You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஊழல் வழக்கில் வங்கதேச முன்னாள் பிரதமர் காலிதா ஜியாவுக்கு 5 ஆண்டுகள் சிறை
ஊழல் குற்றச்சாட்டில் வங்கதேச எதிர்க்கட்சி தலைவர் காலிதா ஜியாவுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
காலிதா ஜியாவின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களை காவல்துறையினர் கண்ணீர்ப் புகையைப் பயன்படுத்தி கலைந்து போகச் செய்த பின்னர் டாக்காவிலுள்ள ஒரு நீதிமன்றத்தில் இந்த தீர்ப்பு வாசிக்கப்பட்டது.
குழந்தைகளுக்கான அறக்கட்டளை ஒன்றுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட சர்வதேச நிதி உதவியை தவறாக பயன்படுத்தியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை 72 வயதாகும் காலிதா ஜியா மறுத்துள்ளார்.
இந்த வழக்கில் சிறை தண்டனை பெற்றிருப்பதன் காரணமாக, இந்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் இவர் போட்டியிட முடியாமல் போகும்.
தன் மீதான குற்றச்சாட்டுக்கள் அரசியல் ரீதியாகப் புனையப்பட்டவை என்று அவர் கூறியுள்ளார்.
பல தசாப்தங்களாக பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு போட்டியாளராக விளங்கும் காலிதா ஜியாவுக்கு எதிரான டஜன் கணக்கான வழக்குகளில் இது ஒன்றாகும்.
ஜியாவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நீதிமன்றம் உறுதி செய்திருப்பதாலும், அவருடைய சமூக மற்றும் உடல் ரீதியான தகுநிலையை கவனத்தில் கொண்டும், அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்குவதாக நீதிபதி அறிவித்திருக்கிறார்.
தீர்ப்பு அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் வெள்ளை சேலை அணிந்திருந்த எதிர்க்கட்சி தலைவர் காலிதா ஜியா சிறைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பிடி நியூஸ்24 தகவல் வெளியிட்டுள்ளது.
"நான் திரும்பி வருவேன். கவலைப்பட வேண்டாம். தைரியமாக இருங்கள்" என்று அழுது கொண்டிருந்த தன்னுடைய உறவினரை ஜியா தேற்றியதாக 'டெய்லி ஸ்டார்' செய்தி வெளியிட்டுள்ளது.
ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் லண்டனில் இருப்பதால், அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில், அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதே சிறை தண்டணை ஜியாவின் உதவியாளர்கள் 4 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக, காலிதா ஜியாவை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லும் காருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்புத் தடுப்புகளை எல்லாம் மீறிய எதிர்க்கட்சி ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படைப்பரிவுகளுக்கும் இடையில் மோதல்கள் நடைபெற்றிருந்தன.
நீதிமன்றத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் நடைபெற்ற வன்முறையில் பல காவல்துறை அதிகாரிகள் காயமடைந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
காலிதா ஜியா பிரதமராக இருந்தபோது உருவாக்கப்பட்ட அனாதைகளுக்கான அறக்கட்டளைக்கு சொந்தமான 2 லட்சத்து 52 ஆயிரம் டாலர் நிதி தொடர்பாக ஜியா மீது இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த குற்றச்சாட்டுகள் காரணமாக 2014ம் ஆண்டு தேர்தல்களை அவர் புறக்கணித்ததால் பரந்த அளவிலான போராட்டங்கள் வெடித்தன.
வியாழக்கிழமை வழங்கப்பட்ட தீர்ப்புக்காக தலைநகர் டாக்காவிலும், பிற நகரங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. பல கடைகளும், பள்ளிகளும் மூடப்பட்டிருந்தன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தீர்ப்புக்கு பின்னர் நூற்றுக்காண்கான ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக ஜியாவின் வங்கதேச தேசிய கட்சி தெரிவித்திருக்கிறது.
பிற செய்திகள்
- தென் கொரிய ஒலிம்பிக்கிற்கு முன்னதாக வட கொரிய ராணுவ அணிவகுப்பு
- முதலில் தமிழகத்தில் சிஸ்டத்தை சரிசெய்ய வேண்டும்: ரஜினிகாந்த்
- சிறுமிகளின் பெண் உறுப்பு சிதைப்பு: இந்தியாவின் கசப்பான உண்மைகள்
- ரஜினியுடன் இணைந்து தேர்தலைச் சந்திப்பது தேவையா?: கமல் ஹாசன்
- வென்றதா தர்மயுத்தம்? - என்ன நினைக்கிறார்கள் மக்கள்
- கிரிக்கெட்: இந்தியா 'ஹாட்ரிக்' வெற்றி - தொடருமா சாதனை பயணம்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்