You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
புதிய ஏவுகணை சோதனை நடத்தியது இரான்
இரான் புதிய ஏவுகணை சோதனை ஒன்றை வெற்றிகரமாக நடத்தியதாக அந்நாட்டின் தேசியத் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. 'கொராம்ஷகர்' என்ற பெயருடைய இந்த மத்திய தூர ஏவுகணை 2,000 கி.மீ. தூரம் சென்று தாக்கவல்லது.
ஏவுகணைச் சோதனை தொடர்பான காட்சிகளை ஒளிபரப்பிய இரான் தேசியத் தொலைக் காட்சி எங்கே, எப்போது அந்த சோதனை நடந்தது என்று குறிப்பிடவில்லை.
செவ்வாய்க்கிழமை ஐ.நா.வில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் இரானின் ஏவுகணைத் திட்டத்தையும், 2015ல் அந்நாட்டுடன் செய்துகொள்ளப்பட்ட அணு உடன்பாட்டையும் விமர்சித்தார்.
ராணுவ பலத்தை அதிகரிக்கும்
இதற்குப் பதிலளித்து வெள்ளிக்கிழமை பேசிய இரான் அதிபர் ஹசன் ரூஹானி, தற்காப்புக்காக தமது நாடு ராணுவ பலத்தை அதிகரித்துக்கொள்ளும் என்று தெரிவித்திருந்தார்.
இரான் தலைநகர் டெஹ்ரானில் வெள்ளிக்கிழமை நடந்த ராணுவ அணிவகுப்பு ஒன்றில் முதல் முறையாக கொராம்ஷகர் ஏவுகணை காட்சிக்கு வைக்கப்பட்டது. இந்த ஏவுகணை ஒரே நேரத்தில் பல ஆயுதங்களை சுமந்து சென்று வீசவல்லது என்று இரான் அரசுத் தொலைக் காட்சியான பிரஸ் டி.வி. தெரிவித்துள்ளது.
பேலிஸ்டிக் ஏவுகணைச் சோதனை நடத்தியதற்காக கடந்த ஜனவரி மாதம் பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா, அந்நாடு தீவிரவாதிகளுக்கு உதவுவதாகக் கூறி ஜூலையில் மேலும் புதிய தடைகளை விதித்தது.
2015ல் இரானுடன் அமெரிக்கா உள்ளிட்ட ஆறு உலக நாடுகள் செய்துகொண்ட அணு சக்தி உடன்படிக்கையின் உணர்வுகளை இத்தகைய ஏவுகணைச் சோதனைகள் மீறுவதாக அமெரிக்கா கூறியுள்ளது.
அணு உடன்பாடு பற்றி கருத்து
இரான் இந்த உடன்படிக்கையின்படி நடந்துகொள்கிறதா என்பதையும், அமெரிக்கா தொடர்ந்து அந்த உடன்படிக்கையின்படி நடந்துகொள்ளவேண்டுமா என்பதையும் பற்றிய தமது கருத்தை அக்டோபர் 15ம் தேதி அதிபர் டிரம்ப் அமெரிக்க காங்கிரசில் தெரிவிக்கவுள்ளார்.
அமெரிக்க பொதுச் சபையில் அமெரிக்க, இரானியத் தலைவர்கள் இந்த வாரம் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை வீசிக்கொண்டனர்.
"முரட்டுத்தனமான ஆட்சிகளைக் கொண்ட நாடுகளின் சிறு குழு"வில் இரானும் இருப்பதாகக் குறிப்பிட்ட டிரம்ப் அந்நாட்டு அரசு மரணத்தையும், அழிவையும் ஏற்படுத்துவதில் உறுதியாக இருப்பதாகவும், அணு சக்தி உடன்பாடு அமெரிக்காவுக்கு சங்கடத்தை உண்டாக்கிவிட்டாகவும் அவர் குறிப்பிட்டார்.
பதிலளித்துப் பேசிய ரூஹானி, "சர்வதேச அரசியலில் முரட்டுத்தனமான புதிய வரவு. விவரம் அறியாதவர், அபத்தமானவர், வார்த்தை ஜாலக்காரர்," என்று டிரம்பை வருணித்தார். அணு சக்தி ஒப்பந்தத்தை மீறும் முதல் நாடாக இரான் இருக்காது என்றும் அவர் கூறினார்.
புதன்கிழமை இது தொடர்பாக தாம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டதாகவும், ஆனால் அதை தற்போதைக்கு வெளிப்படுத்தப்போவதில்லை என்றும் டிரம்ப் புதன்கிழமை கூறியிருந்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்