You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொட்டாவி விடும்போது மூளையில் என்ன நடக்கிறது?
இதைப் படிக்கும்போது உங்களுக்குக் கொட்டாவி வரலாம். அது பார்த்தால் தொற்றிக்கொள்வதுதானே.
மூளையில் நடக்கும் எந்த வினை கொட்டாவியைத் தூண்டுகிறது என்று தற்போது விஞ்ஞானிகள் ஆராய்கிறார்கள்.
மூளையில், உடல் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் பகுதியில் கொட்டாவியைத் தூண்டும் வேலை நடப்பதாக நாட்டிங்காம் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் குழு ஒன்று கண்டுபிடித்துள்ளது.
பிரைமரி மோட்டார் கார்ட்டெக்ஸ் எனப்படும் உடலியக்கத்தைக் கட்டுப்படுத்தும் மூளையின் பகுதியே டௌரெட்ஸ் சின்ட்ரோம் எனப்படும் தசைச் சொடுக்கு நோய்க்கும் ஓரளவு காரணமாக இருக்கிறது.
எனவே, தொற்றிக்கொள்கிற கொட்டாவிகளைப் புரிந்துகொள்வது டௌரெட்ஸ் சின்ட்ரோமைப் புரிந்துகொள்ளவும் உதவும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
மற்றவர்களுடைய சொற்கள், செயல்களைப் போலவே செய்வதை எக்கோஃபெனோமினா (எதிரொலிப் புலப்பாடுகள்) என்கிறார்கள்.
இந்த எதிரொலிப் புலப்பாட்டின் ஒரு வகைதான் மற்றவரைப் பார்த்து நாம் விடுகிற கொட்டாவியும். டௌரெட்ஸ் சின்ட்ரோம், வலிப்பு, ஆட்டிசம் போன்றவற்றிலும் இந்த எதிரொலிப் புலப்பாடுகள் இருக்கின்றன.
இத்தகைய புலப்பாடுகள் நிகழும்போது, மூளையில் என்ன நடக்கிறது என்பதை சோதிக்கும் ஆராய்ச்சிக்கு 36 பேர் தங்களை உட்படுத்திக்கொண்டனர். மற்றவர்கள் கொட்டாவி விடும்போது இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று விஞ்ஞானிகள் கவனித்தார்கள்.
கரண்ட் பயாலஜி என்ற சஞ்சிகையில் வெளியான இந்த ஆய்வுக் கட்டுரையில் சிலர் கொட்டாவி விடுவதில் தவறில்லை என்கிறார்கள். சிலர் அதைக் கட்டுப்படுத்தும்படியும் சொல்கிறார்கள்.
ஒவ்வொருவரது முதன்மை மோட்டார் கார்ட்டெக்ஸ் எப்படி வேலை செய்கிறது, அது எப்படி உணர்ச்சிவசப்படுகிறது என்பதைப் பொறுத்துதான் குறிப்பிட்ட நபர் கொட்டாவி விடுவதற்கான தூண்டுதலும் அமைகிறது.
மண்டைக்கு வெளியே இருந்து மூளையைத் தூண்டும் 'எக்ஸ்டர்னல் டிரான்ஸ்க்ரானியல் மேக்னடிக் ஸ்டிமுலேஷன்' (டி.எம்.எஸ்.) என்ற கருவியைக் கொண்டு மோட்டார் கார்ட்டெக்ஸ் உணர்ச்சிவசப்படும் அளவை அதிகரிக்க முடியும். இதன் மூலம் கொட்டாவி விடுவதையும் அதிகரிக்க முடியும். தங்கள் கொட்டாவி ஆராய்ச்சியில் இந்தக் கருவியை விஞ்ஞானிகள் பயன்படுத்தினர்.
"இந்த உணர்ச்சிவசப்படுதலை குறைக்க முடிந்தால் டௌரட்ஸ் சிண்ட்ரோம் விளைவுகளையும் குறைக்க முடியும் அது தொடர்பான ஆராய்ச்சியில்தான் ஈடுபட்டிருக்கிறோம்," என்கிறார் இந்த ஆய்வில் ஈடுபட்ட ஜார்ஜினா ஜாக்சன் (அறிதல்சார் நரம்பு இயக்கவியல் பேராசிரியர்).
கார்ட்டெக்ஸ் உணர்ச்சிவசப்படுதலில் ஏற்படுகிற மாற்றம் எப்படி நரம்புக் கோளாறுகளுக்கு இட்டுச் செல்கிறது என்பதைப் புரிந்துகொண்டால் அதை சரி செய்யவும் வாய்ப்பு உள்ளது என்கிறார் இந்த ஆய்வில் ஈடுபட்ட மற்றொரு விஞ்ஞானி ஸ்டீபன் ஜேக்சன்.
"மூளையில் ஏற்படும் சமநிலை மாற்றங்களை சரி செய்ய டி.எம்.எஸ். கருவியைக் கொண்டு செய்யக்கூடிய, மருந்தில்லாத, ஆளுக்கேற்ப செயல்படும் சிகிச்சை முறையை உருவாக்க முயல்கிறோம்," என்று அவர் கூறினார்.
கொட்டாவியை ஆராய்வதில் டி.எம்.எஸ். என்பது புதுமையான முறை என்கிறார் ஆண்ட்ரூ கேல்லப் என்ற உளவியலாளர். பிறரைத் தம்போல் நினைக்கும் குணத்துக்கும் கொட்டாவி விடுவதற்கும் உள்ள தொடர்புகளை ஆராய்ந்தவர் இவர். கொட்டாவி ஆராய்ச்சியில் கிடைத்த தரவுகள் இந்த இரண்டுக்கும் தொடர்பு இல்லை என்று காட்டுவதாகக் கூறுகிறார் இவர்.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :