You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தங்கையை பொலிட்பீரோ உறுப்பினராக்கினார் கிம் ஜாங்-உன்
வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன், தனது சகோதரி, கிம் யோ-ஜோங்கை, நாட்டின் அதி உயர் முடிவெடுக்கும் குழுவான, தொழிலாளர் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினராக நியமித்துள்ளார்.
மறைந்த தலைவர் கிம் ஜாங்-இல்லின் இளைய மகளான கிம் யோ-ஜாங், தொழிலாளர் கட்சியின் கொள்கைகளை வகுக்கும் குழுவில் உறுப்பினர் ஆக்கப்பட்டுள்ளார்.
அவர், தனது அத்தை வகித்து வந்த பதவிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
30 வயதாகும் கிம், கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு, கட்சியின் மூத்த அதிகாரி என்றும் குறிப்பிடப்பட்டார்.
இரண்டாம் உலகப்போரிற்கு பிறகு, 1948 இல், வட கொரியா என்ற நாடு நிறுவப்பட்டது முதல், கிம் குடும்பத்தினர் அந்நாட்டை ஆட்சி செய்து வருகின்றனர்.
பல பொது நிகழ்ச்சிகளில் தனது சகோதரருடன் பங்கேற்றுள்ள கிம் யோ-ஜாங், கிம் ஜாங்-உன்னின் பொது பிம்பத்துக்குக் காரணமானவர் என்று கருதப்படுகிறார்.
மேலும், வட கொரியாவின் பிரசாரம் மற்றும் கிளர்ச்சித் துறையின் துணை இயக்குநராக இருக்கும் யோ-ஜாங், ஏற்கனவே செல்வாக்கு மிக்கவராக இருக்கிறார்.
வட கொரியாவில் நடந்த மனித உரிமை மீறல்களுக்காக, கிம் அமெரிக்காவின் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சனிக்கிழமையன்று, டஜன் கணக்கான உயர் அதிகாரிகளின் இடமாறுதல் குறித்த கட்சி நிகழ்ச்சியில், தலைவர் கிம், இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
கிம் யோ-ஜாங்கை பதவி உயர்த்தி உள்ளது என்பது, அந்நாட்டின் மீது, கிம் குடும்பத்தினருக்கு உள்ள இரும்பு பிடிக்கு சான்றாக பார்க்கப்படும் என்கிறார், பிபிசி செய்தியாளர் டானி சாவேஜ்.
கடந்த ஆண்டு நடந்த, அரிதான அக்கட்சியின் மாநாட்டில், கிம் யோ-ஜாங்கிற்கு முக்கிய பொறுப்பு அளிக்கப்பட்ட போது, நாட்டின் தலைமைப்பதவிகளில் முக்கிய பதவியை அவர் ஏற்பார் என்றே எதிர்பார்க்கப்பட்டது.
கடந்த மாதம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை `தீய அதிபர்` என்று விமர்சித்த வட கொரியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ரீ யாங்-ஹூ, முழு வாக்குகள் உள்ள உறுப்பினராக பொலிட்புரோவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அமைச்சர் ரீ, சமீபத்தில், அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரியா மீது போர் பிரகடனம் செய்வதாக குற்றம் சாட்டியதோடு, அதிபர் தொடர்ந்து தனது `அபாயகரமான` சொல்லாட்சியை தொடர்ந்தால், வட கொரியாவின் `தவிர்க்க முடியாத` இலக்காக அமெரிக்கா மாறிவிடும் என்றார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப், தனது டிவிட்டர் பதிவில், வட கொரியாவை பொறுத்த வரையில், `ஒன்றே ஒன்றுதான் பலனளிக்கும் ` என்று பதிவிடுவதற்கு சற்று முன்பு, அமைச்சர் ரீ இந்த கருத்தை கூறியிருந்தார்.
பிற செய்திகள்
- சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- ட்விட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்