You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாலத்தீன பகுதிகள் மீது இஸ்ரேல் தாக்குதல்: 4 பேர் பலி
கடந்த சனிக்கிழமையன்று இஸ்ரேல் - பாலத்தீனின் காசா எல்லை அருகில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில், 4 இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் படுகாயமடைந்ததைத் தொடர்ந்து பாலத்தீன பகுதிகளைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் இரவு நேரத்தில் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஞாயிறன்று காசா பகுதியில் இஸ்ரேல் நிகழ்த்திய கவசவண்டித் தாக்குதலில் இரு பாலத்தீனர்கள் கொல்லப்பட்டனர்.
நேற்று, சனிக்கிழமை, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இரு பாலத்தீன பதின் வயதினர் கொல்லப்பட்டனர். எல்லையை நோக்கி சந்தேகத்திற்கு இடமான வகையில் அவர்கள் வந்ததாக இஸ்ரேல் ராணுவம் கூறியிருந்தது.
ஹமாஸ் அமைப்புடன் தொடர்புடைய பல இடங்களை வான் தாக்குதல்கள் மூலம் அழித்துள்ளதாக இஸ்ரேல் விமானப் படை கூறியுள்ளது.
ஹமாஸின் ஓர் ஆயுதத் தயாரிப்பு மையம், தீவிரவாதக் குழுவினரால் தோண்டப்பட்ட சுரங்கப் பாதை உள்பட 18 இடங்களை சனிக்கிழமை இரவு முதல் அழித்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஹமாஸின் இரு பயிற்சி மையங்கள் மற்றும் இன்னொரு சிறிய குழுவின் பயிற்சி மையம் ஆகியன தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக பாலத்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேலின் ஜெட் போர் விமானகளுக்கு எதிராக விமானங்களை தாக்கும் ஏவுகணைகளை செலுத்தியதாக ஹமாஸ் அமைப்பின் ராணுவப் பிரிவான இஸ்ஸதைன் அல்-கசாம் படையினர் கூறியுள்ளனர்.
காசாவில் இருந்து ஏவப்பட்ட ராக்கெட் ஒன்று சனிக்கிழமையன்று ஒரு வீட்டின் அருகில் விழுந்ததாக இஸ்ரேல் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எனினும், அதில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.
கடந்த 2008ஆம் ஆண்டு முதல் இஸ்ரேலுடன் மூன்று முறை போரிட்டுள்ள ஹமாஸ் இயக்கமே, அப்பகுதியில் நடத்தப்படும் தாக்குதல்களுக்கு காரணம் என்று இஸ்ரேல் கூறி வருகிறது.
சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்த பின் இஸ்ரேல்-பாலத்தீன எல்லையில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பிரிக்கப்படாத ஜெருசலேம் நகரைத் தங்கள் தலைநகராக இஸ்ரேல் கருதுகிறது. 1967இல் நடைபெற்ற மத்திய கிழக்குப் போருக்கு பின் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட அந்நகரின் கிழக்கு பகுதி எதிர்காலத்தில் அமையவுள்ள சுதந்திர பாலத்தீன அரசின் தலைநகராக இருக்க வேண்டும் என்று பாலத்தீன தரப்பு விரும்புகிறது.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்