You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வட கொரியாவுடன், `ஒன்றே ஒன்றுதான் பலனளிக்கும்` - அதிபர் டிரம்ப்
வட கொரியாவுடன் பல ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடத்தியும் பலன் இல்லாத நிலையில், `ஒரே ஒரு விஷயம் மட்டுமே பலனளிக்கும்` என அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
தனது டுவிட்டர் பதிவில், `(அமெரிக்க) அதிபர்களும் அவர்களின் நிர்வாகிகளும் கடந்த 25 ஆண்டுகளாக வட கொரியாவுடன் பேசி வருகின்றனர். இருந்தும் எதுவும் நடக்கவில்லை` என பதிவிட்டுள்ளார்.
அதற்கு மேல், அதிபர் டிரம்ப் அதை விளக்கவில்லை.
வட கொரியாவின் அணு ஆயுத செயல்பாடுகள் மற்றும், அதன் ஏவுகணை சோதனைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் உள்ளிட்ட விஷயங்களில், இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து, மிகவும் கடினமான வார்த்தைப் பிரயோகம் நடந்துவருகிறது.
நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகளில் வைத்து அனுப்பும் வகையிலான, சிறிய ஹைட்ரஜன் குண்டுகளை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாக, சமீபத்தில் வட கொரியா தெரிவித்துள்ளது.
இதற்கு முன்பாக, அமெரிக்க தேசிய நலன்களைப் பாதுகாக்கவும், அந்த பகுதியில் உள்ள, தனது கூட்டாளிகளை பாதுகாக்கவும் தேவை ஏற்பட்டால், வட கொரியாவை அழிப்போம் என அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்து இருந்தார்.
சனிக்கிழமை, அமெரிக்க அதிபரால் பதிவிடப்பட்டுள்ள டுவிட்டுகளும், சங்கேத மொழியில் வெளியிடப்படும் அறிவிப்புகளே என்கிறார், வாஷிங்டனில் உள்ள பிபிசி செய்தியாளர் லாரா பிக்கர்.
கடந்த வாரம், வலுத்துவரும் பதற்றத்திற்கு தீர்வு காண்பதற்காக, வட கொரியாவுடன், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ரெக்ஸ் டில்லர்சன், நேரடித் உரையாடல தொடர்பு ஒன்றை உருவாக்கியதாக கூறப்பட்டது.
அதன் பின்பு, டுவிட்டரில் பதிவிட்ட அதிபர் டிரம்ப், ` உங்களின் சக்தியை சேமித்துக்கொள்ளுங்கள் ரெக்ஸ். நாம் எதை செய்ய வேண்டுமோ, அதை செய்வோம்` என்று குறிப்பிட்டு இருந்தார்.
சனிக்கிழமை, அதிபர் டிரம்ப், தனக்கும், வெளியுறவுத்துறை செயலருக்கும் நல்ல நட்பு உள்ளது என்றும், ஆனால் டில்லர்சன் இன்னும் சற்றும் கடுமையாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
வாரத்துவக்கத்தில், டில்லர்சன், அதிபருக்கும் தனக்கும் இடையே பிளவு உள்ளதாக கூறப்படுவதையும், அவர் அதிபரை `அறிவு முதிர்ச்சியற்றவர்` என அழைத்தாக கூறப்படும் வதந்திகளையும் மறுத்தார்.
வடகொரியா குறித்த, அதிபர் டிரம்பின் சமீபத்திய கருத்துக்கள், வெற்று ஆரவாரப் பேச்சு என கூறும் நமது செய்தியாளர், ஆனால் இதை வட கொரியா ஒரு மிரட்டலாக புரிந்துகொள்ளும் ஆபத்து உள்ளது என்கிறார்.
கடந்த மாதம், சர்வதேச கண்டனங்களை மீறி, வட கொரியா தனது ஆறாவது அணுஆயுத சோதனையை நடத்தியதோடு, பசிபிக் பெருங்கடலில், அடுத்த சோதனை நடத்தப்படும் என்று உறுதியளித்துள்ளது.
செப்டம்பர் மாதத்தில், ஐ.நா சபையில் பேசிய அதிபர் டிரம்ப், வடகொரியாவை அழிப்போம் என மிரட்டல் விடுத்ததோடு, அதன் தலைவர் கிம் ஜாங்-உன், ஒரு `தற்கொலை பணியில்` உள்ளார் என தெரிவித்தார்.
அவருக்கு பதிலளிக்கும் வகையில் , அபூர்வமாக கருத்து வெளியிட்ட வட கொரிய அதிபர் கிம், டிரம்ப்பை ஒரு மனப் பிறழ்வு கொண்டவர் என்றும், மூளைத் திறன் குன்றிய முதியவர் என்றும் வர்ணித்து, கடும் நடவடிக்கைகளால் அவரை அடக்கப்போவதாகவும் கூறியிருந்தார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- ட்விட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்