வெளிநாடுகளில் புறக்கணிக்கப்பட்ட தோட்டங்களை மீட்டெடுக்கும் ஜப்பான்
உலக நாடுகளில் புறக்கணிப்பட்ட நிலையில் இருக்கின்ற ஜப்பானிய பாணியிலான தோட்டங்களை மீட்கும் வகையில், தோட்டக்கலை நிபுணர்களை ஜப்பான் அனுப்பியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
கல் பாலங்கள், குளங்கள், புல் நிரம்பிய பாதைகள், வட்டவடிவ கல் விளக்குகள் மற்றும் கவனமாக பராமரிக்கப்படும் சிறுவடிவ மரங்கள் உள்ளிட்ட தனிச்சிறப்புகளை இந்த தோட்டங்கள் கொண்டுள்ளன.
உள்ளூர் தோட்டக்கலைஞர்கள் அவற்றை பராமரிக்கும் பணியில் முழுமையாக ஈடுபட்டுள்ளனர்.
உலகம் முழுவதும் ஜப்பானிய பாணியிலான தோட்டங்கள் 500 உள்ளதாகவும், அவற்றில் 40 சீர்கெட்டு இருப்பதாகவும் ஜப்பான் நில விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அவைகளுக்கு சீரமைப்பு, புதிய செடிகள் மற்றும் மரங்கள் தேவைப்படுகின்றன. உடைந்துபோன பாரம்பரிய வட்டவடிவ கல் விளக்குகளில் வேலைப்பாடுகளும் செய்ய வேண்டியுள்ளன.
ஜப்பானிய கலாசாரத்தை வெளிநாடுகளில் பரப்புவதற்கு இந்த திட்டம் ஒரு வழிமுறையாக அமையும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தோட்டங்கள் ஜப்பானிய கலாசாரத்தை மக்களுக்கு அறிமுகம் செய்வதற்காக வெளிநாடுகளில் வாழ்கின்ற ஜப்பானியரால், தேனீர் சடங்குகள், பண்டிகைகள் மற்றும் பிற நிகழ்வுகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன என்று அசாஹி ஷிம்புன் செய்தித்தாள் தகவல் வெளியிட்டுள்ளது.

தூதரகங்கள் ஜப்பானிய அரசிடம் இந்த தோட்டங்களை மீட்டெடுக்க உதவி செய்ய கேட்டுள்ளதாக ஏஃஎபி செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
இந்த ஆண்டின் இறுதியில் ருமேனியா மற்றும் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவிலுள்ள ஜப்பானிய தோட்டங்களை சீரமைக்க 5 பேர் இடம்பெறும் குழுவினரை அனுப்பப்போவதாக ஜப்பானின் நில விவகார அமைச்சகம் கூறியுள்ளது.
விரிவுரைகள், மற்றும் உதவி குறிப்புகள் வழங்கி உள்ளூர் தோட்டக்கலைஞர்கள் இந்த தோட்டங்களை பராமரிப்பதற்கு கற்றுக்கொடுக்கவும் இந்த அமைச்சகம் திட்டங்கள் வைத்துள்ளது.
1873 ஆம் ஆண்டுதான் வெளிநாட்டில் ஜப்பானிய பாணியிலான தோட்டம் வியன்னா உலக கண்காட்சியின் ஒரு பகுதியாக ஜப்பான் அரசால் அமைக்கப்பட்டது.
அதற்கு மக்களிடம் கிடைத்த அமோக வரவேற்பால், அதிக தோட்டங்களை வெளிநாடுகளில் அமைக்கும் பணி தொடர்ந்தது.
இரண்டாம் உலக போருக்கு பின்னர், ராஜீய முயற்சிகளின் ஒரு பகுதியாக மேலதிகமாக ஜப்பானிய பாணியலான தோட்டங்கள் வெளிநாடுகளில் கட்டியமைக்கப்பட்டன.
சுமார் 5 ஆயிரம் சதுர கிலோமீட்டர் அளவுள்ள ஒவ்வொரு தோட்டமும், 100க்கு மேற்பட்ட நாடுகளில் காணப்படுவதாக அசாஹி ஷிம்புன் செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












