You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இனி ராணுவத்தில் பெண்கள்... செளதி அரசு முடிவு!
செளதி அரேபியாவில் மேற்கொள்ளப்பட்டுவரும் தொடர் சீர்திருத்த நடவடிக்கைகளின் ஒருபகுதியாக ராணுவத்தில் பெண்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இது ராணுவப் பணி, விருப்பம் இருக்கும் பெண்களுக்கு மட்டுமானது. அதாவது ராணுவத்தில் பெண்கள் பணிபுரிவது கட்டாயமக்கப்படவில்லை.
செளதி பிரஸ் ஏஜென்சி (SPA) வெளியிட்டுள்ள செய்திகளின்படி, பொது பாதுகாப்பு இயக்குநரகம், ராணுவத்திற்கான ஆட்சேர்ப்பு தொடர்பான அறிக்கையை ஞாயிற்றுக் கிழமையன்று வெளியிட்டது. அதன்படி, ரியாத், மக்கா, மதீனா, அல்-காசிம், ஆஸிர், அல் பஹா மற்றும் ஷர்க்கியா ஆகிய நகரங்களில் பணியமர்த்தப்படுவார்கள்.
வேலைக்கான தகுதி
செளதி அரசின் ராணுவத்தில் சேர்வதற்கான அடிப்படை தகுதி விண்ணப்பிப்பவர்கள் அந்த நாட்டின் குடிமகளாக இருக்கவேண்டும். கல்வித் தகுதியாக, உயர்நிலை பள்ளிப்படிப்பு அல்லது பட்டயப்படிப்பு படித்திருக்கவேண்டும். குறைந்தபட்ச வயது 25 என்றும் அதிகபட்ச வயது வரம்பு 35 என்றும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானால் வெளியிடப்பட்ட `விஷன் 2030’ என்ற சமூக மற்றும் பொருளாதார சீர்திருத்த திட்டத்தை செயல்படுத்தும் விதமாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்முயற்சிகளில் இதுவும் ஒன்று.
செளதி அரசின் ஷுரா கவுன்சிலின் ஒரு உறுப்பினரின் சார்பில் முன்மொழியப்பட்ட இந்த திட்டத்தின்படி, ராணுவப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் பெண்கள் ஆண்டில் மூன்று மாதங்கள் கட்டாயம் பணிபுரியவேண்டும். ஆனால், இதுதொடர்பாக கவுன்சிலிலும், சமூக ஊடகங்களிலும் வெவ்வேறு கருத்துகள் கூறப்படுகின்றன.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகள்
பெண்கள் வாகனங்கள் ஓட்டுவதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று கடந்த ஆண்டு செப்டம்பரில் செளதி அரேபியா மன்னர் சல்மான் ஆணை பிறப்பித்தார். 2018 ஜூன் மாதத்துக்குள் இது அமல்படுத்தப்படும் என்றும் அறி்விக்கப்பட்டது. அண்மையில் பெண்கள் கால்பந்து போட்டிகளை பார்க்க விளையாட்டு அரங்குகளுக்கு அனுமதிக்கப்பட்டனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில்தான் திரையரங்குகளுக்கு உரிமம் வழங்குவதாகவும் செளதி அரேபிய அரசு அறிவித்தது.
இது ஒரு திருப்புமுனையான அறிவிப்பு என்று கூறிய செளதி கலாசார அமைச்சர் அவாத் அலாவத், "திரையரங்குகளைத் திறப்பது பொருளாதார வளர்ச்சிக்கும் விரிவாக்கத்துக்கும் வழிவகுக்கும். விரிவான கலாசார துறையை மேம்படுத்துவதன் மூலம் புதிய வேலை மற்றும் பயிற்சி வாய்ப்புக்களை உருவாக்க வழிவகுக்கும். மேலும், செளதி ராஜியத்தின் கேளிக்கை வாய்ப்புக்களையும் விரிவாக்கச் செய்யும்" என்று கூறினார்.
சௌதி அரேபியாவின் அரச குடும்பம் மற்றும் மத அமைப்பு சன்னி இஸ்லாத்தின் ஒரு கடினமான வடிவமான வஹாபிசத்தையும் தீவிரமாகக் கடைபிடிக்கின்றன. இந்த இஸ்லாமிய சட்டங்களின்படி, பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
செளதி அரேபியாவில் பெண்கள் தனியாக பயணிக்க அனுமதி கிடையாது. பெண்களுடன் ஒரு குடும்ப உறுப்பினர் செல்லவேண்டும். அந்நாட்டில் உள்ள பெரும்பாலான உணவகங்கள் மற்றும் கஃபேக்களில், ஆடவர்களுக்கான பிரிவு ஒன்று, குடும்பத்தாரோடு வருபவர்களுக்கு ஒன்று என இரண்டு பிரிவுகள் உள்ளன.
கணவனுடன் அல்லது குடும்பத்துடன் வரும் பெண்களே உணவகங்களில் அனுமதிக்கப்படுவார்கள்.
இதர செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :