You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
புதுச்சேரியில் தெருவோர கடையில் டீ ஆற்றிய அமெரிக்க தூதர்
இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் புதுச்சேரியில் ஒரு தெருவோர டீ கடையில் டீ ஆற்றிய புகைப்படம் சமூக ஊடகங்களில் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.
63 வயதாகும் கென்னத் ஜஸ்டர் கடந்தாண்டு நவம்பர் மாதம் இந்தியாவின் அமெரிக்க தூதராக நியமிக்கப்பட்டார்.
டொனால்ட் டிரம்ப் கடந்த ஆண்டு அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதையடுத்து சர்வதேச பொருளாதார விவகாரங்களுக்கான அதிபரின் உதவியாளர் பொறுப்பில் கென்னத் ஜஸ்டர் நியமிக்கப்பட்டிருந்தார்.
கடந்த 12 ஆம் தேதி சென்னை வந்த ஜஸ்டர், மெரினா கடற்கரைக்கு அருகே இருக்கும் விவேகானந்தர் இல்லத்தை பார்வையிட்டார்.
தொடர்ந்து, தலைமை செயலகம் சென்ற அவர் மரியாதை நிமித்தமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினார். அதன்பிறகு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தையும் சந்தித்துள்ளார்.
சுற்றுலா தளமான மாமல்லபுரம் சென்ற அவர் கடற்கரை கோயிலை பார்வையிட்டுள்ளார்.
''கடற்கரை கோயிலின் வரலாறு மற்றும் கட்டுமானம் என்னை ஈர்க்கிறது '' என்று ட்விட்டரில் சிலாகித்துள்ளார் கென்னத் ஜஸ்டர்.
மாமல்லபுரத்தை தொடர்ந்து புதுச்சேரிக்கு பயணப்பட்ட அவர் ஃபிரஞ்சு நாகரீகத்தின் மிச்சங்களை கொண்டிருக்கும் வைட் டவுன் வீதிகளை சுற்றிப்பார்த்தார். அதன்பிறகு, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மற்றும் முதல்வர் நாரயணசாமியையும் நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
தொடர்ந்து நகரை சுற்றிப்பார்த்த கென்னத், தெருவோர கடையில் டீ ஆற்றும் முறையை பார்த்து அதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்துள்ளார்.
ரயில் நிலையம் அருகே இருந்த டீக்கடைக்கு அவரை அதிகாரிகள் அழைத்து சென்றனர். அங்கு டீ ஆற்றப்படும் முறையை கண்டு வியந்த கென்னத் ஜஸ்டர் தானும் அதை செய்துபார்க்க வேண்டும் என்று கூறி டீ ஆற்றியுள்ளார்.
நேர்த்தியாக டக் இன் செய்யப்பட்ட சட்டை, கழுத்தில் டை, கையில் டீ பாத்திரங்களுடன் அமெரிக்கத் தூதர் கென்னத் ஜஸ்டரின் டீ ஆற்றும் புகைப்படம் சமூக ஊடகங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :