You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தென்னாப்பிரிக்கா: புதிய அதிபரானார் சிரில் ராமபோசா
ஊழல் குற்றச்சாட்டுகளால் கடும் அழுத்தத்துக்கு ஆளானபின் தென்னாப்பிரிக்க அதிபர் பதவியில் இருந்து ஜேக்கப் ஜூமா விலக்கியதைத் தொடர்ந்து புதிய அதிபராக துணை அதிபர் பதவியில் இருந்த சிரில் ராமபோசா தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
தென்னாப்பிரிக்க நாடாளுமன்றத்தில் அதிபர் பதவிக்கு சிரில் ராமபோசாவின் பெயர் மட்டுமே முன்மொழியப்பட்டது. 'தேசிய அவை' என்று அழைக்கப்படும் அந்நாட்டு நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள் அவர் தேர்வு செய்யப்பட்டதை பாட்டுப் பாடி வரவேற்றனர்.
பதவி விலக்காவிட்டால் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மூலம் பதவி நீக்கம் செய்யப்படுவார் என்று ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி ஜூமாவிடம் கூறியிருந்தது. அதைத் தொடர்ந்து அவர் பதவி விலகினார். எனினும், கட்சியின் முடிவில் தனக்கு உடன்பாடில்லை என்று அவர் கூறியிருந்தார்.
எதிர்க்கட்சிகளில் ஒன்றான பொருளாதார சுதந்திரத்துக்கான போராளிகள் எனும் கட்சியின் உறுப்பினர்கள், ஆளும் கட்சி தங்களுக்குள்ளேயே புதிய அதிபரைத் தேர்வு செய்யாமல் புதிதாகத் தேர்தல் நடத்தப்பட்டு அதிபர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று கூறி வெளிநடப்பு செய்தனர்.
யார் இந்த சிரில் ராமபோசா?
- வெள்ளை இனவாத அரசுக்கு எதிராகப் போராடியதாக 1974 முதல் 1976 வரை ராமபோசா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
- நெல்சன் மண்டேலாவை 1990இல் சிறையில் இருந்து விடுதலை செய்வதற்கு ஆவண செய்த குழுவின் தலைவராகச் செயல்பட்டார்.
- நெல்சன் மண்டேலாவுக்கு பின் இவர்தான் அதிபராகத் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர் பார்க்கப்பட்டது. எனினும் தாபோ உம்பெக்கி அதிபரானார்.
- கடந்த 1997இல் முழு நேரத்தையும் தொழிலில் ஈடுபட செலவிடத் தொடங்கிய அவர் தென்னாப்பிரிக்காவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரானார்.
- 2012ஆம் ஆண்டு மரிக்கானா படுகொலைகள் தொடங்கிய லோன்மின் சுரங்க நிறுவனத்தின் மேலாண்மைக் குழுவில் அங்கம் வகித்தார்.
- ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் தலைவராக 2017இல் தேர்வு செய்யப்பட்டார்.
புதிய அதிபருக்கு என்ன சவால்கள்?
கடுமையாக சரிந்துள்ள பொருளாதாரத்தை சீரமைப்பதே தனது முதல் முன்னுரிமை என்று ராமபோசா கூறியுள்ளார். தென்னாப்பிரிக்காவில் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பின்மை 30%ஆக உள்ளது. இளைஞர்கள் மத்தியில் வேலைவாய்ப்பின்மை 40%ஆக உள்ளது.
குறைவான வளர்ச்சி விகிதம் மற்றும் குறைந்து வரும் முதலீட்டாளர்களின் நம்பிக்கை ஆகியன பொருளாதார தர மதிப்பீட்டு நிறுவனங்கள் தென்னாப்பிரிக்காவின் மதிப்பீட்டை குறைப்பதற்கான காரணிகளாக அமைந்தன.
ஜூமா பதவி விலக்கலுக்குப் பின் தென்னாப்பிரிக்க நாணயமான 'ராண்ட்' ஓர் அமெரிக்க டாலருக்கு 11.657 என்ற அளவில் வலுவடைந்தது. இதுவே கடந்த மூன்று ஆண்டுகளில் அதன் அதிகபட்ச மதிப்பாகும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்