வட கொரிய தலைவர்கள் போலி பாஸ்போட் பயன்படுத்தியது ஏன்?

1990ஆம் ஆண்டுகளில் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னும், அவரது தந்தையும், முன்னாள் வட கொரிய தலைவருமான கிம் ஜாங்-இல்லும் போலி பிரேசிலிய பாஸ்போட் வைத்திருந்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கிம் ஜாங்-உன் "ஜேசேஃப் பிவாக்" என்ற பெயரிலும், அவருடைய தந்தை "இஜாங் சோய்" என்ற பெயரிலும் போலி பிரேசிலிய பாஸ்போட்கள் பெறப்பட்டுள்ளன.

இது தொடர்பாக ராய்ட்ர்ஸ் செய்தி நிறுவனம் பெற்றுள்ள ஆவணத்தின் நகலில், இளைஞர் கிம் ஜாங்-உன் "ஜேசேஃப் பிவாக்" (ரிக்கார்டோ மற்றும் மார்சிலாவின் மகன்) என்ற பெயரிலும், அவருடைய தந்தை "இஜாங் சோய்" என்ற பெயரிலும் பாஸ்போட்கள் எடுத்துள்ளதாக தெரிய வருகிறது.

1996ஆம் ஆண்டு செக் குடியரசின் தலைநகர் பிராக்கிலுள்ள பிரேசிலிய தூதரகத்தால் வழங்கப்பட்ட இந்த ஆவணங்கள் உண்மையானவையாக தோன்றுகிறது என்று பிரேசிலிய பாதுகாப்பு வட்டாரம் ராய்ட்ர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருக்கிறது.

மேற்குலக நாடுகளில் பயணம் மேற்கொள்வதற்காக விசாவுக்கு விண்ணப்பிக்க இந்த ஆவணங்கள் பயன்படுத்தப்பட்டன என்று பிற பாதுகாப்பு வட்டாரங்கள் கூறியுள்ளன. ஆனால், அவ்வாறு விசாக்கள் வழங்கப்பட்டதா அல்லது பயன்படுத்தப்பட்டதா என்று உறுதி செய்ய முடியவில்லை.

கிம் ஜாங்-இல்லின் பிரேசிலிய பாஸ்போட் நகல்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, பிரேசிலிய பாஸ்போட்கள் கிம் கும்பத்தினரோடு தொடர்பு படுத்தப்படுவது இது முதல் முறையல்ல.

வட கொரியாவை ஆளும் குடும்பத்தினர் இந்தப் போலி ஆவணங்களை ஏன் வைத்திருந்தனர்? அதுவும் பிரேசில் ஆவணங்கள் எதற்காக பெறப்பட்டன?

இந்த விவகாரம் உண்மையா?

இந்த ஆவண நகல்கள் உறுதியான ஆதாரங்களாக இல்லாமல் போகலாம். ஆனால், பிரேசிலிய பாஸ்போட்கள் கிம் கும்பத்தினரோடு தொடர்பு படுத்தப்படுவது இது முதல் முறையல்ல.

1991ஆம் ஆண்டிலிருந்தே பிரேசிலிய ஆவணங்களை வைத்து கொண்டு டோக்கியோ டிஸ்னிலேண்டை பார்வையிட கிம் ஜாங்-உன்னின் சகோதரர் ஜாங் சோல் ஜப்பானில் பயணம் மேற்கொண்டு வந்துள்ளார் என்று அதிகாரிகள் கூறியதை மேற்கோள் காட்டி 2011 ஆம் ஆண்டு ஜப்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

ஜாங் உன்னின் மூத்த ஒன்றுவிட்ட சகோதரரான கிம் ஜாங் நாம், போலி டோமினிக்கன் பாஸ்போர்ட்டை கொண்டு ஜப்பானிற்கு செல்ல முயன்றபோது அவர் பிடிப்பட்டதை தொடர்ந்து, தனது தந்தை தன் மீது வைத்திருந்த நல்லெண்ணத்தை அவர் இழந்துவிட்டார்.

ஜப்பானின் டிஸ்னிலேண்டுக்கு செல்லும் வழியில்தான் போலி டோமினிக்கன் பாஸ்போட்டை பயன்படுத்தியதாகவும் தெரிகிறது.

கிம் குடும்பத்தினருக்கு போலியாக பாஸ்போட் பெறுவது என்பது பெரிதொரு பிரச்சனையாக இருக்கவில்லை என்று தோன்றுகிறது.

எதற்காக இந்தப் போலி பாஸ்போட்கள்

1990-களில் வட கொரியாவில் பனிப்போர் நடைபெற்று கொண்டிருந்தது. அதனுடைய முக்கிய ஆதரவாளராக இருந்த அப்போதைய சோவியத் யூனியன், இப்போது வரலாற்றின் ஒரு பகுதியாக இருக்கிறது.

கிம் ஜாங்-உன்னின் பிரேசிலிய பாஸ்போட் நகல்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, ஜாங்-உன்னின் மூத்த ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜாங்-நாம் ஜப்பானின் டிஸ்னிலேண்ட்க்கு செல்ல போலி டோமினிக்கன் பாஸ்போட்டை பயன்படுத்தியதாக தெரிகிறது

சர்வதேச அளவில் பில்லியன் கணக்கான டாலர்கள் வெளிநாட்டுக் கடனுடன், வட கொரியா பெரிதாக கண்டுகொள்ளப்படாத ஒரு நாடாக இருந்த நிலையில், உள்நாட்டில் பற்றாகுறையும், பஞ்சமும் நிலவியது.

பனிப்போருக்கு பிந்தைய கால இராஜதந்திர உலகில், வட கொரியிவின் நட்புறவு நாடுகள் மிகவும் குறைந்து, அதனுடைய பாஸ்போட் மிகவும் குறைந்த அளவே பயன்படுத்தப்படும் நிலை உருவானது.

எனவே, அப்போது வட கொரியாவின் தலைவராக பதவியேற்று 2 ஆண்டுகளே ஆகியிருந்த கிம் ஜாங்-இல், போலி பாஸ்போட்டை பயன்படுத்தி வெளிநாடுகளில் பயணம் மேற்கொள்வதை கருத்தில் கொண்டிருந்தார் என்பதை ஆச்சரியமானதாகவே பார்க்கிறார் பிரிட்டனின் பாதுகாப்பு ஆலோசனை நிறுவனமான 'சாதாம் ஹெவுஸின்' வட கொரிய நிபுணர் முனைவர் ஜான் நீல்சன்-ரைட்.

1970களில் கிம் கேயோங்குடன் கிம் இல் சங் (நடுவில்) மற்றும் கிம் ஜாங்-இல்

பட மூலாதாரம், NKLW

படக்குறிப்பு, 1970களில் கிம் கேயோங்குடன் கிம் இல் சங் (நடுவில்) மற்றும் கிம் ஜாங்-இல்

"அவர் ஏன் இதனை செய்ய வேண்டும்? ஆபத்தான காரியங்களை முன்னெடுப்பதற்கு தயங்கியவராகவே கிம் ஜாங்-இல் பார்க்கப்பட்டார். மாஸ்கோ மற்றும் பெய்ஜிங்கில் பல முறை அவர் பயணம் மேற்கொண்டுள்ளார். அந்தப் பயணங்களுக்கு எல்லாம் பாஸ்போட் தேவைப்படாமல் இருந்திருக்கலாம்" என்று முனைவர் நீல்சன்-ரைட் பிபிசியிடம் தெரிவித்திருக்கிறார்.

"எனவே, வட கொரியாவில் இருந்து தப்பி செல்லும் ஒரு வழியாக கொள்ள இதனை அவரும், அவருடைய மகனும் மேற்கொண்ட முயற்சியாக இருக்கலாம். இவ்வாறு தெரியவந்துள்ள புதிய தகவல், பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

வட கொரியாவில் நாம் நினைத்திருந்ததை விட குறைவான பாதுகாப்பு இருந்தது என்கிற உறுதியின்மையை இது சுட்டிக்காட்டுகிறது என்று அவர் கூறுகிறார்.

பிரேசிலிய பாஸ்போட் ஏன்? மோசடி செய்வோரின் விருப்பம் இது என்று சொல்வது உண்மையா?

பிரேசிலில் பல்வேறுபட்ட மக்கள் இனங்கள் காணப்படுவதால், இந்த கிரகத்திலுள்ள ஏறக்குறைய எல்லோருமே பிரேசிலை சேர்ந்தவர் என்று சொல்லி கொள்ள முடியும். எனவே, பிரேசிலிய பாஸ்போட்டுக்கும் பெரும் கிராக்கி நிலவுகிறது.

கிம் ஜாங்-இல் (நடுவில்)

பட மூலாதாரம், NKLW

படக்குறிப்பு, கிம் ஜாங்-இல் (நடுவில்)

2011ஆம் அண்டு ஒரு பிரேசிலிய அதிகாரி இத்தகைய கூற்றை அல்-ஜசீரா தொலைக்காட்சி செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.

இந்த கூற்று சரியானதே என்று தற்போது கூறுவதற்கு பெரிய அளவு தரவுகள் ஏதுமில்லை.

பிரேசிலின் பாஸ்போட் மிகவும் விலையுயர்ந்த பட்டியலில் இடம்பெறவில்லை என்று 2015ஆம் ஆண்டு 'வேக்கேட்டிவ்' என்கிற அமெரிக்க ஊடக மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிய வந்தது.

எனவே, இணையதள நிழலுலகில் பிரேசி்லிய போலி பாஸ்போட்டுகள் இருப்பது பெரும்பாலும் சாத்தியமே.

2006ஆம் ஆண்டு பாதுகாப்பு அம்சங்களை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு வரை, 1990களில், போலியாக உருவாக்கப்பட்ட அதிக பாஸ்போட்களில் பிரேசிலிய பாஸ்போட்கள் இருந்ததை அந்நாட்டு அரசே ஒப்புக் கொண்டுள்ளது.

மனைவியோடு கிம் ஜாங்-உன்

பட மூலாதாரம், AFP/KCNA

படக்குறிப்பு, மனைவியோடு கிம் ஜாங்-உன்

கிம் குடும்பத்தாரும் கிழக்காசிய தோற்றமுடைய பிரேசிலின் அதிக அளவிலான மக்கள்தொகையின் ஒரு பகுதியாக .ந"த பாஸ்போட்டை வைத்து எளிதாக கடந்து சென்றிருக்கலாம்.

இவ்வாறு அளிக்கப்பட்டிருக்கும் பிரேசிலிய பாஸ்போட் செக் குடியரசில் இருந்த பிரேசிலிய தூதரகத்தால் வழங்கப்பட்டுள்ளதும் ஆச்சரியமளிக்கிறது.

1950-53 வரை நடைபெற்ற பேரழிவு விளைவித்த கொரிய போரை தொடர்ந்து, வட கொரியாவின் தீவிர வளர்ச்சி மற்றும் மீள்கட்டமைப்புகளின் காலத்தில், வட கொயாவுக்கும், அப்போதைய செக்கோஸ்லாவியாவுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் ஒத்துழைப்பு தொடர்புகள் சட்டப்பூர்வமற்ற முறையிலேயே நடைபெற்றுள்ளன.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :