You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாகிஸ்தான்: ஆர்பாட்டக்காரர்களுக்கு எதிரான நடவடிக்கை இடைநிறுத்தம்
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் இஸ்லாமியவாதிகள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்ததையடுயத்து, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கு பாகிஸ்தான் அரசு ராணுவத்தை அழைத்தது. இந்நிலையில், நேற்று இரவு முதல், போராட்டக்காரர்களுக்கு எதிரான காவல்துறையின் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
முக்கிய நெடுஞ்சாலையை முடக்கி போராடிவந்த இஸ்லாமியவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் மூண்ட மோதலில் 200 பேர் காயமடைந்துள்ளனர்.
பலர் இறந்துள்ளதாகச் செய்திகள் வந்துள்ளது.
நேற்று இரவு முதல், போராட்டக்காரர்களுக்கு எதிரான காவல்துறையின் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள முக்கிய கட்டடங்களை பாதுகாக்க, ராணுவம் அனுப்பப்பட்டுள்ளது.
யு டியூப் , பேஸ்புக், டுவிட்டர் மற்றும் இதர சமூக வலைதளங்கள், உள்ளூர் செய்தி சேனல்கள் மற்றும் இணையதளத்தில் நேரலை செய்யும் வசதி ஆகியவை தடுக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் திங்கள் மற்றும் செவ்வாயன்று அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் மூடப்பட்டிருக்கும்.
வெவ்வேறு நகரங்களில் இடையிடையில் போராட்டங்கள் நடப்பது குறித்து தகவல்களும் வருகின்றன.
ராவல்பிண்டி அருகில், காவல்துறை சோதனைச்சாவடி நெருப்புக்குள்ளாக்கப்பட்டுள்ளது.
போராட்டக்காரர்களும், மதகுருவான காதிம் ஹுசைன் ரிஸ்வீயும், இன்னும் ஃபாசியாபாத் எல்லைப்பகுதியில் அமர்ந்திருக்கின்றனர்.
தகவல்தொடர் என்பது முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஒருவருக்கொருவர் பேசிகொள்வதும் மிகவும் சீரற்ற வகையில் உள்ளது.
சட்ட அமைச்சர் ஜாஹித் ஹமீத், மத நிந்தனைச் செய்ததாக குற்றம்சாட்டும் போராட்டக்காரர்கள் அமைச்சரைப் பதவி நீக்கம் செய்யக்கோரி பல வாரங்களாக நெஞ்சாலையை முடக்கி போராட்டம் நடத்தினர்.
போராட்டக்காரர்கள் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அமைச்சரின் வீட்டை உடைத்து உள்ளே புகுந்ததாக பாகிஸ்தான் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அப்போது ஹமீத் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டில் இல்லை.
லாகூர், தெற்கு கராச்சி உள்ளிட்ட மற்ற நகரங்களிலும் போராட்டங்கள் பரவியுள்ளன.
தலைநகர் இஸ்லாமாபாதில் ராணுவத்தை நிலைநிறுத்துமாறு, சனிக்கிழமை மாலை பாகிஸ்தான் அரசு கேட்டுக்கொண்டது.
போராட்டக்காரர்களை கலைக்க முடியாத மாவட்ட அதிகாரிகளில் கோரிக்கையின் அடிப்படையில், ராணுவத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது என உள்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
மேலும் இஸ்லாமாபாத் நகரத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அரசியலமைப்பின் 245 பிரிவின் கீழ் ராணுவத்தை அரசு அழைத்துள்ளது என உள்துறை அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் பிபிசியிடம் கூறினார்.
இதற்கு பாகிஸ்தான் ராணுவத்திடம் இருந்து உடனடியாக எந்த பதிலும் வரவில்லை.
சனிக்கிழமையன்று போராட்டக்காரர்களை கலைக்க, ரப்பர் குண்டுகளை, கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும் பாதுகாப்பு படையினர் பயன்படுத்தினர்.
பைசாபாத் நெஞ்சாலையில் இருந்த போராட்டக்காரர்களை கலைக்க, கிட்டதட்ட 8,500 பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த நடவடிக்கை பின்பு நிறுத்தப்பட்டது.
தங்களது நான்கு செயற்பாட்டாளர்கள் கொல்லப்பட்டதாக போராட்டக்காரர்கள் கூறுகின்றனர். ஆனால் எந்த இறப்புகளும் ஏற்படவில்லை என போலீஸ் கூறியுள்ளது என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால், பலர் கொல்லப்பட்டிருப்பதை மற்ற செய்திகளில் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். காயமடைந்தவர்களில் பெரும்பாலோனோர் பாதுகாப்பு படையினர்.
தேர்தல் சீர்திருத்தச் சட்டம் 2017ல் செய்யப்பட்ட திருத்தத்துக்கு எதிராக ஏற்பாடு செய்யப்பட்ட இப் போராட்டம் 20 நாளாக நடந்து வந்தது.
இந்த சட்டத் திருத்தத்தின்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எடுக்கவேண்டிய ஓர் உறுதிமொழியில் முகமது நபியே இறைவனின் கடைசி தூதர் என்று குறிப்பிடும் பழைய வாசகம் ஒன்று விடுபட்டிருந்தது என போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த வாசகம் விடுபட்டது இஸ்லாமிய மறுப்பு எனவும், மத நிந்தனை எனவும் விமர்சிக்கப்பட்டது. சட்ட அமைச்சர் ஜாஹித் ஹமீத்தை பதவி நீக்கவேண்டும் என்று கடும்போக்கு இஸ்லாமியவாத அமைப்பான டெஹ்ரீக்-ஐ-லபைக் யா ரசூல் அல்லா கட்சியின் அஷ்ரஃப் ஜலாய் அணியும், சுன்னி டெஹ்ரீக் அமைப்பும் கோரி வருகின்றன.
கவனத்துக்கு வந்தவுடனேயே இந்தப் பிழையினை சரி செய்யப்பட்டுவிட்டதாக அரசு விளக்கமளித்தாலும், இதை கடும்போக்காளர்கள் ஏற்கவில்லை.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்