டிரம்ப் - ரஷ்யா விசாரணை: முதல் குற்றச்சாட்டு பதிவு என ஊடகங்கள் தகவல்

கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக சொல்லப்படும் குற்றச்சாட்டை விசாரித்து வரும் சிறப்பு ஆலோசகர் ராபர்ட் முல்லர் தலைமையிலான விசாரணைக் குழு முதல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குற்றச்சாட்டுகள் என்ன என்பதோ, யார் யார் மீது என்பதோ தெளிவாகத் தெரியவில்லை என்று சி என் என் மற்றும் ராய்டர்ஸ் நிறுவனங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

குற்றம் சுமத்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் திங்கள் கிழமைக்குள் காவலில் எடுக்கப்படலாம் என்று சி என் என் தெரிவித்துள்ளது.

அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற ரஷ்ய அரசாங்கம் உதவியதாக இந்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்க உளவு அமைப்புகள் தெரிவித்திருந்தன.

டொனால்ட் டிரம்பின் போட்டியாளரான ஜனநாயக கட்சியை சேர்ந்த ஹிலரி கிளிண்டனை சிறுமைப்படுத்த அவருடைய இமெயில் கணக்குகளை ஊடுருவியும், ஹிலரியை கேலி செய்து சமூக வலைத்தளங்களில் மோசமான கருத்துக்களை பதியவும் ஒரு பிரச்சாரத்தை ரஷ்யா முன்னின்று நடத்தியதாக உளவுத்துறை அமைப்புகள் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

டிரம்ப் பிரச்சாரத்தில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததா என்பது குறித்து முல்லர் விசாரித்து வருகிறார். ஆனால், இந்த விவகாரத்தில் ரகசிய உடன்படிக்கைகள் எதுவுமில்லை என இருதரப்புகளும் மறுத்து வருகின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :