கும் முக்கியமான சந்தேகத்திற்குரிய நபரான சலாஹ் அப்டேஸ்லாமை விடுவிக்குமாறு இத்துப்பாக்கிதாரி வலியுறுத்தியதாக கூறப்பட்டது.
துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, லக்திமின் கூட்டாளி என்று நம்ப்பபட்ட மற்றொரு நபரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
முன்னதாக, அப்பகுதியில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போலீசாரை நோக்கி இதே நபர் சுட்டதில் போலீஸ் ஒருவர் காயமடைந்தார்.
இதுவரை பிரான்சில் நடந்த முக்கியமான தாக்குதல்கள்
அக்டோபர் 1, 2017 - மார்சே ரயில் நிலையத்தில் இரண்டு பெண்கள் குத்தி கொல்லப்பட்டனர். இதற்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது.
ஜூலை 26, 2016 - நார்மண்டியிலுள்ள தேவாலயத்தில் இரண்டு தாக்குதலாளிகள் மதகுரு ஒருவரின் தொண்டையை அறுத்தனர். தாக்குதலாளிகள் இருவரும் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜூலை 14, 2016 - நைஸ் கடற்கரையோர பகுதியில் பாஸ்ட்டீல் தின கொண்டாட்டத்தின்போது, மக்கள் அதிகளவில் குழுமியிருந்த இடத்தில் லாரி ஒன்றை கொண்டு ஏற்றியதில் 86 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது; தாக்குதலாளி போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஜூன் 13, 2016 - மான்யாங்வில் பகுதியில் போலீஸ் ஒருவரும், அவரது இணையும் ஐ.எஸ் அமைப்பை சேர்ந்தவர் எனக் கூறிய ஜிகாதி ஒருவரால் குத்திக் கொல்லப்பட்டார். பிறகு, அவர் போலீசால் கொல்லப்பட்டார்.
நவம்பர் 13, 2015 - ஐ.எஸ் அமைப்பை சேர்ந்த ஜிகாதிகள் பிரான்சின் தலைநகரான பாரிஸில் நடத்திய தாக்குதலில் 130 உயிரிழந்தனர், 350 பேர் காயமுற்றனர்.
ஜனவரி 7-9, 2015 - பிரெஞ்சு மொழி இதழான சார்லி ஹெப்டோவில் இரண்டு இஸ்லாமிய துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டனர். அதற்கடுத்த தினங்களில் நடந்த தாக்குதல்களில் ஒரு போலீஸ் உள்பட ஐந்து பேரும், தாக்குதலாளிகளும் கொல்லப்பட்டனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்