You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
100 பெண்கள் தொடர்: பெண்களை பின்தங்கிய நிலையில் வைக்கும் 'நம்பிக்கை இடைவெளி'
பிபிசியின் '100 பெண்கள்' தொடரின் ஒருபகுதியாக, ஐந்து நாட்களுக்கு சிலிகான் பள்ளத்தாக்கில் கூடும் சில பெண்கள் கண்ணுக்கு தெரியாத தடைகளை உடைத்தெறியும் முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள்.
தன்னம்பிக்கையாக இருக்க வேண்டியதற்கான காரணங்களை பெண்கள் உணர வேண்டும் என்று கூறும் பிபிசியின் கேட்டி, ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்களின் தன்னம்பிக்கை குறைவாகவே இருக்கிறது என்கிறார்.
தங்களின் உண்மையான திறமையைவிட தங்களிடம் அதிகம் திறமையுள்ளதாக ஆண்கள் கருதுவதாக கூறும் நியூயார்க்கில் உள்ள கொலம்பியா வணிகப் பள்ளி இதை, "அதீத நம்பிக்கை" என்று அழைக்கிறது.
உண்மையில், ஆண்கள் தங்கள் திறமைகளை 30% மிகைப்படுத்தி கூற முனைவதாக கூறும் அந்த வணிகப்பள்ளி, உண்மையில் அது ஆண்களின் நம்பிக்கை என்றும், அவர்கள் தங்களின் திறமையை அதீதமாக மதிப்பிடுகிறார்கள் என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.
ஆனால் மறுபுறத்தில் பெண்கள் தங்களது திறமையை எப்போதும் குறைத்தே மதிப்பிடுகிறார்கள். பெண்கள் எப்போதுமே தங்கள் உண்மையான திறமையைவிட குறைவாகவே தங்களை மதிப்பிடுகிறார்கள்.
இதைதான் நம்பிக்கை இடைவெளி என்கிறோம். இது பணியில் பதவி உயர்வு, வாய்ப்புகள், ஊதியம் ஆகியவை குறைவாகக் கிடைக்கக் காரணமாகிறது.
பிபிசியின் 100 பெண்கள் சவால் என்பது இந்த நம்பிக்கை இடைவெளியை குறைப்பதற்கான பெரிய திட்டத்தின் ஒரு பகுதியே. உண்மையில் எந்தவித அடிப்படையுமே இல்லாத நம்பிக்கை இடைவெளியை நாம் கொண்டுள்ளோம்.
ஏனெனில் சக ஆண் பணியாளர்களை விட பெண்கள் குறைவாக தகுதியுடையவர்கள் என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை.
உண்மையில், கல்வியில் ஆண்களைவிட பெண்கள் சிறப்பாக இருக்கின்றனர். பெண்களின் குறை என்று பார்த்தால் அது நம்பிக்கை குறைவு மட்டுமே.
மிகவும் நம்பகமான சமூக ஆய்வு ஒன்றுக்காக, விஞ்ஞான ரீதியான வினாடி வினாவில் பங்கேற்றபோது, பெண்கள் கிட்டத்தட்ட தங்கள் திறமையைவிட குறைவாகவே செயல்படுவதாக கூறுகின்றனர்.
ஆனால் ஆண்களோ, உண்மையில் அவர்களுக்கு இருக்கும் திறமையைவிட சிறப்பாக செய்துவிட்டதாகவே கூறுகிறார்கள். உண்மையில் ஆண்களும் பெண்களும் ஒரே அளவிலேயே செயல்பட்டிருப்பார்கள்.
இதுவரை தனக்கு கிடைத்தவற்றிற்கு காரணம் அதிர்ஷ்டம் என்று சொல்லும் பெண்களை பார்த்திருக்கிறீர்களா? அல்லது "சரியான நேரத்தில் சரியான இடத்தில்" தான் இருந்ததாக ஒரு பெண் கூறி கேட்டிருக்கிறீர்களா?
என் சொந்த வாழ்க்கையை எடுத்துக்கொண்டால், நான் என்னுடைய சிறப்பான பிரிட்டன் பாணியிலான ஆங்கில உச்சரிப்பினால்தான் அமெரிக்காவில் வெற்றிகரமாக செயல்படுகிறேன் என்று நம்புகிறேன்.
நான் செய்வதை சிறப்பாக செய்கிறேன், அல்லது கடினமாக உழைக்கிறேன் என்று சொல்வது சரியானதா? அது அபத்தமானதாக இருக்கும்!
நம்பிக்கை மட்டும் போதுமா?
நான் அதீத நம்பிக்கை உள்ளவள் அல்ல. நம்பிக்கையின் இடைவெளியை அழித்துவிடுவது மட்டுமே ஆண்களையும், பெண்களையும் சமமாக்கிவிடும் என்று கூறமாட்டேன்.
நம்பிக்கை மட்டுமே தனியாக நிலைமையை மாற்றமுடியாது. ஒரே வேலைக்கு சமமான ஊதியம் இல்லை என்பது உட்பட அடிப்படையிலேயே பல ஏற்றத்தாழ்வுகள் நிலவுகின்றன.
உயர் நிலையில் பெண்களுக்கான முன்மாதிரிகள் போதுமான அளவில் இல்லாததால், அவர்கள் தங்களுக்கு உயர்ந்த நிலையில் இருக்கும் பெண்களைப் பார்த்து முன்னேறும் வாய்ப்பு, ஆண்களுடன் ஒப்பிடும்போது குறைவாகவே உள்ளது. ஆணுக்கும் பெண்ணுக்கும் பாகுபாடு காட்டப்படும் நிலை இப்போதும் நிலவுகிறது.
நீங்கள் உங்கள் தொழில்களில் அதை எதிர்கொண்டிருப்பீர்கள், நான் எனது துறையில் அதை எதிர்கொள்கிறேன்.
உங்கள் உடல் தோற்றத்தைப் பற்றி ஒரு ஆண் கருத்து தெரிவித்தால், அது உங்கள் தொழில்முறை திறமையிலிருந்து உங்களை திசைதிருப்புவதற்கான காரணம்தான்.
ஒரு சிக்கலான கேள்வியை கேட்டதால், உங்கள் மைக்ரோபோன் நிறுத்தப்பட வேண்டும் என்று ஒரு மனிதன் சொன்னால் அதற்கு என்ன அர்த்தம்? அதாவது டொனால்டு டிரம்ப்பின் பிரச்சாரக் குழுவைச் சேர்ந்த பென் கார்சன் தொலைகாட்சி நிகழ்ச்சியில் என்னிடம் அப்படி நடந்துக் கொண்டபோது, "அந்த முட்டாள் பெண்ணின் வாயின் மூடு" என்று சொல்வதைப்போல் உணர்ந்தேன்.
இதில் முரணான விசயம் என்னவென்றால் உண்மையிலுமே அந்த விவாதம் பெண்கள் மீதான துன்புறுத்தல்கள் பற்றியது. என்னிடம் அப்படி முரட்டுத்தனமாக நடந்துக்கொண்ட டாக்டர் கார்சன் தற்போது வீடுகள் மற்றும் நகர்ப்புற வளர்ச்சிக்கான அமெரிக்க செயலாளர்.
நமக்கு திடீரென்று அதிக நம்பிக்கை வந்துவிடுவதால், இதுபோன்ற கசப்பான எதார்த்தங்கள் திடீரென்று ஒரே இரவில் மாறிவிடாது. நிலைமையை மாற்றுவதற்கு கொள்கைகளில் மாற்றங்கள் தேவை.
ஆனால் நம்பிக்கையைப் பற்றிய ஆய்வில் என்னை ஈர்ப்பது என்ன தெரியுமா? பெண்கள் தங்களைத் தானாகவே, அதுவும் உடனடியாக மாற்றிக் கொள்ளமுடியும் என்பதுதான்.
அமெரிக்கன் பத்திரிகையாளர் கிளெய்ர் ஷிப்மனும், நானும் இணைந்து எழுதியுள்ள "தி கான்ஃபிடென்ஸ் கோட்" என்ற புத்தகத்தில், டஜன் கணக்கான உளவியலாளர்கள், வணிகத் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், ராணுவ அதிகாரிகள் மற்றும் நரம்பியல் விஞ்ஞானிகள் ஆகியோரை நாங்கள் பேட்டி கண்டோம்.
எலிகளிடம் நம்பிக்கை தொடர்பான ஆராய்ச்சியை மேற்கொண்டிருக்கும் ஆராய்ச்சியாளர்களிடம் அப்போது பேசினோம். எலிகளில், நம்பிக்கை அதிகமான எலி மற்றும் நம்பிக்கை குறைவான எலிகள் உள்ளனவா என்று எனக்கு தெரியாது, ஆனால் நம்மில் அப்படியிருக்கிறது என்பதை உறுதியாக சொல்கிறேன்.
இதை எளிதில் உடைப்பதற்கான முறையைக் கண்டறிந்துள்ளோம். இடர்ப்பாடுகளை எதிர்கொள்ளத் தயங்குவது, தோல்வி பயம் மற்றும் அதிகப்படியான சிந்தனையால் ஏற்படும் குழப்பம் ஆகியவையே நம்பிக்கை இடைவெளிக்கு காரணங்கள்.
இது எவ்வாறு வேலை செய்யும் என்பதற்கு உதாரணமாக என் சொந்த அனுபவம் ஒன்றை சொல்கிறேன். அதிலிருந்து நீங்கள் எப்படி சமாளிப்பது என்று தெரிந்துக் கொள்ளலாம்.
சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய கிழக்கு கொள்கைகள் தொடர்பான கூட்டத்தில் கலந்துக்கொள்ள எனக்கு அழைப்பு வந்தது. 14 ஆண்களும், இரண்டு பெண்களும் கலந்துக்கொண்ட ஆலோசனை அறைக்குள் நடந்து சென்றபோது அங்கிருந்த அனைவரும் மத்திய கிழக்கு பிராந்திய விவகாரங்களில் நிபுணர்கள் என்பதை உணர்ந்தேன்.
நான் மட்டுமே பொது விவகாரத் துறையைச் சேர்ந்தவள் . அதிலும் அதில் கலந்துக் கொண்ட இரண்டு பெண்களில் ஒருத்தி .
நான் அங்கிருப்பது ஒரு தவறு, நான் அந்தக் கூட்டத்தில் பங்குபெறுவதற்கு உரியவள் அல்ல என்பதை உணர்ந்தேன்.
வானம் தலையில் விழவில்லை
கேள்வி-பதில் நேரம் வந்தபோது, எனக்குள்ளே நான் பேசிக்கொண்டேன். நான் ஒரு கேள்வியை முன்வைத்தால், எனக்கு அவர்கள் அளவுக்கு விஷயம் தெரியாது என்று என்பதை அனைவரும் உணர்வார்கள்.
அந்த சூழ்நிலை என் கண்முன்னே கற்பனையாக விரிந்தது. முகம் சிவந்துபோய், வாய் உளற, வியர்வை பொங்க நிற்பேன். அனைவரும் என்னை உற்று நோக்குவார்கள்.
இருந்தபோதிலும், என் கற்பனைகளை புறந்தள்ளிவிட்டு இறுதியில் நான் என் கையை உயர்த்தி, கேள்வியை எழுப்பினேன்.
பின்னர் ஒரு குறிப்பிடத்தக்க விஷயம் நடந்தது; பூமி திறந்து என்னை விழுங்கவில்லை, வானம் என் தலையில் விழவில்லை.
ஆனால், ஒரு கேள்வியைக் கேட்டதால், அடுத்த முறை உயர்நிலை கூட்டத்தில் இருக்கும்போது, அந்த சூழ்நிலையை கையாள முடியும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது.
திறமைகளை பற்றி நேர்மையாக மதிப்பிடுவதுடன், தொடர்ந்து அவற்றை குறைத்து மதிப்பிடாமல் இருந்தால் நம்பிக்கை இடைவெளியை அழிக்கமுடியும்.
தோல்வி என்பது மனித வாழ்க்கையின் ஒரு பகுதி என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
வருத்தங்கள் வரட்டும், விமர்சனங்கள் எழட்டும், தவறுகள் நிகழட்டும், எலும்பைத் துரத்தும் ஒரு நாய் போல அவை ஏற்படவேக்கூடாது என்று விடாப்பிடியாக பிடித்துக் கொண்டிருக்கவேண்டாம் என்று புரிந்துக் கொள்ளுங்கள்.
அதாவது மிகவும் சரியாக இருக்கவேண்டும் என்று முயற்சி செய்யாதீர்கள். ரோபோக்களே முழுமையாக சரியானவையாக இருக்கும், மனிதர்கள் அல்ல.
ஒரு சவாலில் நுழையும் ஒவ்வொரு முறையும் நீங்கள் உங்கள் வசதியான வட்டத்தில் இருந்து வெளியே செல்கிறீர்கள். ஒரு அபாயத்தை மேற்கொண்டு நம்பிக்கை இடைவெளியை மூடுகிறீர்கள். அதற்காக நன்றி. உங்களிடம் இருந்து எங்களுக்கு அதிகம் தேவை.
பிபிசியின் 100 பெண்கள் சவாலில் இந்த ஆண்டு பங்கேற்க உள்ளவர்களில் 60 பெண்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
- டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்