இந்தியா, பாகிஸ்தானில் சிறையில் இருக்கும் கணவர்களை விடுவிக்கக் கோரும் மீனவர்களின் மனைவிகள்

- எழுதியவர், ரோக்சி கக்தேகர் சாரா மற்றும் ஷுமைலா ஜஃப்பரி
- பதவி, குஜராத் இந்தியா, சிந்து பாகிஸ்தான்
லைலா மற்றும் அம்ருத்துக்கு இடையில் அரபிக் கடல் அமைந்திருக்கிறது. இவர்கள் இருவரும் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் வாழ்பவர்கள். ஆனால் இவர்களுக்கு இடையில் பல விஷயங்களில் ஒற்றுமை நிலவுகிறது. இவர்களின் கணவர்களான மீனவர்கள் பக்கத்து நாட்டின் சிறையில் இருக்கிறார்கள்.
- லைலா ஐந்து குழந்தைகளுக்கு தாய். அம்ருதா நான்கு குழந்தைகளுக்கு தாய்.
- லைலாவின் கணவர் இந்திய சிறையில் இருக்கிறார். அம்ருதாவின் கணவர் பாகிஸ்தான் சிறையில் வாடுகிறார்.
- அவர்கள் இருவரின் கணவர்களும் அனுமதியின்றி மற்றொரு நாட்டின் கடல் எல்லைக்குள் நுழைந்ததால் கைது செய்யப்பட்டனர்.
- தாங்கள் அப்பாவிகள் என்றும் தவறுதலாக மற்ற நாட்டின் கடல் எல்லையை கடந்துச் சென்றதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அரை விதவைகள்
லைலாவின் குடும்பத்தில் பதினாறு பேர் கடந்த டிசம்பர் 2016ல் இந்திய அரசால் சிறையில் அடைக்கப்பட்டார்கள். அம்ருத்தின் கணவர் கான்ஜி உட்பட மற்ற ஆறு பேரை கடந்த ஜனவரி 2017ல் பாகிஸ்தான் அரசு கைது செய்தது.
டெல்லிக்கும் இஸ்லாமபாத்துக்கும் இடையே உறவுகள் சீர்கெடும்போதெல்லாம் கடலில் இருக்கும் மீனவர்கள்தான் முதலில் அதை உணர்வார்கள்.
இரண்டு பெண்களுமே சிறுமிகளுக்கு தாயாக இருக்கிறார்கள். அந்தச் சிறுமிகள் தங்கள் தாயிடம் கேட்கும் ஒரே கேள்வி '' எப்போது என்னுடைய அப்பா கடலில் இருந்து திரும்பி வருவார்?'' என்பதே.

''எனது குழந்தைகள் அவளது அப்பா அருகில் இல்லாத குறையை அதிகளவு உணர்கிறார்கள். குறிப்பாக எனது இளவயது மகள் அதிகம் உணர்கிறாள் . அவள் எல்லா நேரத்திலும் அவளது அப்பா குறித்தே கேள்வி கேட்டுக்கொண்டிருப்பாள். அவளது அப்பா திரும்பி வருவது குறித்தே அவள் கனவு காண்கிறாள் '' என்கிறார் லைலா.
இவர் பாகிஸ்தானில் உள்ள ஜான்கிசர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். இது பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திலுள்ள சிந்து நதியின் கழிமுகத்தில் இருக்கும் சிறிய மீனவ கிராமம்.
மேற்கு இந்தியாவில் உள்ள டாமன் & டையூவில் இருக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் அம்ருத் சோலங்கி. இவர் தனது இளைய மகளிடம் பொய் சொல்கிறார். தனது பதின்மூன்று வயது மகள் நம்ரதாவிடம், அவளது அப்பா விரைவில் திரும்பி வந்துவிடுவார் என்றும் அதனால் அவளது உணவை அவர் உண்ணவேண்டும் என்றும் சொல்கிறார்.
யூனியன் பிரதேசமான டையூவில் இருக்கும் வணக்பாரா மற்றொரு மீன்பிடி கிராமமாகும். அந்தக் கிராமத்தில் இருப்பவர்கள் எல்லோருக்கும் எப்படி மீன் பிடிக்க வேண்டும் என்பது குறித்தே தெரியும்.

தனது குடும்பத்தை நடத்துவதற்காக வட்டிக்கு பணம் கடனாக வாங்குவதாக தெரிவிக்கிறார் அம்ருத். எனக்கு கடன் கொடுப்பவர்களிடம், எனது கணவர் பாகிஸ்தான் சிறையில் இருந்து திரும்பியதும் பணத்தை திருப்பித் தந்துவிடுகிறேன் என சத்தியம் செய்திருப்பதாக கூறியுள்ளார் அம்ருத்.
நடவடிக்கை எடுக்காத அரசு
குறைந்தபட்சம் குஜராத் மற்றும் டாமன் & டையூவைச் சேர்ந்த 376 மீனவர்கள் பாகிஸ்தானில் காவல் வைக்கப்பட்டிருப்பதாக குஜராத்தில் உள்ள மீன் பிடி ஆணையரான மொஹம்மத் ஷேக் கூறியுள்ளார்.
தட்டா மாவட்டத்தைச் சேர்ந்த ஐம்பது பேர் உட்பட குறைந்தபட்சம் 300 பாகிஸ்தான் மீனவர்கள் இந்திய சிறைகளில் இருப்பதாக பாகிஸ்தானிலுள்ள மீனவ இன மன்றம் எனும் அரசு சாராத நிறுவனம் தெரிவிக்கிறது.
இந்த எண்ணிக்கையுடன் பாகிஸ்தான் அரசு இணங்கவில்லை. இந்திய அரசின் சிறையில் 184 மீனவர்கள் இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.
சிறையில் இருக்கும் மீனவர்கள்தான் அவர்களது குடும்பத்துக்கு வருமானம் ஈட்டும் ஒரே ஆளாக உள்ளனர். அவர்களது குடும்பம் தொடர்ந்து வாழ வேண்டுமெனில் ஒன்று கடலுக்குச் செல்ல வேண்டும் அல்லது தெருக்களில் யாசகம் பெறவேண்டும்.

பாகிஸ்தானின் அரசு சாரா அமைப்பான மீனவ இன மன்றத்தில் வேலை செய்யும் குலாப் ஷா இது குறித்து பேசுகையில் கடலில் எல்லைகள் இல்லை. 'சர் கிரீக்' சர்ச்சையானது தீர்க்கப்படவேண்டும் என்றார்.
அரபிக் கடலில் தொடங்கி 98 கிமி தூரத்துக்கு சிற்றோடை போல ஓடும் கடற்கழியான பகுதிக்கு இந்தியாவும் பாகிஸ்தானும் போட்டி போடுகின்றன. இந்த சிறு கடற்கழி பகுதிகளில் மீனவர்கள் மீன் பிடிக்க பயணம் செய்யும்போது சில நேரங்களில் தொலைந்துபோய் கடலில் எல்லைகளை கடந்து சிறையில் தங்களது பயணத்தை முடிக்கின்றனர்.
சில சமயங்களில் வாழ்க்கை முழுவதையும் சிறையிலேயே கழிக்கின்றனர் என்கிறார் குலாப் ஷா. சட்ட விரோதமாக எல்லைகளை கடந்தது தவறு என்பது பிரச்னையெனில் அதற்கு சட்டத்தின் அடிப்படையில் மூன்று மாத சிறை தண்டனை மட்டுமே கொடுக்க வேண்டும் என்கிறார் அவர். இதையே இந்தியாவிலுள்ள மீனவ பிரதிநிதியும் கூறுகிறார்.
குஜராத்தில் உள்ள போர்பந்தர் மீன்பிடி படகு அமைப்பின் முன்னாள் தலைவர் மனிஷ் லொத்தரி கூறுகையில், பாகிஸ்தானின் கடல் பாதுகாப்பு அமைப்பு இந்திய மீனவர்களை கைது செய்யும் போதெல்லாம் இந்திய அரசின் உதவியை அவரது அமைப்பு நாடியதாக தெரிவிக்கிறார்.

இது ஒரு நீண்ட செயல்முறையாகும். எல்லா விஷயங்களும் அதிவேகத்தில் நடந்தாலும் கூட பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட ஒரு மீனவர் மீண்டும் வீட்டுக்குத் திரும்ப குறைந்தபட்சம் ஒரு வருடம் ஆகும் என்கிறார் மனிஷ்.
இந்தப் பிரச்னையை தீர்க்க ஒரு நீதித்துறை ஆணைக்குழுவை அமைத்தது பாகிஸ்தான் மற்றும் இந்தியா. அந்த ஆணைக்குழுவானது எதிர் நாட்டில் சிறையில் உள்ள மீனவர்களை ஒரு வருடத்துக்கு ஒரு முறை பார்க்கவேண்டும்.
அவர்களுக்கு ஆலோசனை, நல்ல உணவு மற்றும் வாழும் சூழ்நிலைகள், மருத்துவ பராமரிப்பு ஆகியவை வழங்கவேண்டும் என அது பரிந்துரைத்தது. ஆனால் இந்த பரிந்துரைகளில் ஒன்று கூட செயல்படுத்தப்படவில்லை
மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடை செய்யும் ஒரு சர்வதேச சட்டத்தில் இரண்டு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன. ஆனால் அதை இருநாடுகளும் மதிக்கவில்லை. சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் பிரச்னையைத் தீர்க்க ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் இரு தரப்பில் இருந்தும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுகின்றன. ஆனால் அதில் முன்னேற்றம் மிக மெதுவாக உள்ளது.

சாந்தா கோலிபட்டேலின் கணவர் கான்ஜிபாய் கடந்த ஜனவரி மாதம் பாகிஸ்தான் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இரு நாட்டிலும் மீனவ பெண்கள் பெரும்பாலும் படிப்பறிவற்றவர்களாக இருப்பதால் அவர்களது கணவருக்காக லாபி செய்வதில் கடினமாக இருக்கிறது.
என் கணவர் தொடர்பான வழக்கை கண்காணிக்க எந்தவொரு நிதி உதவி அல்லது சட்ட உதவியையும் கூட படகின் உரிமையாளர்கள் வழங்கவில்லை என சாந்தா தெரிவிக்கிறார்.
வலி மற்றும் துன்பம்
பாகிஸ்தானின் ஜான்சிகர் கிராமத்தைச் சேர்ந்த சல்மாவுக்கு காயம் மோசமானதாக உள்ளது. தனது மகன் கைது செய்யப்பட்டது குறித்து ஊடகங்கள் வழியாக அவர் அறிந்து கொண்டார்.
''நான் எனது மகனின் படத்தை இணையதளத்தில் பார்த்தேன் . பிறகே அவன் கைது செய்யப்பட்டான் என்பதை அறிந்தேன். பாகிஸ்தான் இந்திய மீனவர்களை கைது செய்தததற்காக அவர்கள் எங்களது பிள்ளைகளை சிறை பிடித்திருக்கிறார்கள் '' என்றார் சல்மா. இந்த துக்க சம்பவத்துக்கு பிறகு அடுத்த மாதத்திலேயே தனது கணவரும் இறந்துவிட்டார் என தெரிவித்துள்ளார் அந்தப் பெண்.

அரசு எங்களுக்கு ஆதரவாக ஒரு விஷயம் செய்ய வேண்டும் . இந்திய மீனவர்களை விடுவிக்க வேண்டும் அப்போதுதான் அவர்கள் பதிலுக்கு எங்களது அப்பாவி மகன்களை திரும்ப அனுப்புவார்கள் எனக்கூறுகிறார் சல்மா .
இந்தியாவில் டையூவில் உள்ள சாந்தா கோலிபட்டேலும் இதையே எதிரொலிக்கிறார். ''பாகிஸ்தானிய பெண்களும் எங்களது பிரச்னைகளையே எதிர்கொள்கின்றனர். மீனவர்களின் வாழ்வு எல்லா இடத்திலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது '' என்கிறார் சாந்தா.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












