வட கொரியாவை மிரட்டும் வகையில் அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள் போர் பயிற்சி

பி-1பி ரக குண்டுவீச்சு விமானங்கள்

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, அமெரிக்க பசிஃபிக் பிராந்தியமான குவாம் பகுதியிலிருந்து அமெரிக்காவின் குண்டுவீச்சு விமானங்கள் விண்ணில் சீறிப்பாய்ந்து தென் கொரிய வான்வெளியில் நுழைந்தன

கொரிய தீபகற்பத்தின் மீது முக்கியத்துவம் வாய்ந்த இரு குண்டுவீச்சு விமானங்களை செலுத்தி, தென் கொரியாவுடன் ஒரு கூட்டு ராணுவ பயிற்சியை நடத்தியுள்ளதுஅமெரிக்கா.

பி-1பி ரக குண்டுவீச்சு விமானங்களும், தென் கொரியாவின் இரண்டு எஃப்-15கே ஜெட் போர் விமானங்களும் கொரிய கடற்பகுதி மீது பறந்து வானில் இருந்து நிலத்தைத் தாக்கும் ஏவுகணை செலுத்தும் பயிற்சியில் ஈடுபட்டன.

வட கொரியாவின் அணு ஆயுத சோதனைகளைத் தொடர்ந்து பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இந்த ராணுவப் பயிற்சி நடைபெற்றுள்ளது.

கடந்த சில மாதங்களுக்குமுன், தனது 6வது ஆணு ஆயுத சோதனையை நடத்திய வட கொரியா, ஜப்பான் வான்வெளியைக் கடந்து செல்லும் வகையில் இரு ஏவுகணைகளை வீசியிருக்கிறது.

செவ்வாய்க்கிழமை இரவு, அமெரிக்க பசிஃபிக் பிராந்தியமான குவாம் தீவில் இருந்து அமெரிக்காவின் குண்டுவீச்சு விமானங்கள் விண்ணில் சீறிப்பாய்ந்து தென் கொரிய வான்வெளியில் நுழைந்தன. பின்னர், கிழக்கு கடற்கரை மற்றும் யெல்லோ கடற்கரையில் குண்டுகளை வீசிப் பயிற்சியில் ஈடுப்பட்டதாக தென் கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது.

மேலும், வட கொரியாவுக்கு எதிரான நீட்டிக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு அங்கமாக இப்பயிற்சி மேற்கொள்ளப்பட்டதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.

இந்த போர் பயிற்சியில் ஜப்பானின் விமானப் படையும் பங்கேற்றதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

வட கொரியாவிடமிருந்து வரும் அச்சுறுத்தல்களுக்கு பதில் கொடுக்கும் வழிமுறைகள் குறித்துப் பேசுவதற்காக செவ்வாய்க்கிழமை இரவு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தேசிய பாதுகாப்பு குழுவின் மூத்த அதிகாரிகளை சந்தித்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

சமீப வாரங்களில், அமெரிக்க அதிபர் டிரம்பும், வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன்னும் காரசாரமான கருத்துக்களைப் பரஸ்பரமாக பரிமாறி கொண்டனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்

பிற செய்திகள்