You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
2040 முதல் பெட்ரோல், டீசல் கார்களின் விற்பனையை நிறுத்தும் பிரிட்டன்
காற்று மாசுபாட்டை தடுக்கும் நோக்கில், பிரிட்டனில் 2040ஆம் ஆண்டுவாக்கில் பெட்ரோல் மற்றும் டீசல் கார்களின் விற்பனை நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தற்போது மின்சாரத்தில் ஓடும் கார்களின் விற்பனை ஒரு சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் நிலையில், இது சாத்தியமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.
பிரிட்டனில் மக்களின் உடல்நலத்திற்கு பெரிய பாதிப்பு ஏற்படுத்தும் முக்கியமான காரணிகளில் காற்று மாசுபாடு முக்கியமான காரணியாகப் பார்க்கப்படுகிறது. இதனால், 40,000 பேர் அகால மரணமடைவதாக அரசு தெரிவிக்கிறது.
பிரிட்டனைப் பொறுத்தவரை காற்றுமாசுபாடு குறைந்துவந்தாலும் காரின் புகையில் உள்ள நைட்ரஜன் ஆக்ஸைடு, பல நகரங்களில் பாதுகாப்பான அளவைத் தாண்டியுள்ளது. டீசல் கார்களே பெருமளவில் இதற்குக் காரணமாக உள்ளன.
நைட்ரஜன் டை ஆக்ஸைடு அபாயகரமான அளவில் இருப்பதைக் கட்டுப்படுத்த புதிய திட்டங்களை வகுக்கும்படி அரசுக்கு நீதிமன்றங்கள் உத்தரவிட்டன. இதையடுத்தே, 2040வாக்கில் டீசல், பெட்ரோல், மற்றும் ஹைப்ரிட் (பெட்ரோலிலும் பேட்டரியிலும் ஓடும் வாகனங்கள்) வாகனங்களின் விற்பனையை நிறுத்த அரசு முடிவுசெய்தது. அதேபோல, உள்ளூர் மட்டத்தில் காற்று மாசுபாட்டைத் தடுக்க கவுன்சில்களுக்கு 255 மில்லியன் பவுண்டுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், அரசின் இந்த நடவடிக்கை போதுமானதல்ல என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.
பசுமைப் புரட்சியை நடத்துவதில் அரசு உறுதியாக இருப்பதாக பிரிட்டனின் போக்குவரத்துத் துறை அமைச்சர் கிரிஸ் கிரேலிங் கூறியிருக்கும் நிலையில், இருக்கும் கார்களை அழிப்பதற்கோ, உடனடியாக சுத்தமான காற்று கிடைக்கக்கூடிய மண்டலங்களை உருவாக்கவோ அரசு திட்டமேதும் வகுக்கவில்லை என சூழல் குழுக்கள் அரசை விமர்சித்துள்ளன.
இது தொடர்பான அரசின் அறிக்கையின்படி, 40 மில்லியன் பவுண்டுகள் உடனடியாக ஒதுக்கீடு செய்யப்பட்டு, சாலை வடிவமைப்புகள் மாற்றப்படுவது, பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துவது, பொதுமக்கள் கார்களை தங்கள் வீடுகளிலேயே வைத்துவிட ஊக்குவிப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்படும்.
டீசல் கார்களுக்கு விதிக்கப்படும் வரி விகிதத்தை மாற்றுவதன் மூலமும் பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகளில் முன்னுரிமைத் திட்டங்களை மாற்றுவதன் மூலம் திரட்டப்படும். முழுமையான விவரங்கள் இந்த ஆண்டின் இறுதியில் வெளியாகும்.
ஆனால், இந்த நடவடிக்கைகளால் மாசுபாடு குறையவில்லையென்றால் மாசு படுத்தும் வாகனங்களுக்கு சில இடங்களில் கட்டணம் வசூலிக்கும் முறை அறிமுகப்படுத்தப்படும்.
2050ஆம் ஆண்டுவாக்கில் பிரிட்டிஷ் சாலையில் ஓடும் எல்லா வாகனங்களும் மாசுபாட்டை ஏற்படுத்தாத வாகனமாக இருக்க வேண்டும் என்ற அரசின் திட்டத்தின் ஒரு பகுதியாகவே 2040ஆம் ஆண்டுவாக்கில் டீசல், பெட்ரோல் கார்களின் விற்பனைக்கு தடை என்ற திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது.
அரசின் 2040 திட்டத்தை வரவேற்கும் பசுமைக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கரோலின் லூகாஸ், "வரும் வருடங்களில் ஏற்படவிருக்கும் உடல்நலம் சார்ந்த நெருக்கடி நிலையை எதிர்கொள்வதற்கான நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டும்' என்கிறார்.
"சுத்தமான காற்றை உடைய மண்டலங்களை ஏற்படுத்துவது, முழு நிதியுதவியுடநஅ டீசல் கார்களை அழிப்பதற்கான திட்டங்களை உருவாக்குவதற்கான திட்டங்கள் ஆகியவையும் இந்த நடவடிக்கையில் இடம்பெற வேண்டும். டீசல் கார்களை ஒழிப்பதால் மக்கள் வேறு வகையான கார்களுக்கு மாறக்கூடாது. பதிலாக, அவர்கள் நடத்து செல்வதற்கும் சைக்கிளில் செல்வதற்கும் ஏற்ற வகையில் நகரங்களை மாற்றியமைக்க வேண்டும். பொதுப் போக்குவரத்து கட்டுப்படியாகவும் வகையில் இருக்க வேண்டும்" என்கிறார் அவர்.
உலகம் முழுவதுமே டீசல், பெட்ரோல் கார்களிலிருந்து மின்சாரக் கார்களுக்கு மாறுவது வேகமாக நடந்துகொண்டிருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
இம்மாத துவக்கத்தில் பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மேக்ரோனும் 2040வாக்கில் பிரான்சில் பெட்ரோல், டீசல் கார்களின் விற்பனையை நிறுத்தப்போவதாக அறிவித்தார்.
2019லிருந்து ஆக்ஸ்போர்டின் கௌலி தொழிற்சாலையிலிருந்து முழுவதும் மின்சாரத்தில் இயங்கும் மினி கார்களை தயாரிக்கப்போவதாக பிஎம்டபிள்யு செவ்வாய்க்கிழமையன்று அறிவித்தது.
2019லிருந்து எல்லா மாடல் கார்களிலும் மின்சாரத்தில் இயங்கும் மோட்டர்களும் இருக்கும் என வோல்வோ அறிவித்துள்ளது.
பிபிசியின் பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
- டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்