உலகப்பார்வை: போருக்கு பிறகு முதன்முதலாக வியட்நாம் வரும் அமெரிக்க போர்கப்பல்
கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை #உலகப்_பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம்.
வியட்நாமில் அமெரிக்க போர் கப்பல்
வரலாற்று சிறப்பு நிகழ்வாக, அமெரிக்க போர் கப்பல் ’கார்ல் வின்சன்’ வியட்நாம் வந்தடையவுள்ளது. வியட்நாம் போருக்கு பிறகு முதல்முறையாக மிகப்பெரிய கப்பல் ஒன்று வியட்நாமிற்கு வருகிறது.

பட மூலாதாரம், EPA
போரின்போது முதன்முதலில் அமெரிக்க போர் படைகள் வந்தடைந்த டனாங்க் கடற்கரைக்கு இந்த கப்பல் வரவுள்ளது.
தென் சீன கடல் குறித்து சீனா தொடர்ந்து சர்ச்சையை கிளப்பி வருவதால் இந்த கப்பலின் வருகை சீனாவிற்கு எச்சரிக்கை செய்தியாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கைதியின் பாராட்டு
கடந்த மாதம் ஃபுளோரிடா துப்பாக்கிச் சூடு தாக்குதலில் தப்பியியவர்கள், அமெரிக்காவில் துப்பாக்கி கட்டுப்பாடு முயற்சிகளுக்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.
இதனை பாராட்டி முன்னாள் குற்றவாளி ஒருவர் பாராட்டு கடிதம் எழுதியுள்ளார்.

பட மூலாதாரம், Reuters
2004ஆம் ஆண்டு நியூ யார்க்கில் ஜான் ரோமானோ என்னும் அந்நபர் தனது பள்ளிக்குள் துப்பாக்கியுடன் நுழைந்தார் ஆனால் அவர் யாரையும் கொல்வதற்கு முன் அவரது ஆசிரியரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
சிறையில் இருந்து உள்ளூர் செய்தித்தாளிற்கு கடிதம் அனுப்பிய அவர் ஃபுளோரிடா பள்ளி மாணவர்கள் "தையரிமான மற்றும் உத்வேகமளிக்கக்கூடியவர்கள்" என்று பாராட்டு தெரிவித்துள்ளார்.

தொடங்கியது ஆஸ்கர்
90ஆவது ஆஸ்கர் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸில் நடைபெற்று வருகிறது. ஆஸ்கர் விழாவை ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்குகிறார். நிகழ்ச்சியின் முதல் விருது சிறந்த துணை நடிகருக்காக `த்ரி பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங் மிசோரி` படத்தில் நடித்த சாம் ராக் வெல்லிற்கு கிட்டியுள்ளது.

பட மூலாதாரம், Reuters
`ஷேப் ஆஃப் வாட்டர்` என்ற திரைப்படம் 13 பரிந்துரைகளுடன், பரிந்துரைகள் பட்டியலில் முதலாம் இடத்தில் உள்ளது.

சிரியாவில் தாக்குதல்கள் தொடரும்: அதிபர் அல்-அசாத்
கிழக்கு கூட்டாவில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருக்கும் பகுதிகளில் சிரிய அரசு நடத்தி வரும் தாக்குதல்களுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
இந்த தாக்குதல்கள் கொடூரமானது என்று தெரிவித்துள்ள அமெரிக்கா, அதிபர் பஷார் அல் அசாத்தின் முக்கிய கூட்டாளியான ரஷியா, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் எனக்கூறி அப்பாவி பொதுமக்களை கொல்வதாக தெரிவித்துள்ளது.
கிளர்ச்சியாளர்களின் பகுதியில் தனது அரசு படைகள் முன்னேறிச் செல்வதால் தாக்குதல் தொடரும் என அதிபர் பஷார் அல்-அசாத் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












