You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மெக்சிகோ எல்லைச் சுவருக்காக அரசாங்க செலவுகளை நிறுத்திவைக்கவும் தயார்: டிரம்ப்
அமெரிக்கா-மெக்சிகோ எல்லை நெடுகிலும் சுவர் கட்டும் தமது திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்ய காங்கிரஸ் மறுத்தால் அரசாங்க மூடல் எனப்படும், செலவுகளை நிறுத்திவைக்கும் நடவடிக்கைக்கும் தாம் தயார் என்று அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப் கூறியுள்ளார்.
அரிசோனா மாகாணத்தில், 'மேக் அமெரிக்கா கிரேட் அகைன்' எனும் பெயரில் நடந்த பேரணியில் பேசிய டிரம்ப், எதிர் கட்சியான ஜனநாயகக் கட்சியினர் சுவர் எழுப்பத் தடையாக இருப்பதாகக் கூறினார்.
அவரின் 80 நிமிட உரையில், தீவிர வலதுசாரி அமைப்புகளுக்கு தளம் வழங்குவதாக ஊடகங்களையும் விமர்சித்தார். ஆனால், வர்ஜீனியாவில் உள்ள சார்லட்ஸ்வில் நகரில் நடந்த இனவெறி எதிர்ப்புப் பேரணியில் நடந்த தாக்குதலின்போது, அச்சம்பவத்திற்கு 'பல தரப்பினரும்' பழியை ஏற்க வேண்டு என்று அவர் கூறியதைப் பற்றி எதுவும் பேசாமல் தவிர்த்தார்.
மெக்சிகோ சுவர்
அமெரிக்காவின் தெற்கு எல்லையில், மெக்சிகோவை ஒட்டி, சட்டவிரோதக் குடியேறிகளைத் தடுப்பதற்காக அவர் எழுப்ப விரும்பும் சுவரை எதிர்ப்பதன் மூலம் அமெரிக்காவின் பாதுகாப்பை ஆபத்துக்கு உள்ளாக்குவதாக ஜனநாயகக் கட்சியினரை டிரம்ப் விமர்சித்தார்.
அப்பகுதியில் பணியாற்றும் குடியேற்ற அதிகாரிகள், சட்டவிரோதக் குடியேறிகளைக் கட்டுப்படுத்துவதற்கு இச்சுவர் மிகவும் அவசியம் என்று கூறுவதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.
"சுவர் எழுப்புவதற்காக அரசு செலவுகளை நிறுத்திவைக்க வேண்டிய தேவை வந்தால் அதையும் செய்வோம்," என்று அவர் தனது உரையை முடித்தார்.
தான் கடுமையாக விமர்சிக்கும், 'நாஃப்டா' எனப்படும் அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உடன்படிக்கையையும் தான் ரத்து செய்யக்கூடும் என்றும் அவர் கூறினார்.
வட கொரியாவின் அணு ஆயுத மற்றும் ஏவுகணை சோதனை குறித்து இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் பதற்றம் குறைவதற்கான வாய்ப்புகள் குறித்துப் பேசிய டிரம்ப், "அவர் நம்மை மதிக்கத் தொடங்கி இருப்பதை நானும் மதிக்கிறேன்," என்று வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் பற்றிப் பேசினார். "ஒரு வேலை இவ்விவகாரத்தில் ஒரு நல்ல முடிவு எட்டப்படலாம்," என்றும் அவர் கூறினார்.
அக்கூட்டத்தின் முடிவில் பொதுக்கூட்டம் நடந்த இடத்திற்கு வெளியே டிரம்ப் எதிர்ப்பாளர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
ஊடங்கங்கள் மீது விமர்சனம்
சார்லட்ஸ்வில் நகரில், நாஜி ஆதரவாளர்கள் உள்பட, தீவிர வலதுசாரிகள் மற்றும் இனவெறி எதிர்ப்பாளர்கள் தனித்தனியே நடத்திய போராட்டத்தில் கார் மோதப்பட்டு ஹெதர் ஹீயர் என்னும் இனவெறி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்ட பெண் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து தான் கூறிய கருத்துக்களை ஊடங்கங்கள் தவறாக வெளியிட்டதாக அவர் குற்றம்சாட்டினார்.
"இந்த நாட்டை விரும்பாத, நேர்மையற்ற மற்றும் போலியான ஊடகங்கள், இந்நாட்டின் வரலாற்றையும் பாரம்பரியத்தையும் அழிக்க விரும்புகிறார்கள்," என்று அவர் பேசினார்.
"அதிர்ச்சியளிக்கக்கூடிய வகையில் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் வெறுப்பு, சகிப்பின்மை மற்றும் வன்முறையை, மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறோம்," என்று தான் சார்லட்ஸ்வில் சம்பவத்துக்குப் பிறகு பேசியதாக அவர் மேற்கோள் காட்டினார். ஆனால், அவர், "அதிர்ச்சியளிக்கக்கூடிய வகையில் 'பல தரப்பினராலும்' வெளிப்படுத்தப்பட்டிருக்கும் வெறுப்பு, சகிப்பின்மை மற்றும் வன்முறையை, மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறோம்," என்றே அப்பொழுது கூறியிருந்தார்.
குடியேறிகளைக் கைது செய்த அதிகாரிக்குப் பொது மன்னிப்பு?
குற்றச் செயல்களில் ஈடுபடாத குடியேறிகளை நீதிமன்ற உத்தரவை மீறி கைது செய்த குற்றத்திற்காக சிறையில் இருக்கும் அரிசோனா மாகாண முன்னாள் காவல் அதிகாரி ஜோ அர்பையோவுக்கு பொது மன்னிப்பு வழங்குவதைப் பற்றி மறைமுகமாகக் கூறிய அவர், "ஜோ விரைவில் நலமாக இருப்பார்," என்று கூறினார்.
"நான் இப்போது அதைப்பற்றி எந்த சர்ச்சையையும் கிளப்ப விரும்பவில்லை," என்றும் டிரம்ப் பேசியுள்ளதால், தற்போதைக்கு பொது மன்னிப்பு பற்றி முறையான அறிவிப்பு எதுவும் வர வாய்ப்பில்லை.
வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ், "அதைப்பற்றி (ஜோவுக்கு பொது மன்னிப்பு வழங்குவது பற்றி) இன்று எந்த விவாதமும் இருக்காது," என்று செவ்வாயன்று கூறியிருந்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: