You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியாவை சிறுமைப்படுத்த ஐ.நா. சபையில் தவறான புகைப்படத்தைக் காட்டிய பாகிஸ்தான் தூதர்
ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் இந்தியாவிற்குப் பதில் தரும் பேச்சில், காசாவில் எடுக்கப்பட்ட ஒரு சிறுமியின் புகைப்படத்தை காஷ்மீர் சிறுமி எனக் காட்டியதால் ஐ.நாவிற்கான பாகிஸ்தானின் நிரந்தரப் பிரதிநிதி மலீஹா லோதி கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறார்.
நியூயார்க்கில் நடக்கும் ஐ.நா.வின் வருடாந்திர பொதுச்சபை கூட்டத்தில் சனிக்கிழமையன்று பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாகக் கூறியிருந்தார்.
பாகிஸ்தானை விமர்சித்து ஐ.நா சபை கூட்டத்தில் சுஷ்மா சுவராஜ் பேசிய பேச்சு, இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் பலத்த விவாதங்களை எழுப்பியது.
இந்தியாவிற்கு பதிலளிக்கும் விதமாக ஐ.நா கூட்டத்தில் பேசிய பாகிஸ்தானுக்கான ஐ.நா.வின் நிரந்தர பிரதிநிதி மலீஹா லோதி, "ஜம்மு கஷ்மீரில் இருக்கும் அடிப்படை பிரச்சனைகளை இந்திய வெளியுறத்துறை அமைச்சர் புறக்கணிக்கிறார். காஷ்மீர் இந்தியாவின் பகுதி அல்ல என கூறிக்கொள்கிறேன்" என குறிப்பிட்டார்.
மேலும் பேசிய அவர், "இந்தியாவின் நிர்வாகத்தில், நூற்றுக்கணக்கான அப்பாவி காஷ்மீர் குழந்தைகளும், பெண்களும் கொல்லப்படுகின்றனர். இந்தியா வீசும் பெல்லட் குண்டுகளால் காஷ்மீர் குழந்தைகளின் பார்வை பறிபோகிறது" என்று கூறினார்.
தனது பேச்சின் போது, முகத்தில் பெல்லட் குண்டுத் தழும்புகள் பதிந்திருக்கும் ஒரு சிறுமியின் புகைப்படத்தை கூட்டத்தில் காட்டினார் லோதி.
பாகிஸ்தான் மிஷன் யூ.என் என்ற டிவிட்டர் பக்கத்தில்,"இதுதான் இந்தியாவின் முகம்" எனக கூறி சிறுமியின் புகைப்படத்தை லோதி காட்டும் படத்தினை பதிவிட்டிருந்தனர்.
இந்த டிவிட்டை, லோதியும் தனது டிவிட்டர் பக்கத்தில் மறுபதிவு செய்திருந்தார்.
பாகிஸ்தான் தூதர் காட்டிய சிறுமியின் புகைப்படத்தைக் கூகுள் இமேஜில் தேடிப்பார்த்தால், இப்படம் காஷ்மீரில் எடுக்கப்பட்டது அல்ல காசாவில் எடுக்கப்பட்டது என காட்டுகிறது.
இச்சிறுமியின் புகைப்படத்தை, ஜூலை 2014-ல் ஹெய்டி லெவின் என்ற புகைப்பட கலைஞர் காசாவில் எடுத்துள்ளார்.
கார்டியன் இணையதள புகைப்பட தொகுப்பு பகுதியிலும், இப்புகைப்படம் இடம் பெற்றுள்ளது.
"இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், இச்சிறுமியின் அடுக்குமாடி குடியிருப்பு சேதமடைந்தாகவும், அவரது உறவினர் தங்கை உட்பட மூவர் இறந்தாகவும்" இப்புகைப்படத்தின் பட விளக்க பகுதியில் கூறப்பட்டுள்ளது.
தவறான புகைப்படத்தை ஐ.நா சபையில் காட்டியதற்காக பாகிஸ்தானுக்கான நிரந்தர தூதர் விமர்சிக்கப்பட்டு வருகிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்