ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

வட கொரியா பயங்கரவாததிற்கு உதவுகிறது: டிரம்ப்

ஒன்பது ஆண்டுகளுக்கு பின்னர், வட கொரியாவை பயங்கரவாதத்தின் ஆதரவளிக்கும் நாடுகள் பட்டியலில் மீண்டும் சேர்த்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் பேசிய அவர், இது நீண்ட நாட்களுக்கு முன்பே நடந்திருக்க வேண்டும் என்றும், இந்த நடவடிக்கையால் வட கொரியாவுக்கு கூடுதல் தடைகள் விதிக்க வாய்ப்பு உருவாகியுள்ளது என்றும் கூறினார்.

ஜெர்மனியில் மீண்டும் தேர்தல்?

கூட்டணி பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததை அடுத்து அரசியல் நெருக்கடியில் ஜெர்மனி சிக்கியுள்ளதால், சிறுபான்மை அரசாங்கத்தை தலைமையேற்று நடத்துவதைவிட புதிய தேர்தல் நடத்த விரும்புவதாக அந்நாட்டின் அதிபர் ஏங்கலா மெர்கல் தெரிவித்துள்ளார்.

செப்டம்பரில் நடைபெற்ற தேர்தலில் ஏங்கலா மெர்க்கெலின் 'ஜெர்மனிய கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம்' கட்சி போதிய பெரும்பான்மை பெறாததால், ஆட்சி அமைக்க கூட்டணிக் கட்சிகளுடன் அவர் பேச்சு நடத்தி வந்தார்.

ராபர்ட் முகாபேவை பதவி நீக்க நடவடிக்கை

ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபேவை பதவியில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளை ஆளும் சானு பி.எஃப் கட்சி தொடங்க உள்ளது.

செவ்வாயன்று இதற்கான தீர்மானம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் முன்மொழியப்படவுள்ளது. அவரது மனைவி கிரேஸ் முகாபே ஆட்சியைக் கைப்பற்ற உதவியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர்மீது உள்ளன.

பிரெக்சிட்: பிரிட்டன் புதிய முடிவு

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலக உள்ளதை , அந்த ஒன்றியத்துக்கு பிரிட்டன் வழங்கும் நிதிச் சலுகைகளை அதிகரிக்க வேண்டும் என்பதில் அமைச்சர்கள் மத்தியில் பரந்த உடன்பாடு இருப்பதாக தெரிகிறது.

ஆனால், எதிர்காலத்தில் பிரிட்டன் உடனான வர்த்தக உடன்படிக்கைகள் உள்ளிட்ட பிரிட்டனுக்கு சாதகமான நடவடிக்கைளுக்கு பதிலாகவே அது இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இரான்: அரசை விமர்சிக்கும் அதி உயர் தலைவர்

சமீபத்திய நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள அந்நாட்டு அரசு போதிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்று அந்நாட்டின் அதி உயர் தலைவர் அயத்துல்லா அலி கமேனி கூறியுள்ளார்.

கடந்த வாரம் இரான் - இராக் எல்லையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தபட்சம் 437 பேர் கொல்லப்பட்டனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :