You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இரான்: விமானம் மலையில் மோதி 66 பேர் பலி
60 பயணிகள் மற்றும் ஆறு விமானப் பணியாளர்களோடு சென்ற பயணிகள் விமானம் ஒன்று இரானில் உள்ள மலையில் மோதி நொறுங்கியதில், அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்ததாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இரான் தலைநகர் தெஹரானில் இருந்து யசூஜ் நகருக்கு இந்த விமானம் பறந்துகொண்டிருந்தபோது விபத்து நடந்திருக்கிறது.
இஸ்ஃபஹான் மாகாணத்தில் செமிரொம் நகரத்துக்கு அருகே உள்ள சக்ரோஸ் மலைகளில் இந்த விமானம் மோதியது.
"அனைத்து அவசர காலப் படைகளும் தயாராக இருப்பதாக" அவசர சேவைகளின் செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
மோசமான காலநிலை காரணமாக சம்பவ இடத்துக்கு மீட்பு ஹெலிகாப்டர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த விமானம் ஏசெமன் விமான நிறுவனத்தின் ATR 72-500 விமானம் என நம்பப்படுகிறது.
விமானத்தில் 60 பயணிகளோடு, இரண்டு பாதுகாவலர்கள், இரண்டு விமான ஊழியர்கள், விமான ஓட்டுனர் மற்றும் ஒரு சக விமான ஓட்டுனர் இருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மோசமான வானிலை மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்படுவதற்கு காரணமாக அமைந்ததால் விபத்து நடந்த இடத்திற்கு அவசரகால குழுக்கள் ஹெலிகாப்டர்களில் செல்வதற்கு பதிலாக சாலை வழியாக செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது என்று விமான நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளரான குளிவந்த் கூறியுள்ளார்.
பழைய விமானங்கள்
சமீபத்திய ஆண்டுகளில் இரானில் பல விமான விபத்துக்கள் நடைபெற்றுள்ளது. அந்நாட்டிலுள்ள பல விமானங்கள் நீண்ட காலத்திற்கு முன்னர் வாங்கப்பட்டவையாக உள்ளது.
இரானின் அணுசக்தித் திட்டத்தை தடுத்து நிறுத்தும் வகையில் அந்நாடு மீது விதிக்கப்பட்டுள்ள சர்வதேச தடைகளின் காரணமாக இரான் தனது விமானங்களை சரிவர பராமரிப்பதற்கு போராடி வருகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்