பாகிஸ்தான்: பத்திரிக்கையாளரை கடத்த முயற்சித்த மர்ம நபர்கள் : நடந்தது என்ன?

பட மூலாதாரம், Getty Images
இஸ்லாமாபாத்தில், WION செய்தி நிறுவனத்தின் தலைமை பத்திரிக்கையாளர் டாஹா சித்திக்கியை கடத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட, அவர் நூலிழையில் தப்பியுள்ளார்.
விமான நிலையத்திற்கு, டாஹா காரில் சென்று கொண்டிருந்த நேரத்தில் இச்சம்பவம் நிகழ்ந்தது.
நாட்டின் சக்தி வாய்ந்த ராணுவத்தை விமர்சிப்பதற்காக அறியப்படுபவர் டாஹா.
சில மாதங்களுக்கு முன்பு பாதுகாப்பு அமைப்புகளால் தொந்தரவு அளிக்கப்படுவதாக டாஹா புகார் அளித்திருந்தார். பின்பு அது தொடர்பாக நீதிமன்றத்திலும் அவர் வழக்கு பதிவு செய்திருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
ஆயுதங்கள் ஏந்திய பத்திலிருந்து 12 பேர் தன் காரை நிறுத்தி கடத்த முயற்சி செய்ததாக, டாஹா ட்விட்டரில் தெரிவித்துள்ளார். தனது நண்பரின் ட்விட்டர் கணக்கிலிருந்து ட்வீட் செய்த அவர், "நான் அவர்களிடம் இருந்து தப்பி, போலீசாரிடம் பாதுகாப்பாக உள்ளேன்" என்று கூறியுள்ளார்.
துப்பாக்கி ஏந்திய சில பேரால் தாம் காரிலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும், அவர்கள் தன்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் டாஹா கூறினார்
சம்பவம் குறித்து பிபிசியிடம் பேசிய டாஹா, தான் எவ்வாறு காரில் இருந்து இறக்கிவிடப்பட்டு தாக்கப்பட்டது குறித்து விவரித்தார். "நான் உதவி கேட்டு சத்தமாக கத்தினேன். கூட்டத்தில் ஆயுதம் ஏந்திய சிலர் நான் சத்தம் போடுவதால் என்னை காலில் சுடும்படி கூறினர்".
அந்த நேரத்தில், அங்கிருந்து தப்பிக்க வழி கண்டுபிடித்த டாஹா அவ்விடத்தில் இருந்து ஓடி, மற்றொரு காரை நிறுத்தி அதில் ஏறி தப்பித்து விட்டார்.
பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைப்பு குறித்து விமர்சிக்கும் சமூக ஆர்வலர்களை தடுக்க, இது போன்ற கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு பல உரிமைக்குழுக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் கடத்தல் சம்பவம் தொடர்பாக, உள்ளூர் காவல் நிலையத்தில் டாஹா புகார் அளித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூகஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












