You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கருப்பினத்தவரை சவப்பெட்டிக்குள் தள்ளிய வழக்கு: இரு வெள்ளையினத்தவர் குற்றவாளிகள்
கருப்பினத்தவர் ஒருவரை சவப்பெட்டிக்குள் தள்ளியதாகவும், அச் சவப்பெட்டியில் தீவைக்கப் போவதாக மிரட்டியதாகவும் தொடரப்பட்ட வழக்கில் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த வெள்ளையின விவசாயிகள் இருவரை குற்றவாளிகள் என அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அவர்கள் மீதான கொலை முயற்சி மற்றும் ஆள்கடத்தல் குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் உறுதி செய்தது.
அக்டோபரில் தண்டனை
தண்டனை விவரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. அக்டோபர் 23ம் தேதி தண்டனை அறிவிக்கப்படும் வரை அவர்களை பிணையில் வெளியில் செல்ல அனுமதிப்பதாக நீதிபதி அறிவித்தார். தண்டனை அறிவிக்கப்படும்வரை அவர்கள் இருவரையும் சிறையில் அடைக்கவேண்டும் என்ற அரசு வழக்குரைஞரின் வாதத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை.
தியோ மார்ட்டின்ஸ் ஜேக்சன் மற்றும் வில்லெம் ஊஸ்துய்ஜென் ஆகிய ஆகிய இரு வெள்ளையின விவசாயிகளும் விக்டர் மலோட்ஷ்வா(27) என்ற கருப்பினத்தவரை 2016ம் ஆண்டு ஆகஸ்டில் அடித்து சவப்பெட்டிக்குள் தள்ளியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த வழக்கு தென்னாப்பிரிக்காவில் சீற்றத்தை ஏற்படுத்தியதோடு அந்நாட்டு விவசாய சமூகங்களில் நிலவும் இனவாதப் பதற்றத்தையும் எடுத்துக்காட்டியது.
பாட்டுப்பாடி கொண்டாட்டம்
சம்பவம் நடந்து சில மாதங்கள் கழித்து, அவர் தாக்கப்படும் விடியோ, யு டியூபில் வெளியான பின்பே அவர் அது பற்றிப் புகார் அளித்தார். மலோட்ஷ்வாவை தாங்கள் காயப்படுத்த நினைக்கவில்லை என்றும் அவருக்கு ஒரு பாடம் புகட்ட மட்டுமே நினைத்ததாகவும் குற்றம்சாட்டப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
அவர்கள் குற்றவாளிகள் என்ற தீர்ப்பை மிடில்பர்க் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நீதிபதி செகோபோட்ஜீ மபாலெலெ வெள்ளிக்கிழமை வாசித்தபோது மலோட்ஷ்வா ஆதரவாளர்கள் பாட்டுப்பாடி கொண்டாடினர்.
நீதி வழங்கப்பட்டுவிட்டதால் தாம் நிம்மதி அடைந்திருப்பதாக பிபிசியிடம் தெரிவித்தார் மலோட்ஷ்வா.
இந்தத் தீர்ப்பு குறித்து தென்னாப்பிரிக்க மக்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாக விவாதிக்கிறார்கள். #CoffinAssault என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் அங்கு டிரெண்ட் ஆகிவருகிறது.
பிற செய்திகள்:'
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :