You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
10 ஆயிரம் மில்லியன் லிட்டர் நீரை தானம் தந்து கேப் டவுன் மக்களுக்கு உதவிய விவசாயிகள்
'டே ஜீரோ' எனப்படும் தண்ணீர் முற்றிலுமாக காலியாகப் போகும் நாள் தென்னாஃப்ரிக்காவின் கேப் டவுனில் ஏப்ரல் மாதம் வரவிருந்த நிலையில், தற்போது அந்நாள் மே மாதம் வரும் என்று நகர நிர்வாகம் அறிவித்துள்ளது.
தென்னாஃப்ரிக்காவின் கேப் டவுனில் தண்ணீர் முற்றிலும் காலியாகப்போகும் நாள் நெருங்குகிறது என்றும், இந்நாளில் உலகிலேயே தண்ணீர் தீர்ந்துபோகும் முதல் முக்கிய நகரமாக கேப் டவுன் மாறும் என்றும் கூறப்பட்டது.
டே ஜீரோ நாளில் சுமார் 40 லட்சம் பேர் வாழும் கேப் டவுன் நகரில் தண்ணீர் விநியோகம் முற்றிலுமாக நிறுத்தப்படும்.
இந்நிலைக்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.
கடந்த மூன்று ஆண்டுகளாக கேப் டவுனில் போதிய மழை பொழிவு இல்லாதததாலும், எல் நினோ போன்ற பருவநிலை மாற்றம் காரணமாகவும் அங்கு கடும் வறட்சி நிலவுகிறது.
அணை நீர்மட்டங்கள் மோசமாகக் குறைந்ததையடுத்து மிகக் குறைந்த அளவிலான நீரை நகர நிர்வாகம் பொதுமக்களுக்கு விநியோகித்து வந்தது.
இச்சூழலில், கடந்த வாரம் வரை கேப் டவுனின் 'ஜீரோ டே' ஏப்ரல் 12 ஆம் தேதி என்று கணிக்கப்பட்டிருந்தது.
இதற்காக நகரத்தில் வாழும் பொதுமக்கள் தண்ணீர் பயன்பாட்டு அளவை குறைத்துகொள்ள வேண்டும் என்று கேப் டவுன் நிர்வாகம் கோரிக்கை விடுத்திருந்தது.
நகர மக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது எப்படி என்பது குறித்தும் வழிமுறைகளை கேட் டவுன் நிர்வாகம் வழங்கியிருந்தது.
கேப் டவுன் நகரவாசிகள் தினசரி 50 லிட்டருக்கும் குறைவான நீரைப் பயன்படுத்தினால் 'ஜீரோ டே' பிரச்சனையை முறியடித்துவிடலாம் என்று கூறப்பட்டது. இந்நிலையில், தண்ணீர் முற்றிலும் தீர்ந்துபோகும் அந்த 'ஜீரோ டே' ஏப்ரல் 29 ஆம் தேதிக்கு பதிலாக மே 18 ஆம் தேதிக்கு தள்ளிப் போயிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
குறைந்த தண்ணீர் பயன்பாடு
கேப் டவுன் நகருக்கு தண்ணீர் விநியோகித்து வரும் அணைகளின் நீர்மட்டம் தற்போது 25.5% நீரை கொண்டுள்ளன. விவசாயத்துக்குப் பயன்படுத்தப்படும் நீர் பெருமளவு குறைந்துவிட்டதும், ஒருவருக்கு தினசரி 50 லிட்டர் நீர் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டதை ஒட்டி பொதுமக்கள் தங்களின் தண்ணீர் தேவையை சுருக்கி கொண்டதும் இந்த ஜீரோ டே தள்ளிப்போயிருப்பதற்கான சில காரணங்கள் என்று கருதப்படுகிறது.
தண்ணீர் தானம்
கேப் டவுன் நகரத்தின் தற்போதைய சூழ்நிலையை பார்த்து கிரோன்லாண்ட் நீர்ப்பாசன சங்கத்தை சேர்ந்த விவசாயிகள் சுமார் 10 ஆயிரம் மில்லியன் லிட்டர் தண்ணீரை கேப் டவுன் நகர மக்களுக்கு தானமாக வழங்கியுள்ளார். இந்த நீர் கேப் டவுன் வாசிகளுக்கு சுமார் 20 நாட்களுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :