You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'உடன் பிறந்தோர் மீது வழக்கு தொடுக்க விரும்பவில்லை': சிங்கப்பூர் பிரதமர் லி சியாங் லூங்
சிங்கப்பூர் பிரதமர் லி சியாங் லூங் குடும்ப பிரச்னையை தீர்த்து கொள்ள கோரிக்கை வைக்கப்பட்டபோதும், அவர் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக அவரின் உடன் பிறந்தோர் குற்றம்சாட்டும் விவகாரத்தில் அவர்கள் மீது வழக்கு தொடுக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.
பல வாரங்களாக அவரின் சகோதரர் மற்றும் சகோதரி ஆகியோருடன், பொது வெளியில் கடுமையான சண்டையில் ஈடுபட்டதை தொடர்ந்து லி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.
அவர்களின் தந்தையான சிங்கப்பூரின், மறைந்த முன்னாள் பிரதமர் லி குவான் யூவுக்கு சொந்தமான ஒரு வீட்டை உரிமை கோரும் விவகாரத்தில் லி அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக, பிரதமரின் உடன் பிறந்தோர் அவர் மீது குற்றம் சாட்டியிருந்தனர்.
மிக சமீபமாக, திங்களன்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் உட்பட, தொடர்ந்து அக்குற்றச்சாட்டை லி மறுத்துவந்தார்.
லி மற்றும் அவரது மறைந்த தந்தை லி குவான் யூ,ஆகிய இருவருமே தங்கள் எதிர்ப்பாளர்கள் மீது மான நஷ்ட வழக்கு தொடுப்பதற்காக அறியப்பட்டவர்கள்.
அவர்கள் மீது ஏன் எந்த சட்டப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பலரும் தம்மைக் கேட்டதாகக் கூறிய லி, "வேறு எந்த ஒரு சூழலிலும் நான் அவர்கள் மீது நிச்சயமாக வழக்கு தொடுப்பேன் ஆனால் இவ்விவகாரத்தில் அல்ல," என்று கூறியுள்ளார்.
"என் சொந்த சகோதரர் மற்றும் சகோதரி மீது வழக்கு தொடுப்பது என் பெற்றோரின் பெயருக்கு மேலும் களங்கம் விளைவிக்கும்," என்று கூறியுள்ள லி, அப்படி ஒரு வழக்கு பொது மக்களுக்கு "கவனத்தை அதிகமாக திசை திருப்புவதோடு வருத்தத்தையும் " உண்டாக்கும் என்றும் தெரிவுத்துள்ளார்.
"எனவே இதை நீதிமன்றத்தில் எதிர்கொள்வது என் விருப்பத்திற்குரிய தேர்வல்ல," என்று அவர் கூறியுள்ளார்.
ஆனால், இவ்விவகாரத்தை நீதிமன்றத்திற்கு எடுத்து செல்லாதது, "லியின் உடன் பிறந்தவர்கள் நீதிமன்றத்தில் சொல்லப்போவது அல்லது வெளிப்படுத்தப்போவது ஆகியவை குறித்து அரசு அச்சப்படுவது" போன்ற தோற்றத்தை உருவாக்குவதாக, தற்போதைய எதிர் கட்சி தலைவர் லோ தியா கியாங் கூறியுள்ளார்.
மறைந்த சிங்கப்பூர் தலவர் லீ குவான் யூவுக்கு சொந்தமான ஆக்ஸ்லீ வீதி இல்லத்தை மையமாக வைத்தே இந்த சண்டை நடக்கிறது.
இந்த விவகாரம் மூலம் மிகுந்த கட்டுகோப்புடைய சிங்கப்பூரின் முதல் குடும்பத்தில் நிலவும் கசப்புணர்வு அரிதாக வெளியில் தெரிகிறது.
தொடர்படைய செய்திகள்
கடந்த மூன்று வாரங்களாக லியின் சகோதரர் லி சியாங் யாங் மற்றும் சகோதரி லீ வெய் லிங் ஆகியோர் ஃபேஸ்புக் மூலம் குற்றச்சாட்டுகளை அடுக்கியிருந்தனர்.
சிங்கப்பூர் மக்கள் ஆரம்பத்தில் ஆர்வமடைந்த போதும் இந்த விவகாரம் தொடர்ந்துகொண்டே போவது அவர்களை மன ரீதியாக சலிப்படைய செய்துள்ளது. பெரும்பாலானோர் இவ்வழக்கு குறித்து குழம்பிப்போயும் லி மற்றும் அவரது சகோதரர்கள் இவ்விவகாரத்தை ஏன் இன்னும் சட்டப்படியோ வேறு வழியிலோ தீர்க்காமல் உள்ளனர் என்றும் வியப்படைந்தும் உள்ளனர்.
சிங்கப்பூர் வெளிப்படையான சண்டைகளை விரைவாகத் தீர்ப்பதற்கு அறியப்பட்ட நாடு. இவ்விவகாரம் விரைவாக தீர்க்கப்படாவிட்டால், லீ இப்பிரச்சனையை கையாளும் விதம் குறித்து கேள்விகள் எழக்கூடும்.
மறைந்த லி குவான் யூ உண்மையாகவே 38, ஆக்ஸ்லி சாலை என்று அறியப்படும் தன் வீட்டை இடிக்க விரும்பினாரா இல்லையா என்பதை இந்த சர்ச்சை மையம் கொண்டுள்ளது.
தனது சொந்த அரசியல் லாபங்களுக்காக அவ்வீட்டை பிரதமர் லீ பாதுகாக்க விரும்புவதாக அவரது உடன் பிறந்தோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
நாடாளுமன்றத்தில் இக்குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்த லீ, "இந்த வீடும் அதன் தொடர் இருப்பும் நான் பிரதமராக இருக்கும் வலிமையை அதிகரிக்கும் எனும் கருத்தை பொறுத்த மட்டில், தொடர்ந்து 13 ஆண்டுகள் பிரதமராக இருந்த பின்னும் இது போன்ற மந்திர வலிமைகள் மூலம் என் அதிகாரத்தை வலுப்படுத்த வேண்டிய தேவை இருந்தால், நான் மிகவும் வருத்தத்திற்குரிய நிலையில் இருப்பதாகவே பொருள்," என்று கூறியுள்ளார்.
தன்னுடைய மகன்களில் ஒருவர் மற்றும் தன் மனைவிக்கு சலுகை அளிப்பதாகவும், அதற்காக அந்த வீட்டைப்பற்றிய அரசாங்கத்தின் முடிவுகளில் தாம் தலையிடுவதாகவும் எழுந்துள்ள குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்துள்ளார்.
கல்வித்துறையில் சிங்கப்பூர் சாதிப்பது எப்படி?
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்