ஜெர்மனி : 4-ஆவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட மெர்கல்

நான்காவது முறையாக ஜெர்மனியின் சான்சலராக ஏங்கெலா மெர்கல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், வரலாற்று எழுச்சியாக வலதுசாரி தேசியவாத கட்சி கூட்டாட்சி தேர்தலில் அதிக இடங்களை வென்றுள்ளதை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் காண்பித்துள்ளன.

கடந்த 70 ஆண்டுகளில் ஏங்கெலா மெர்கலின் கன்சர்வேட்டிவ் கூட்டணியான சிடியூ/சிஎஸ்யூ மிக மோசமான முடிவுகளை தற்போதைய தேர்தலில் சந்தித்துள்ள போதிலும், நாடாளுமன்றத்தில் இந்த கூட்டணியே பெரும்பான்மையான அணியாக இருக்கும்.

அதன் தற்போதைய கூட்டணிக் கட்சியான எஸ்பிடி கடுமையான் தோல்விகளை சந்தித்து பிரதான எதிர்க்கட்சியாக அமர உள்ளது.

முதல்முறையாக நாடாளுமன்றத்தில் இடங்கள் பெற்றுள்ள வலதுசாரி தேசியவாத கட்சியும், முஸ்லிம் விரோத கட்சியுமான ஏஃப்டி நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரும் கட்சியாக இடம்பெறவுள்ளது.

இக்கட்சியின் வெற்றி சில ஆர்ர்பாட்டங்களை தூண்டியுள்ளது.

பெர்லினில் உள்ள வலதுசாரி கட்சியும், முஸ்லிம் விரோத கட்சியுமான ஏஃப்டியின் தலைமை அலுவலகத்துக்கு வெளியே பல டஜன் ஆர்பாட்டக்காரர்கள் ''அகதிகளை வரவேற்போம்' என்ற வாசகங்களுடன் கூடிய அட்டைகளுடன் கூடியிருந்தனர்.

இதே போல் ஃபிராங்போர்ட் நகரிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

இதனிடையே, தனது ஆதரவாளர்களிடம் பேசிய மெர்கல், "சிறந்த முடிவை" எதிர்பார்த்ததாக கூறினார், மேலும் தங்கள் சந்திக்கவுள்ள "அசாதாரண சவால்கள்" குறித்தும் அவர் பேசினார்.

ஏஃப்டி கட்சிக்கு ஓட்டளித்தவர்களின் கவலைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் குறித்தும்தான் கேட்கவிருப்பதாக அவர் கூறினார்.

கருத்துக் கணிப்பில் எடுப்பில் வெளியான முடிவுகளை விட ஏஎஃப்டி கட்சி தற்போது சிறந்த முடிவுகளைப் பெற்றுள்ளது. இதன்மூலம் வலதுசாரி கட்சியான ஏஎஃப்டி கட்சி முதல் முறையாக ஜெர்மனி நாடாளுமன்றத்திற்குள் நுழைய உள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :