You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உலகப் பார்வை: "பூமியிலுள்ள நரகத்தை" முடிவுக்கு கொண்டு வர ஐ.நா., வேண்டுகோள்
கடந்த சில மணிநேரங்களில் உலக அளவில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் செய்திகளை தொகுத்து வழங்குகின்றோம்.
சிரியா: "பூமியிலுள்ள நரகத்தை" முடிவுக்கு கொண்டு வர ஐ.நா., வேண்டுகோள்
சிரியாவில் கூட்டா பகுதியிலுள்ள கிளர்ச்சியாளர்களின் குடியிருப்பு பகுதியை "பூமியிலுள்ள நரகம்" என்று வர்ணித்து, அங்கு நடைபெற்று வருகின்ற மோதலை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மாமன்றத்தின் பொது செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
"கிழக்கு கூட்டா பகுதியில் சண்டை முடியும் என்று காத்திருக்க முடியாது என நான் நம்புகிறேன்" என்று அன்றோணியோ குட்டிரஸ் புதன்கிழமை நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு பேரவையின் கூட்டத்தில் தெரிவித்திருக்கிறார்.
சமீப நாட்களாக ரஷ்யாவின் வான்வழி தாக்குதலின் ஆதரவோடு, சிரியா அரசு படைப்பிரிவுகள் கிழக்கு கூட்டா பகுதி கடும் தாக்குதலை எதிர்கொண்டு வருகிறது.
சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸின் அருகிலுள்ள கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் கடைசி முக்கிய பகுதி இதுவாகும்.
அமெரிக்கா: செல்வாக்கு மிக்க மறைப்பரப்பாளர் பில்லி கிரஹாம் 99வது வயதில் மரணம்
20ஆம் நூற்றாண்டின் மிகவும் செல்வாக்கு மிக்க அமெரிக்க மத போதகர் பில்லி கிரஹாம் மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 99.
வட கரோலினாவிலுள்ள மோன்டிரிட்டில் அமைந்துள்ள அவருடைய வீட்டில் அவர் காலமானார்.
60 ஆண்டுகள் மறைப்பரப்பாளராக செயல்பட்டுள்ள இவர், உலக நாடுகளிலுள்ள பல மில்லியன் மக்களுக்கு போதித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இவரை "மிக பெரிய மற்றும் சிறப்பு மனிதர்" என்று புகழ்ந்துள்ளார்.
வெனிசுவேலா: எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ள நிலையில், "மெகா-அதிபர் தேர்தலை" விரும்பும் மதுரோ
ஏப்ரலில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள அதிபர் தேர்தலை எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ள நிலையில், "மெகா-அதிபர் தேர்தல்" ஒன்றை நடத்துவதற்கு வெனிசுவேலா அதிபர் நிக்கோலாஸ் மதுரோ முன்மொழிந்துள்ளார்.
"ஜனநாயக மறுசீரமைப்பு" வழங்கும் வகையில் சட்டமன்ற, மாநில மற்றும் நகராட்சி வாக்குகளை சேர்க்க விரும்புவதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
இந்த அதிபர் தேர்தல் "மோசடி மற்றும் சட்டவிரோதமானது" என்று எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன.
வெனிசுவேலா நீண்டகாலமாக ஓர் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது.
தவறான நடத்தை காரணமாக ஃபோர்டு நிறுவன செயலதிகாரி பதவி விலகல்
தவறான நடத்தை தொடர்பான விசாரணைகளை தொடர்ந்து ஃபோர்டு நிறுவனத்தின் அமெரிக்க தலைவர் உடனடியாக பதவி விலகியுள்ளார்.
ராஜ் நாயரின் நடத்தை "நிறுவனத்தின் நடத்தை நெறிமுறைக்கு பொருந்திய வகையில் அமையவில்லை" என்று இந்த கார் உற்பத்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த விசாரணை ஏன் தொடங்கப்பட்டது என்றோ, அதனால் என்ன வெளியாகியது என்றோ ஃபோர்டு நிறுவனம் வெளியிடவில்லை.
குறிப்பிட்ட நடத்தைக்காக தான் மிகவும் வருந்துவதாக நாயர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
நைஜீரியா: பள்ளி தாக்குதலில் காணாமல்போன சில சிறுமிகள் மீட்பு
நைஜீரியாவின் வட பகுதியில் தங்கி படிக்கும் பள்ளி ஒன்றில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பின்னர் காணாமல் போன மாணவிகள் சிலர் ராணுவத்தால் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டாப்ச்சி நகரில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலின்போது, மாணவியரும், ஆசிரியைகளும் புதர்களில் மறைவதற்காக தப்பி சென்ற பின்னர், சுமார் 100 குழந்தைகள் காணாமல்போனதாக நம்பப்படுகிறது,
இந்த மாணவியர் டிரக்குகளில் ஏற்றி செல்லப்பட்டதை கண்டதாக பெற்றோர் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.
சிபோக் நகரிலுள்ள ஒரு பள்ளியில் இருந்து 270-க்கு மேலான மாணவியர் போகோ ஹராம் குழுவினரால் கடத்தப்பட்ட 4 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.
பிற செய்திகள்
- துப்பாக்கிச் சூடு சம்பவங்களை தவிர்க்க ஆசிரியர்களுக்கு துப்பாக்கி: டிரம்ப்
- “மக்களுக்காக வீதியில் இறங்கி கமல் போராடியுள்ளாரா?”
- விந்தணுக்கள் அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?
- மய்யம் என்ற பெயர் ஏன்? - கமல் ஹாசன் விளக்கம்
- 70 மாடி மர கட்டடம்: ஜப்பானின் புதிய திட்டம்
- தொடங்கியது கமலின் அரசியல் பயணம் (புகைப்பட தொகுப்பு)
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்