உலகப் பார்வை: சிரியாவில் 30 நாள் போர் நிறுத்தம்
கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை இந்த #உலகப்_பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம்.
சிரியாவில் 30 நாள் போர் நிறுத்தம்

பட மூலாதாரம், Reuters
தொடர்ச்சியாக போர் நடைபெற்றுவரும் சிரியாவில் உதவிப் பொருட்கள் வழங்கவும் மருத்துவ ரீதியான தேவை உடையவர்களை வெளியேற்றவும் கோரிக்கை விடுக்கப்பட்ட 30 நாள் போர் நிறுத்த அறிவிப்பை ஐ.நா பாதுகாப்பு அவை ஏகமனதாக ஏற்றுக்கொண்டுள்ளது.
ஆனால், மிகப் பெரிய ஜிகாதி குழுக்களும் அவர்களின் கூட்டாளிகளும் இந்த தற்காலிக போர் நிறுத்தத்தின் கீழ் வரவில்லை என்பதால் இது ஏற்படுத்த கூடிய தாக்கம் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.

லாபத்தை கொடுத்த வரி சீர்திருத்தம்

பட மூலாதாரம், Reuters
அமெரிக்க கோடீஸ்வரரான வாரன் பப்ஃபெட், அதிபர் டொனால்டு டிரம்ப்பின் சமீபத்திய வரி சீர்திருத்தத்தின் காரணமாக தனது குழுமம் 29 பில்லியன் டாலர்கள் அதிக லாபத்தை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பெரு நிறுவனங்களுக்கான வரியை அமெரிக்க அரசாங்கம் கடந்த டிசம்பர் மாதம் 35 சதவீதத்திலிருந்து 21 சதவீதமாக குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நாடு கடத்தப்பட்ட போதை மருந்து கடத்தல்காரர்

பட மூலாதாரம், AFP
கடந்த ஒரு தசாப்த காலத்திற்கும் மேலாக 250 டன்னிற்கும் அதிகமான அளவு போதை மருந்துகளை கடத்தியதாக குற்றம் சாட்டப்படும் நபர் ஒருவர் கொலம்பியாவிலிருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
ஈக்குவேடாரை சேர்ந்த வாஷிங்டன் பிராடோ அல்வா என்ற அந்த நபர் அமெரிக்கா முழுவதும் போதை மருந்து செயற்பாடுகளை மேற்கொண்டதாக வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நீளும் புறக்கணிப்பு பட்டியல்

பட மூலாதாரம், Reuters
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து அந்நாட்டின் தேசிய துப்பாக்கி சங்கத்தினுடனான தொடர்பை துண்டித்து வரும் நிறுவனங்களின் பட்டியலில் அமெரிக்காவின் பிரதான விமான நிறுவனங்களான யுனைடெட் மற்றும் டெல்டா ஏர்லைன்ஸ் ஆகியவை இணைந்துள்ளன.
அந்த இரண்டு விமான நிறுவனங்களும் தேசிய துப்பாக்கி சங்கத்தின் உறுப்பினர்களுக்கு வழங்கி வந்த சலுகைகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












