பாகிஸ்தான்: வீட்டுக் காவலில் இருந்த லஷ்கர்-இ தய்பா தலைவர் விடுதலை
இந்திய மற்றும் அமெரிக்க புலனாய்வு அமைப்புகளால், 2008-ஆம் ஆண்டு நடந்த மும்பை தாக்குதல் சம்பவத்துக்கு சூத்திரதாரியாக இருந்தார் என்று குற்றம் சாட்டப்பட்ட பாகிஸ்தான் மதகுரு ஹஃபீஸ் சயீத் வீட்டுக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
கடந்த ஜனவரி மாதம் முதல் லாகூரில் அவர் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
அவரை வீட்டுக் காவலில் இருந்து விடுதலை செய்வது பொதுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்ற பாகிஸ்தான் அரசின் வாதத்தை லாகூர் உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்தது. அதைத் தொடர்ந்து வியாழன் மாலை அவர் விடுவிக்கப்பட்டார்.
மும்பையில் 2008-இல் நடத்தப்பட்ட தாக்குதலில் 160க்கும் மேலானவர்கள் கொல்லப்பட்டனர். அந்தத் தாக்குதலில் தமக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று ஹஃபீஸ் சயீத் ஏற்கனவே மறுத்திருந்தார்.
அவரைப் பிடித்துக் கொடுத்தால் 10 மில்லியன் டாலர் சன்மானம் வழங்கப்படும் என்று அமெரிக்கா 2012-இல் அறிவித்தது.
விடுதலையான பின் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள அவர், "இந்தியா எப்போதுமே பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளைக் கூறி வருகிறது. ஆனால், (லாகூர்) உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, இந்தியாவின் பிரசாரங்கள் அனைத்தும் பொய் என்பதை நிரூபித்துள்ளது," என்று கூறியுள்ளார்.
தீவிரவாதத்துடன் தொடர்புடைய நாடுகளுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எடுத்த நடவடிக்கைகளைத் தொடர்ந்தே அவர் கடந்த ஜனவரி மாதம் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
லஷ்கர்-இ தய்பா தீவிரவாத அமைப்பை 1990களில் நிறுவிய அவர், அந்த அமைப்பு தடை செய்யப்பட்டவுடன் அதற்கும் முந்தைய ஜமாத்-உத் தாவா அமைப்பை மறுகட்டமைப்பு செய்தார். இந்த அமைப்பு ஒரு இஸ்லாமிய நல அமைப்பு என்று ஹஃபீஸ் கூறினாலும், இது லஷ்கர்-இ தய்பா அமைப்புக்காக செயல்பட்டு வருவதாக அமெரிக்கா கூறுகிறது.
அதிகமாக ஊடகங்களிடம் பேசாத அவர், 2014-இல் பிபிசிக்கு வழங்கிய பேட்டியில், மும்பை தாக்குதலில் தமக்கு எவ்விதமான தொடர்பும் இல்லை என்றும், தமக்கு எதிராக உள்ள ஆதாரங்கள் அனைத்தும் இந்தியாவின் பிரசாரங்கள் என்றும் கூறினார்.
"பாகிஸ்தான் மக்கள் என்னை அறிவார்கள். அவர்கள் என்னை நேசிக்கிறார்கள். என்னை அமெரிக்க அரசிடம் பிடித்துக் கொடுத்து அந்த 10 மில்லியன் டாலர் சன்மானத்தை வாங்க யாரும் முயலவில்லை. எனது பங்களிப்பு தெளிவாக உள்ளது.கடவுள் என்னைக் காக்கின்றார்," என்று அப்போது அவர் கூறியிருந்தார்.
இந்தியாவில் சயீத் மற்றும் அவரது அமைப்பு பல தாக்குதல் சம்பவங்களை நிகழ்த்தியிருப்பதாக இந்திய அரசு குற்றம் சாட்டினாலும், அவரை விசாரணை செய்யப் போதிய ஆதாரங்கள் இல்லை என்று பாகிஸ்தான் அரசு கூறி வருகிறது.
இந்திய நாடாளுமன்றம் மீது 2001-இல் தாக்குதல் நடத்தியதாக லஷ்கர்-இ தய்பா அமைப்பு மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தபோது, மூன்று மாத காலம் அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இதே போல, ஆகஸ்ட் 2006-இல் அவரது நடவடிக்கைகள் பிற நாடுகளுடனான பாகிஸ்தானின் உறவுக்கு குந்தகமாக இருப்பதாக அவர் கைது செய்யப்பட்டார். அப்போதும் சில மாதங்களிலேயே அவர் விடுவிக்கப்பட்டார்.
மும்பை தாக்குதல் நடந்தபின் அவர் வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டார். பின்னர், மும்பை தாக்குதலுக்கான சதியில் ஒரு பங்கு பாகிஸ்தானில் திட்டமிடப்பட்டது என்றும், லஷ்கர் அமைப்புக்கு அதில் தொடர்புண்டு என்றும் பாகிஸ்தான் அரசு ஒப்புக்கொண்டது.
இது தொடர்பாக பாகிஸ்தானில் பலர் கைது செய்யப்பட்டனர். ஆனால், சயீத் மீது எந்த குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்படவில்லை. சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு அப்போது அவர் வீட்டுக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













