You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
யு-17 உலக கால்பந்து: தோற்றாலும் மனங்களை வென்ற இந்தியா
17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் முதல் முறையாகப் பங்கேற்ற இந்திய அணி தமது முதல் போட்டியில் அமெரிக்காவிடம் தோல்வியுற்றது. எனினும் டெல்லியில் நடந்த இப்போட்டியில் பங்கேற்ற இந்திய ரசிகர்களின் மனங்களை வென்றது உலகக் கால்பந்தின் 'உறங்கும் பூதம்' என வருணிக்கப்பட்ட இந்திய அணி.
போட்டியின் முடிவில் 0-3 என்ற கோல் கணக்கில் இந்தியா தோல்வியடைந்தாலும், போட்டி முழுவதுமே அரங்கில் இருந்த ரசிகர்கள் இந்திய வீரர்களை உற்சாகப்படுத்தியவண்ணம் இருந்தனர். ஃபிஃபா போட்டி ஒன்றில் பங்கேற்பதே சாதனையாகக் கருதப்பட்டதால், இந்தியாவின் தோல்வி ரசிகர்களை ஏமாற்றவில்லை. இந்தத் தோல்வியும் கூட முதல் படிக்கட்டு என்ற அளவிலேயே பார்க்கப்பட்டது.
பதினேழு வயதிற்கு உட்பட்டவர்களுக்கான நடைபெறும் 17வது உலக கோப்பை ஆடவர் கால்பந்து போட்டியை முதல்முறையாக இந்தியா நடத்துவதோடு, இந்தப் போட்டியில் இந்திய அணி முதல்முறையாக கலந்து கொள்வதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்திய அமெரிக்க அணிகள் மோதிய போட்டியில் அமெரிக்க அணியின் கேப்டன் சார்ஜ்ன்ட் முப்பதாவது நிமிடத்தில் பெனால்டி பெற்று முதல் கோல் அடித்தார்.
அதனை தொடர்ந்து டர்க்கின் ஐம்பத்தி ஒன்றாவது நிமிடத்தில் ஒரு கோலும், கார்லெடன் எம்பத்தி நான்காவது நிமிடத்தில் கடைசி கோலும் அடித்து வெற்றிவாகை சூடினர்.
டெல்லியிலுள்ள ஜவாஹர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தில் இந்தப் போட்டியை பிரதமர் நரேந்திர மோதி கண்டு களித்தார்.
குரூப் 'ஏ' போட்டிகளில் இந்தியா அக்டோபர் 9 ஆம் தேதி கொலம்பியாவோடும், அக்டோபர் 12 ஆம் தேதி கானாவோடும் விளையாடவுள்ளது.
இந்தியா, அமெரிக்கா, கொலம்பியா, கானா ஆகிய நான்கு அணிகளும் குரூப் ஏ-யில் உள்ளன.
மொத்தம் 24 நாடுகள் பங்குபெறுகின்ற இந்தப் போட்டியில், நான்கு அணிகள் வீதம் 6 குழுக்களாக பிரிந்து இந்தப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
அதேநாள் நடைபெற்ற பிற மூன்று போட்டிகளில், கானா கொலம்பியாவை வென்றது. நியூசிலாந்தும் துருக்கியும் மோதிய ஆட்டத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையை அடைந்தன. பராகுவே அணி மாலியை தோற்கடித்தது.
அக்டோபர் 28 ம் தேதி கொல்கத்தாவில் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.
பிற செய்திகள்
- பாலியல் தொந்தரவு செய்பவர்களோடு செல்ஃபி எடுக்கும் கல்லூரி மாணவி
- மிகை பணி கலாசாரம் - ஜப்பான் நிறுவனத்துக்கு சிக்கல்
- ''சின்னம்மா ரிட்டர்ன்ஸ்'': ட்விட்டரில் கலக்கும் 'சசிகலா' மீம்கள்
- பாகிஸ்தானில் இந்துக்கள் ஏன் சீக்கிய மதத்திற்கு மாறுகிறார்கள்?
- கத்தாரில் 2022இல் உலக கோப்பை கால்பந்து போட்டி நடக்குமா?
- பொருளாதார மந்த நிலையிலும் இந்திய செல்வந்தர்களிடம் செல்வம் குவிவது எப்படி?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்