You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வாட்ஸ்ஆப்புக்கு தடை விதிக்க ஆஃப்கானிஸ்தான் அரசு திட்டம்: பெருகும் எதிர்ப்பு
ஆஃப்கானிஸ்தானில் உள்ள ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்கள் மற்றும் சமூக வலைத்தள பயன்பாட்டாளர்கள், அந்நாட்டில் வாட்ஸ்ஆப் மற்றும் டெலிகிராம் ஆகிய குறுஞ்செய்தி சேவைகளை தடை செய்ய திட்டமிட்டுள்ள அரசை குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அந்நாட்டின் மிகப்பெரிய செய்தித்தாள்களில் ஒன்றின் ஆசிரியர், இந்நடவடிக்கை பிற்போக்குத்தனமானது என்றும் மேலும் இது எதிர்க்கப்பட வேண்டுமென்றும் கூறினார்.
தாலிபன் மற்றும் பிற கிளர்ச்சிக் குழுக்கள் இச்செயலிகள் மூலம் தகவல்களை ரகசியமாக பரிமாறிக் கொள்வதை நிறுத்துவதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இதுவரை தடை அமல்படுத்தப்பட்டதற்கான அறிகுறிகள் கிடைக்கவில்லை.
ஆஃப்கானிஸ்தானின் தொலைத்தொடர்பு துறையை கட்டுப்படுத்தும் அமைப்பின் அதிகாரிகள், தாங்கள் இவ்வாரத்தின் தொடக்கத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக செல்பேசி சேவை வழங்கும் நிறுவனங்களை குறுஞ்செய்தி செயலிகளை 20 நாட்களுக்கு தடை செய்யுமாறு கேட்டுக் கொண்டதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஷாஜத் ஆரியோபி, தொலைத்தொடர்பு சேவைகள் குறித்து ஏராளமான புகார்கள் வந்ததால் அதிலுள்ள தொழில்நுட்ப பிரச்சனைகளை சரி செய்வதற்காக தற்காலிக தடையை ஏற்படுத்துமாறு சேவை நிறுவனங்களுக்கு தொலைத்தொடர்பு கட்டுப்பாடு அமைப்பு உத்தரவிட்டதாக அவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
"ஆஃப்கானிஸ்தான் அரசு சுதந்திரமான பேச்சுரிமைக்கு உறுதுணையாக உள்ளதென்றும், மேலும் இது மக்களுக்கான அடிப்படை உரிமை என்று அரசுக்கு தெரியும்" என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
"எந்த தடையையும் எங்களால் சகித்துக்கொள்ள முடியாது"
தெளிவான மற்றும் தடையற்ற மொபைல் சேவைகள் குறித்து பயன்பாட்டாளர்களிடம் இருந்து பல புகார்கள் வந்தாலும், 2001-ஆம் ஆண்டு அமெரிக்கா தலைமையிலான படையெடுப்புக்குப் பின்னர் ஆப்கானிஸ்தானில் நடந்த வளர்ச்சிகளில் ஒன்றாக செல்பேசி சேவைகளின் பரவல் பார்க்கப்படுகிறது.
ஆஃப்கானிஸ்தான்னின் பிரபல பத்திரிகை ஒன்றின் ஆசிரியரான பர்விஸ் கவா, பல ஆண்டுகால தணிக்கைக்கு பின் ஆஃப்கானிஸ்தான் ஒரு முற்போக்கு சமூகமாக மாறியுள்ள நிலையில், தற்போது சமூக வலைத்தளங்களை தடை செய்வதை பொறுத்துக்கொள்ள முடியாது என்று பிபிசியிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :