தங்க பூமியில் பசி, ஊட்டச்சத்து குறைப்பாடால் மடியும் குழந்தைகள்

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

தங்க பூமியின் பெருஞ்சோகம்

இந்தோனீசியாவின் பப்புவா மாகாணத்தில், பசி, ஊட்டச்சத்து குறைபாடு, தட்டமை ஆகியவற்றால் கடந்த சில தினங்களில் மட்டும் 72 பேர் இறந்துள்ளனர். இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள். இந்தப் பகுதி தங்க பூமி என்று அறியப்படுகிறது. உலகின் மிகப்பெரிய தங்க சுரங்கம் இங்குதான் உள்ளது.

வேட்டைக்காரரை கொன்ற சிங்கம்

தென் ஆஃப்ரிக்காவில் உள்ள க்ரூகர் தேசிய பூங்காவில் சந்தேகத்திற்குரிய வேட்டைக்காரரை சிங்கங்கள் கொன்று தின்றன என்று காவல்துறையினர் கூறுகிறார்கள். வேட்டையில் ஈடுப்பட்டு இருந்த போது அவர் சிங்கங்களால் தாக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறும் காவல் துறையினர், மரணித்தவரின் உடலின் எச்சங்கள் பூங்காவில் சிதறி கிடந்தன என்றனர்.

ஒபாமாவின் வரைப்படம்

அமெரிக்கா வாஷிங்டனில் உள்ள ஸ்மித்சோனியன் தேசிய ஓவிய காட்சியகத்தில் அமெரிக்க முன்னாள் அதிபர் ஓபாமா மற்றும் அவரது மனைவி மிக்கேல் ஒபாமா ஆகியோரது ஓவியங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒபாமா, ஆஃப்ரிக்க - அமெரிக்கர்களை வரைவதில் முதிர்ச்சியானவர் என்று அறியப்படும் வில்லே வரைந்துள்ள என் ஓவியம், மிகவும் கூர்மையாகவும் அழகாகவும் உள்ளது என்றார்.

நிதி இல்லை

சர்வதேச விண்வெளி மையத்தை தனியார்மயப்படுத்தும் நோக்கத்தில், அதற்கு அமெரிக்கா அளித்து வரும் நிதியை 2015 ஆம் ஆண்டுக்குள் நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விரும்புவதாக செய்தி வெளியாகி உள்ளது. அதே நேரம் நாசாவுக்கு அளித்துவரும் நிதியை அடுத்த ஆண்டு 3 சதவீதம் உயர்த்தவும் அவர் விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிரம்ப் மருமகள் மருத்துவமனையில்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மருமகள் வனிசா டிரம்ப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டிரம்பின் மூத்த மகனான ஜூனியர் டிரம்புக்கு ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தை திறந்து பார்த்தத்தில் அதில் வெள்ளை பவுடர் இருந்தது. உடனே தீயணைப்புத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. மான்ஹாட்டனில் உள்ள வீட்டிற்கு தீயணைப்புத்துறையினர் வந்தனர். பின், அந்த வீட்டில் இருந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: