`டாபிங்` நடன சைகையை காட்டிய செளதி அரேபியாவின் பிரபல பாடகர் கைது

தென்மேற்கு செளதி அரேபியாவில் நடந்த ஓர் இசை நிகழ்ச்சியில்,`டாபிங்` எனப்படும் நடன சைகையை செய்ததற்காக அந்நாட்டின் பிரபல பாடகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

செளதி அரேபியாவைச் சேர்ந்தவரான அப்தல்லா அல் ஷஹானி, நடிகராகவும், தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் இருக்கிறார்.

தியேப் நகரில் ஒரு இசை நிகழ்ச்சியின் போது, ஒரு கையினை மேல் நோக்கியும், மறு கையினால் முகத்தை மறைத்தும் செய்யப்படும் `டாபிங்` நடன சைகையை அப்தல்லா அல் ஷஹானி செய்துள்ளார்.

பழமைவாத நாடான செளதி அரேபியாவில் டாபிங் தடை செய்யப்பட்டுள்ளது. டாபிங் போதை கலாசாரத்துடன் தொடர்புடையதாக செளதி அதிகாரிகள் கருதுகின்றனர்.

அல் ஷஹானி `டாபிங்` செய்யும் காணொளி சமூக வலைத்தளங்களில் பிரபலமடைந்தது. ஆயிரக்கணக்கானோர் ட்விட்டரில் இதனை மறுபதிவு செய்தனர்.

அமெரிக்காவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஹிப்-ஹாப்பில் இருந்து டாபிங் உருவானதாகக் கருதப்படுகிறது.

ஹிலாரி க்ளிண்டன் போன்ற அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் எனப் பல பிரபங்கள் டாபிங்கை செய்ததால் உலகம் முழுவதிலும் இது பரவியது.

டாபிங் போதை பயன்பாட்டைக் குறிக்கிறது என செளதி அதிகாரிகள் கருதுவதால், அந்நாட்டு உள்துறை அமைச்சகம் சமீபத்தில் இதற்கு தடை விதித்தது.

அல் ஷஹானி திட்டமிட்டு டாபிங் செய்தாரா அல்லது இசை நிகழ்ச்சியில் பங்கேற்றுக்கொண்டிருக்கும் போது இயல்பாகச் செய்தாரா என்பது தெளிவாக தெரியவில்லை.

``இசை நிகழ்ச்சியில் தற்செயலாக டாபிங் செய்ததற்கு, நமது மரியாதைக்குரிய அரசிடமும், மக்களிடமும் மன்னிப்பு கோருகிறேன். தயவுசெய்து எனது மன்னிப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்`` என செவ்வாயன்று அல் ஷஹானி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அல் ஷஹானியின் செயல், சமூக ஊடக பயன்பாட்டாளர்களை இரண்டாகப் பிரித்துள்ளது.

``அதிகாரிகள் டாபிங்கை தடை செய்த போதிலும், அல் ஷஹானி இதனைச் செய்கிறார். இதன் மூலம் அதிகாரிகளுக்குச் சவால் விடுக்கிறாரா?`` என ஒருவர் பதிவிட்டுள்ளார்.

மற்றொருவர்,`` இது தற்செயலான ஒன்று. இதற்கு அவர் மன்னிப்பும் கேட்டுவிட்டார்`` என கூறியுள்ளார்.

இருப்பினும், செளதி அரேபியாவில் ஒரு பிரபலமான நபர் டாபிங் செய்வது இதுவே முதல் முறை.

பிபிசியின் பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :