You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தீக்காயம் : மரணம் எப்படி நிகழ்கிறது? - முக்கிய தகவல்கள்
தேனி மாவட்டத்திலுள்ள குரங்கணி மலையில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி 9 பேர் பலியாகியுள்ள நிலையில், மரணத்துக்கு முக்கிய காரணமாக கருதப்படும் தீப்புண்களின் நிலை குறித்து பிபிசி தமிழிடம் விளக்கினார் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையை சேர்ந்த தீக்காயம் சிறப்பு சிகிச்சை பிரிவின் தலைவர் வசந்தாமணி.
தீக்காயத்தில்மூன்று நிலைகள்
தீக்காயத்தில் மொத்தம் மூன்று நிலைகள் உள்ளன. முதல் நிலை மேல்புறத்தோலிலும், இரண்டாம் நிலை மேல்புறத்தோலின் அடிப்பாகம் வரையிலும், மூன்றாம் நிலை தசை, எலும்பு வரையிலும் ஊடுருவியிருக்கும். இதில் அனைத்து நிலை தீக்காயங்களிலும் வலி இருக்கும்.
முதல் நிலையை காட்டிலும் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை காயங்கள் மிகுந்த வலியுள்ளவையாக இருக்கும். முதல் நிலை தீக்காயத்தால் பாதிக்கப்பட்டவர்கள் உயிர் பிழைப்பதற்கான சாத்தியம் 70 சதவீதம் உள்ளது. இரண்டாம் நிலை தீக்காயத்தால் பாதிக்கப்பட்டவர்கள் உயிர்பிழைக்க 60 சதவீதம் இருக்கிறது. மூன்றாம் நிலை தீக்காயத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 40 முதல் 50 சதவீதம் வரை மட்டுமே உயிர்பிழைக்க வாய்ப்புள்ளது.
மரணம் விளைவிக்கும் நச்சுப்புகை
தீக்காயங்கள் ஏற்படும் விதம் மற்றும் அது ஏற்படும் சூழல் ஒருவர் உயிர் பிழைப்பதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. காடுகள் மற்றும் பேப்பர் கிடங்குகளில் ஏற்படும் தீயால் அதிக அபாயங்கள் உள்ளன. தீ ஏற்படுத்தும் காயங்களை காட்டிலும் இவை ஏற்படுத்தும் புகை உயிரிழப்பிற்கு முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது. இதுதவிர, இதய நோய் தொடர்புடைய நோய்களும் தீக்காயம் அடைந்த நபரின் வாழ்வை தீர்மானிக்கிறது.
நுரையீரல் பாதிக்கப்பட்டால் மரணம் நிச்சயம்
ஒருவர் 70 சதவீத தீக்காயங்களுடன் பாதிக்கப்பட்டிருந்து அவருக்கு நுரையீரல் பாதிப்பில்லாத நிலையில், அவரை நிச்சயமாக அபாய கட்டத்திலிருந்து காப்பாற்றி பிழைக்க வைக்க முடியும். ஆனால், ஒருவேளை தீக்காயம் அடைந்தவருக்கு நுரையீரல் சேதமடைந்திருந்தால் அவரை காப்பாற்றுவது கடினமான காரியம். தீயிலிருந்து உருவான நச்சுப்புகை சுவாசிக்கப்பட்டு அது நுரையீரலில் தங்கி பிராண வாயுவை முற்றிலுமாக தடுத்துவிடும். இதன் காரணமாக மரணம் நிகழ்கிறது.
டிரெக்கிங்கில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?
- படகு சவாரி செய்யும்போது உயிர் காக்கும் உடுப்புகளை மாட்டிக்கொள்வோம். ஆனால், மலையேற்ற பயிற்சியின்போது வெறும் ஆடைகளையே உடுத்திச் செல்வோம். அது முற்றிலும் தவறு. கண்டிப்பாக தீ பாதுகாப்பு ஆடையை அணிந்து செல்வது அவசியம்.
- புகையிலிருந்து காத்துகொள்ள முக கவசமும், அவசிய தேவைக்காக பிராண வாயு அடங்கிய சிறிய சிலிண்டர்களையும் கையுடன் எடுத்து செல்வது மிகவும் சிறந்தது.
- வழிகாட்டிகள் அவசியம் இருக்க வேண்டும். விவரம் தெரிந்த வழிகாட்டிகளின்றி பயணிக்க வேண்டாம். அவர்களிடம், மலையேற்ற பாதையின் உள்ளே, வெளியே வழியை தெளிவாக தெரிந்து கொள்வது நல்லது.
- ஒவ்வொரு வனப்பகுதியிலும் கண்காணிப்பு கோபுரங்கள் இருக்கும். எந்த பகுதிக்கு செல்லவிருக்கிறோமோ அந்த பகுதியை கண்காணிப்பு கோபுரங்கள் மூலம் கண்காணிப்பது சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருக்கும்.
- முக்கியமாக, மலையேற்ற பயிற்சிக்கு வனத்துறையில் அதிகாரபூர்வ அனுமதியை பெற்றிருக்க வேண்டும்.
பிற செய்திகள்:
- நேபாளத்தில் தரையிறங்கும் போது நொறுங்கி விழுந்த விமானம் : 38 பேர் பலி
- என்ன சொல்கிறது எம்.எஸ். சுவாமிநாதனின் அறிக்கை?
- குரங்கணி காட்டுத் தீ: வழிகாட்டி கைது, உடற்கூறு ஆய்வு தொடக்கம்
- 'பேச்சுவார்த்தை தொடர்பாக வடகொரியாவிடமிருந்து இன்னமும் பதில் வரவில்லை'
- திருநங்கை மணமகள் திருநம்பி மணமகன் - சென்னையில் ஒரு சுயமரியாதைத் திருமணம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்