You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சீன ராணுவத்துக்குத் தகுதி பெற பச்சை குத்தவும், சுய இன்பத்துக்கும் கட்டுப்பாடு
- எழுதியவர், கெர்ரி ஆலன்
- பதவி, பிபிசி மானிட்டரிங்
சீன ராணுவப் படையில் சேர்வதற்குத் தகுதி பெற, செயற்கை பானங்கள், சுய இன்பத்துக்குக் கட்டுப்பாடு உள்பட 10 அறிவுரைகளை சீன ராணுவம் தெரிவித்துள்ளது.
அதிக அளவில் செயற்கை பானங்கள் உட்கொள்ளுதல், கணினி விளையாட்டு விளையாடுவதில் அதிக நேரம் செலவிடுதல் மற்றும் சுய இன்பம் ஆகிய காரணங்கள்தான் இளம் வயதினரின் ஆரோக்கியம் கெட்டுப்போக முக்கிய காரணம் என சீன ராணுவம் தனது இணையதள பதிவு ஒன்றில் குற்றம் சாட்டியுள்ளது.
மேலும், ராணுவத்திற்கான உடல்தகுதி தேர்வில் தோல்வியடைபவர்களின் எண்ணிக்கை `கவனத்தில் கொள்ளத்தக்க` அளவிற்கு அதிகரித்துள்ளதாகவும், உடல்தகுதி தேர்வில் கலந்து கொள்ளும் பாதிக்கும் மேற்பட்ட இளைஞர்கள் தோல்வியடைவதாகவும் அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேச உணர்வு மிக்க கதாநாயகர்கள், ராணுவத் தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நாடகங்கள் மூலம் ராணுவத்தை பிரபலப்படுத்த பல முயற்சி எடுத்தாலும், ராணுவத்திற்கு ஆள் கிடைப்பது சீனாவில் மிகவும் சிரமமாகியுள்ளது.
ராணுவத் தேர்வுக்கான பத்து அறிவுரைகள்
கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதி, தனது அதிகாரப்பூர்வ `வீ சாட்` சமூக வலைத்தள பக்கத்தில், சீன ராணுவம் பதிவு ஒன்றை வெளியிட்டது.
அதில் சீனாவின் ஒரு நகரத்தில் நடைபெற்ற ராணுவ உடற்தகுதித் தேர்வில், 56.9 சதவிகிதம் பேர் தோல்வியடைந்துள்ளதாகவும், இனி ராணுவ வீரர்கள் உடற்தகுதித் தேர்வில் கீழ்காணும் பத்து அம்சங்கள் கவனத்தில் கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
- செயற்கை பானங்கள் மற்றும் மது அருந்துதல் கூடாது: தோராயமாக 25 சதவிகித இளைஞர்கள் ரத்தம் மற்றும் சிறுநீர் சோதனையில் தோல்வியடைந்துள்ளனர்.
- மின்னணு திரைக்கு முன் அதிக நேரம் செலவிடக்கூடாது: 46 சதவீத இளைஞர்கள், கண் பார்வை பரிசோதனையில் தோல்வியடைந்துள்ளனர். இதற்கு முக்கியக் காரணம் அவர்கள் மொபைல் போன்கள் மற்றும் பிற மின்னணு சாதனங்களில் அதிக நேரம் செலவிடுகிறார்கள்.
- அதிக உடற்பயிற்சி: அதிக உடல் எடை காரணமாக 20 சதவிகிதம் பேர் தோல்வியடைந்துள்ளனர்.
- சுய இன்பத்திற்கு தடை: அதிக நேரம் அமர்ந்திருப்பதால்,விதைப்பையில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை காரணமாக 8 சதவிகிதம் பேர் தோல்வியடைந்துள்ளனர்.
- ஆழ்ந்த உறக்கத்தை அதிகப்படுத்துதல்: உயர் ரத்த அழுத்தம் காரணமாக 13 சதவிகிதம் பேர் தோல்வியடைந்துள்ளனர்.
- உடலில் பச்சை குத்திக் கொள்ளக் கூடாது.
- சுத்தமான நீரை அருந்த வேண்டும்: அதிக காலம் சுகாதாரமற்ற நீரை அருந்தியதால் காது, மூக்கு மற்றும் தொண்டையில் ஏற்பட்டுள்ள பிரச்சனை காரணமாக 7 சதவிகிதம் பேர் தோல்வியடைந்துள்ளனர்.
- மரபணு பிரச்சனைக்கான சரியான சிகிச்சை பெறுதல்: தட்டையான பாதம் மற்றும் அதிகம் வியர்த்தல் ஆகிய காரணங்களுக்காக 3 சதவிகிதம் பேர் தேர்ச்சி அடையவில்லை.
- மன நல பிரச்சனைகளுக்கு தகுந்த சிகிச்சை பெறுதல்: மன அழுத்தம் உட்பட மன நல பிரச்சனைகள் காரணமாக 1.6 சதவிகிதம் பேர் தேர்ச்சி அடையவில்லை.
- சிறப்பாக சுத்தம் மற்றும் சுகாதாரத்தை கடைபிடித்தல்: மோசமான வாழ்க்கைத்தரம் காரணமாக ஏற்படும் உள்ளூர் நோய்களினால் பாதிக்கப்பட்டதால், 3.4 சதவிகிதம் பேர் தோல்வியடைந்துள்ளனர்.
'சொகுசான வாழ்க்கை வாழ்கிறார்கள்`
சீன ராணுவத்தின் இந்த அறிவுரைகளை பலரும் சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்யத் தொடங்கியுள்ளனர். சீனாவின் பிரபல வலைப்பதிவுத் தளமான `சினா வெய்போ`-வில் இது குறித்த விவாதங்களும் சூடு பிடித்துள்ளன.
`அடுத்த ஆண்டு அவர்கள் ஆண்குறியின் முன் தோலை நீக்க வேண்டும் என்று கூட கேட்பார்கள்` என ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். மற்றொருவர் `மச்சம் இருப்பது கூட தவறு என அவர்கள் கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை` என கூறியுள்ளார்.
`எப்படி உடல்தகுதித் தேர்வில் இவ்வளவு பேர் , குறிப்பாக பார்வை குறைபாடு காரணமாக தோல்வி அடைந்துள்ளனர்` என ஒருவர் கவலை தெரிவித்துள்ளார்.
மேலும் ஒருவர்,` இந்த கால இளைஞர்கள் மிகவும் சொகுசாக வாழ்கின்றனர்` என தெரிவித்துள்ளார்.
ஆனால், `எங்களுடைய தேர்வு முறை மிகவும் தரம் வாய்ந்தது மற்றும் எங்களுடைய ராணுவம் மிகப்பெரியதாகவும், பலமானதாகவும் உருவாகும்` என சீன ராணுவம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம், சீன ராணுவ அமைச்சகம் தரைப்படை வீரர்களின் எண்ணிக்கை 2 மில்லியனிலிருந்து ஒரு மில்லியனாக குறைக்க திட்டம் தீட்டியுள்ளதாக அறிவித்தது.
பாதுகாப்புத் தேவைகளுக்கேற்ப தரைப்படை மட்டுமல்லாது, மற்ற பிரிவு ராணுவப் படைகளுக்கும் வலுவூட்டுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கபட உள்ளதாக தெரிவித்தது. ஆனால் தேவைக்கேற்ப ராணுவ வீரர்கள் தேர்ச்சியடையாததே, இந்த ஆட்குறைப்புக்கு காரணம் என சிலர் கூறுகின்றனர்.
குறைந்த ஊதியம், மோசமான உணவு, திருமணம் மற்றும் ஓய்வுக்கு பிறகு வேறு பணியில் இணைவது போன்றவற்றுக்கு இருக்கும் மோசமான வழிமுறைகள் உள்ளிட்ட ராணுவத்தின் மோசமான நிலைமை குறித்த செய்திகள் அந்நாட்டின் உள்ளூர் ஊடகங்களில் வெளியாகின.
முன் எப்பொதும் இல்லாத அளவிற்கு, ராணுவத்தில் புதிய ஆட்கள் சேர்வதை ஊக்கப்படுத்தும் வகையில் கடந்த ஆண்டு `ராப் இசை வீடியோ` ஒன்றை சீன ராணுவம் வெளியிட்டது.
பிற செய்திகள்:
- பாலியல் வழக்கு: ஹரியாணா சாமியார் பிரபலமானது எப்படி?
- உ.பி.யில் பாலியல் தொந்தரவு: கை வெட்டப்பட்ட சிறுமி கவலைக்கிடம்
- பேரறிவாளனை நிரந்தரமாக விடுதலை செய்ய திமுக கோரிக்கை
- அந்தரங்கம் பற்றிய தீர்ப்பு ஆதார் குறித்து எதுவும் கூறவில்லை: மத்திய அரசு
- இளைஞர்களின் ரத்தத்தை முதியவர்களுக்கு செலுத்தினால் இளமை திரும்புமா?
- அந்தரங்க உரிமை: தீர்ப்பில் அறிய வேண்டிய ஐந்து முக்கிய அம்சங்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்