சீன தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து : இருவர் பலி, பலர் படுகாயம்

சீனாவில், ஷாங்காய்க்கு தெற்கில் உள்ள கிழக்கு துறைமுக நகரமான நிங்க்போவில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் குறைந்தது இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜியாங்பே மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட இந்த வெடிப்பு 9:00 (1:00 ஜிஎம்டி) மணிக்கு உள்ளூர் நேரப்படி நிகழ்ந்துள்ளது. இதனால் அருகில் உள்ள கட்டிடங்கள் இடிந்துள்ளதாக தெரிகிறது.

அதிகளவிலான மக்கள் இதில் காயமடைந்துள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளதாக அந்நாட்டு அரசு செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.

சுமார் 30 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

வெடிப்பு எற்பட்ட காரணம் குறித்த விசாரணையை தொடங்கியுள்ளதாக காவல்துறையினர் சமூக ஊடகத்தில் பதிவு செய்துள்ளனர்.

வெடிப்பு ஏற்பட்ட இப்பகுதியில்தான் சர்வதேச கப்பல் துறைமுகம் உள்ளது. கார் உற்பத்திக்கு பெரிதும் அறியப்படும் நகரம் இதுவாகும்.

சம்பவம் நிகழ்ந்த தொழிற்சாலை பகுதிகளுக்கு அருகில் இருந்த கட்டிடங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. எனினும், அக்கட்டிடங்களை இடிக்க ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்ததாக சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

வெடிப்பிற்கு காரணம் அங்கிருந்த எரிவாயு பெட்டிகளாக இருக்கக்கூடும் எனவும் கூறப்படுகிறது.

வெடிப்பு ஏற்பட்ட ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருந்த கட்டிடங்களின் ஜன்னல்களும் நொறுக்கப்பட்டுள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :