You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
முடிவுக்கு வந்ததா முகாபேயின் ஜிம்பாப்வே? அறிந்து கொள்ள 5 முக்கிய விஷயங்கள்
ஜிம்பாப்வேயில் அதிகாரத்தைக் கைப்பற்றி, அதிபர் ராபர்ட் முகாபேவை காவலில் எடுத்துள்ள அந்நாட்டு ராணுவம் அடுத்து என்ன செய்யப்போகிறது என்று தெரிந்து கொள்ள உலகமே காத்திருக்கிறது.
இந்நிலையில் அந்நாடு பற்றியும், அங்கு நடந்த சில முக்கியமான சம்பவங்கள் குறித்தும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவற்றை பார்க்கலாம்.
1.குழப்பத்தில் ஜிம்பாப்வே பொருளாதாரம்
ஒரு பொருளாதார நெருக்கடியிலிருந்து மற்றொறு நெருக்கடிக்கு சென்றுள்ளது ஜிம்பாப்வே. அந்நாட்டில் வேலையில்லா திண்டாட்டத்தின் அளவு வேறுபட்டு வந்தாலும், இந்தாண்டின் தொடக்கத்தில் வேலையின்மை விகிதம் 90 சதவீதமாக உயர்ந்தது என அங்குள்ள மிகப் பெரிய தொழிற்சங்கம் கூறுகிறது.
2008 ஆம் ஆண்டில் உச்சநிலையை அடைந்தது அந்நாட்டின் உயர் பணவீக்கம். இதனால் அந்நாட்டின் கரண்ஸியை விட்டுவிட்டு, வெளிநாட்டு கரன்ஸிகள் பயன்பாட்டுக்கு வந்தன. பணப்பற்றாக்குறை காரணமாக அரசே அச்சடித்த தந்த பண நோட்டுகளும் அதன் மதிப்பை இழந்தன.
2.சர்ச்சையில் முகாபே
நீண்ட காலம் பதவியில் இருந்ததாக பலரால் விமர்சிக்கப்பட்டார் 93 வயதான முகாபே.
முதலாளித்துவம் மற்றும் காலனித்துவத்தை எதிர்த்து போராடுவதாக அக்கட்சி கூறி வந்தது. எனினும் அந்நாட்டின் பொருளாதார பிரச்சனைகள் அக்கட்சியின் தீவிரமான ஆதரவாளர்களையும் சோதித்திருக்கிறது.
தம் "புரட்சி" முடிந்தால்தான் பதவி விலகுவேன் என முகாபே அடிக்கடி கூறுவார். ஆனால் தனக்கு பிறகு யார் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்று தாம் தான் முடிவெடுக்க வேண்டும் என்ற எண்ணமும் அவருக்கு இருந்தது. அதுவே இந்த பிரச்சனைகளுக்கு ஒரு முக்கிய காரணமாகும்.
3.எதிர்ப்புக் குழுக்கள்
1980களில் இங்கிலாந்தின் மேற்பார்வையில் நடத்தப்பட்ட சுதந்திரமான தேர்தலில் அந்நாட்டு பிரதமராக முகாபே தேர்ந்தெடுக்கப்பட்ட போது எதிர்க்கட்சி இருந்தது.
1987 ஆம் ஆண்டு தன்னை ஜனாதிபதியாக்கிக் கொள்ள அரசியலமைப்பு சட்டத்தை தானே மாற்றியமைத்தார் முகாபே.
1999இல் ஜனநாயக மாற்றத்திற்கான இயக்கம், எதிரப்புக் குழுவாக உருவானது. அப்போது பொருளாதாரம் தோல்வியுற்றதை தொடர்ந்து போராட்டங்கள் மற்றும் பொது அடைப்புகள் அதிகமாக காணப்பட்டன.
மாநிலத்தில் நடைபெற்ற வன்முறையையும் மீறி, அரசியல் எதிரிகளை திசைத்திருப்பி, சக்திவாய்ந்த கூட்டாளிகளை ஓரம்கட்டி தொடர்ந்து பதவியில் நீடித்தார் முகாபே. கடைசியாக முன்னாள் துணை ஜனாதிபதி எம்மர்சன் மனங்காக்வா, முகாபேவால் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
4.புதிய தலைவர்களால் மாற்றம் வருமா?
சமீபத்தில் நீக்கப்பட்ட எம்மர்சன், முகாபேவின் இடத்தை ஏற்றால் கூட எதுவும் அங்கு மாறப் போவதில்லை.
அந்நாட்டின் சுதந்திர போராட்டத்தின் போது ராணுவம், உளவுத்துறை மற்றும் ஜனு பி.எஃப் கட்சிக்கு முக்கிய இணைப்புப் புள்ளியாக கருதப்பட்டார் எம்மர்சன். உள்நாட்டுப் போரின் போதும் எதிர்கட்சி ஆதரவாளர்கள் மீதான தாக்குதலின் போதும் பெரும் அட்டூழியம் செய்ததாக இவர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
5.முகாபேவே ஆட்சியில் தொடர வாய்ப்பு
முகாபேவை அல்ல, அவரை சுற்றியுள்ள கிரிமினல்களை இலக்காகக் கொண்டே தற்காலிகமாக நாட்டை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த்தாக அந்நாட்டு ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பதவியில் இருந்து நீக்கப்பட்ட எம்மர்சன் மீண்டும் பதவியில் அமர்த்தப்பட்டு, அடுத்து யார் என்று திட்டமிட்டவுடன் மீண்டும் முகாபே அதிகாத்தைப் பெற வாய்ப்புள்ளது. இல்லையென்றால், மற்றவர்கள் நாட்டின் விவகாரங்களை நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருக்க, முகாபே வெறும் சடங்கிற்காக தலைவராக இருப்பார்.
ராபர்ட் முகாபே: ஜிம்பாப்வேயின் புரட்சி நாயகனா, அடக்குமுறையாளரா?
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்