துப்பாக்கி வாங்க வயது வரம்பை உயர்த்தும் திட்டத்தை கைவிட்டார் டிரம்ப்

அமெரிக்காவில் பள்ளிக்கூடங்களில் நடக்கும் துப்பாக்கி சூடுகளைத் தடுக்க செயல்படுத்தவுள்ள அதிபர் டிரம்ப்பின் திட்டத்தில், அரை தானியங்கி துப்பாக்கிகளை வாங்குவதற்கு வயது வரம்பை 21 ஆக உயர்த்தும் நடவடிக்கை இடம்பெறவில்லை.

ஆனால், பள்ளி ஆசிரியர்களுக்குத் துப்பாக்கி பயிற்சியை வழங்குவது குறித்த தனது சர்ச்சைக்குரிய முன்மொழிவை அவர் முன்னெடுத்து வருகிறார்.

ஆயுதம் வாங்குவது தொடர்பான குறைந்தபட்ச வயதை உயர்த்துவதற்கு, அரசியல் ரீதியான ஆரதவு கிடைக்கவில்லை என டிரம்ப் டிவிட்டர் பதிவு செய்துள்ளார்

சட்டப்படி, அமெரிக்கர்கள் 18 வயது நிறைபெற்றால் மட்டுமே துப்பாக்கி வாங்க முடியும். கைத்துப்பாக்கி வாங்க 21 வயது ஆகி இருக்க வேண்டும்.

ஃபுளோரிடாவில் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி பள்ளி ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட 19 வயதான சந்தேக நபர், சட்டப்பூர்வமாக வாங்கிய அரை தானியங்கி துப்பாக்கியைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டார்.

பள்ளி பாதுகாப்பு குறித்த புதிய ஃபெடரல் கமிஷன் வயது வரம்பு சிக்கலை ஆய்வு செய்வதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

''வயது வரம்பை 18- 21ஆக உயர்த்துவதை செயல்படுவதற்கு முன்பு அது தொடர்பான நீதிமன்ற வழக்குகளையும், தீர்ப்புகளையும் கவனித்துக்கொண்டிருக்கிறோம்'' என டிரம்ப் டிவிட்டர் பதிவு செய்துள்ளார்.

``அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. விஷயங்கள் விரைவாக நகர்கின்றன. ஆனால், இதற்கு அரசியல் ஆதரவு இல்லை`` எனவும் டிரம்ப் கூறியுள்ளார்.

ஆனால், வயது வரம்பை 21ஆக உயர்த்தும் திட்டம் குறித்து பள்ளி அதிகாரிகள் மத்தியில் முன்பு டிரம்ப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :