You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலவச குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை ரத்து செய்தார் டிரம்ப்
பணியாளர்களுக்கு இலவசமாக குடும்பக் கட்டுப்பாட்டு வசதியை வழங்கவேண்டிய கடமையில் இருந்து அவர்களது நிறுவனங்களை விடுவிக்கும் வகையில் ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.
"மத நம்பிக்கைகளை" அல்லது "அற நெறிகளை" மீறுவதாக இருந்தால், குடும்பக் கட்டுப்பாட்டு வசதியை இலவசமாக வழங்குவதை வேலை வழங்கும் நிறுவனங்களும். காப்பீட்டு நிறுவனங்களும் மறுத்துவிடுவதற்கு இந்த ஆணை வழி செய்கிறது.
வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்கள் குடும்பக் கட்டுப்பாட்டு வசதிகளை வழங்க வேண்டும் என்று பராக் ஒபாமா ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட விதியால், 55 மில்லியன் பெண்கள் பயனடைந்தனர்.
பதவியேற்பதற்கு முன்னரே, இந்த விதியை அகற்றி விடுவதாக அதிபர் டிரம்ப் உறுதியளித்திருந்தார்.
பின்னணி என்ன?
அமெரிக்க சுகாதார பராமரிப்பு அமைப்பில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஒபாமாவால் உண்டாக்கப்பட்ட, ஒபாமாகேர் என்று அழைக்கப்படும் திட்டத்தில், குடும்பக் கட்டுப்பாட்டு வசதியை இலவசமாக அளிப்பது ஒரு முக்கிய அம்சம்.
ஆனால், மத நிறுவனங்கள் தங்களின் தொழிலாளர்களுக்கு பிறப்பு கட்டுப்பாடு வழங்குவதை தவிர்க்கிற சரத்து இதில் சேர்க்கப்பட்டிருந்தது.
கருத்தடை வசதிகளை இலவசமாக வழங்குவதை ஏற்காத, அல்லது அந்தக் கடமையைக் கைவிட விரும்புகிற நிறுவனங்களின் பட்டியலை விரிவுபடுத்துவது முக்கியமாக இருந்தது என்று சுகாதாரம் மற்றும் மனித வளத்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
நிறுவனங்கள் தங்கள் மத நம்பிக்கைகளை செயல்படுத்தவும், தங்களின் மத கருத்துகள் காரணமாக பாரபட்சத்துக்கு ஆளாகாமல் இருப்பதற்கும் இடமளிக்கவேண்டும் என்று பெயர் தெரிவிக்க விரும்பாத சுகாதாரம் மற்றும் மனித வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
"மத சுதந்திரத்துக்கு முக்கியமான நாள் இது," என அமெரிக்க காங்கிரசில் உள்ள முக்கிய குடியரசு கட்சி உறுப்பினரும், சபாநாயகருமான பால் ரையான் இத்திட்டத்தை புகழ்ந்துள்ளார்.
இந்த உத்தரவை எதிர்த்து, அமெரிக்க கூட்டரசின் மீது வழக்குத் தொடுக்கப்போவதாக அமெரிக்கன் சிவில் லிபர்டிஸ் யூனியன், நேஷனல் விமன்ஸ் லா சென்டர் ஆகிய அமைப்புகள் தெரிவித்துள்ளன.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்