You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
புதைந்து கிடந்த இரண்டாம் உலகப் போர் வெடிகுண்டை செயலிழக்கச் செய்தது ஹாங்காங்
ஹாங்காங்கில் கட்டுமானப் பணிகள் நடைபெற்ற ஓர் இடத்தில் 450 கிலோ எடையுள்ள வெடிகுண்டு ஒன்றை நிபுணர்கள் செயலிழக்கச் செய்தனர். அந்த வெடிகுண்டு இரண்டாம் உலகப்போரின்போது பயன்படுத்தப்பட்டது.
அமெரிக்காவால் தயாரிக்கப்பட்ட ஏ.என்-எம்65 வெடிகுண்டு ஜப்பான் ஆக்கிரமிப்பில் இருந்த ஹாங்காங்கில் இரண்டாம் உலகப்போர் சமயத்தில் வீசப்பட்டது.
இது ஒரே வாரத்தில் ஹாங்காங்கில் கண்டுபிடிக்கப்படும் இரண்டாவது வெடிகுண்டாகும். கடந்த ஜனவரி 28, சனிக்கிழமையன்று, இதே வகை குண்டு ஒன்று அப்பகுதியில் செயலிழப்பு செய்யப்பட்டது.
பிரிட்டிஷ் காலனியாக இருந்த ஹாங்காங் 1941 முதல் 1945 வரை ஜப்பான் ஆக்கிரமிப்பின்கீழ் இருந்தது.
கடந்த வாரம் புதன் கிழமையன்று ஒரு குண்டு பூமிக்கடியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. வியாழக்கிழமை காலை, அந்த வெடிகுண்டை செயலிழக்க செய்தபோது விக்டோரியா துறைமுகத்தின் சரக்கு போக்குவரத்து நிறுத்திவைக்கப்பட்டது. அப்பகுதியில் இருந்த 4000க்கும் மேற்பட்ட மக்கள் அச்சமயத்தில் வெளியேற்றப்பட்டனர்.
அந்த வெடிகுண்டின் மேல்பகுதியில் இருந்த உலோகத்தை வெட்டி எடுத்த நிபுணர்கள், அதன் உள்ளிருந்த வெடிமருந்து அனைத்தையும் முதலில் தீயிட்டு எரித்தபின், அதை பளு தூக்கி மூலம் மண்ணுக்குள்ளிருந்து அகற்றினர்.
அந்த குண்டு மிகவும் சேதமடைந்த நிலையில் இருந்ததாகவும், அது மண்ணுக்குள் இருந்த நிலை கருவிகள் உள்ளே செல்வதற்கு ஏற்ற வகையில் இல்லை என்றும் வெடிபொருட்களை அகற்றும் அதிகாரி அலிக் மெக்விர்டர் 'சௌத் சைனா மார்னிங் போஸ்ட்' பத்திரிகையிடம் தெரிவித்தார்.
பல ஆண்டுகளுக்கு முன்பு கடல் பின்வாங்கும் முன்பு அந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட இடம் துறைமுகமாக இருந்தது என்று ஹாங்காங் வரலாற்று ஆய்வாளர் ஜேசன் வோர்டி ஏ.எஃப்.பி செய்தி முகமையிடம் கூறினார்.
"ஜப்பான் ஆக்கிரமிப்பின் கீழ் ஹாங்காங் இருந்தபோது அது கப்பல்களை பழுதுபார்க்கும் ஒரு முக்கிய இடமாக இருந்தது. அந்த இடத்தை அழித்தது ஜப்பானுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது," என்று அவர் கூறினார்.
இதற்கு முன்னரும் ஹாங்காங்கில் இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இதுவரை கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டுகளிலேயே அதிக எடை உடையது 2014இல் கண்டெடுக்கப்பட்டு செயலிழக்க வைக்கப்பட்ட 907 கிலோ எடையுள்ள குண்டாகும்.
பிற செய்திகள்:
- மேற்கு வங்கம்: ஜனசங்கம் செய்யாதது, கம்யூனிஸ்டுகள் செய்தது என்ன?
- ரஷ்யாவுக்கு எதிராக அணு குண்டு செய்யலாம்: அமெரிக்க ராணுவம் ஆலோசனை
- சேனிடரி நேப்கினுடன் புகைப்படம்: தமிழரின் சவாலை ஏற்ற பாலிவுட் பிரபலங்கள்
- ` திருமணத்துக்கு மறுத்தவனின் குழந்தையை நான் ஏன் வளர்க்கிறேன்?’ #HerChoice
- தடைகளை மீறி 200 மில்லியன் டாலர் சம்பாதித்த வடகொரியா: ஐ.நா. அறிக்கை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :