You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இணையத் தாக்குதல்
ஐக்கிய ராஜிய நாடாளுமன்ற வலையமைப்பில் இணையத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த இணையத் தாக்குதல் பற்றி வெள்ளிக்கிழமை இரவு தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், வெஸ்ட்மினிஸ்டர் எஸ்டேட்டிற்கு வெளியே தங்களுடைய மின்னஞ்சல்களை பார்ப்பதில் கஷ்டங்களை சந்தித்தாக கூறியிருக்கின்றனர்.
"மின்னஞ்சல்களை பார்க்க முடியாமல் போனது இணையத் தாக்குதலால் அல்ல. இந்த பிரச்சனையை கையாளுவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியால்தான்" என்று நாடாளுமன்றத்தின் பெண் செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து, தேசிய இணைய பாதுகாப்பு மையத்துடன் நாடாளுமன்ற அதிகாரிகள் தொடர்பு மேற்கொண்டுள்ளனர் என்று அவர் கூறியுள்ளார்.
"நாடாளுமன்ற பயனாளர் கணக்குகளின் உள்ளே செல்வதற்கு அதிகாரப்பூர்வமற்ற முயற்சிகள் நடைபெற்றிருப்பதை நாடாளுமன்ற அவைகள் கண்டுபிடித்திருக்கின்றன என்று அவர் கூறியுள்ளார்.
"இந்த சம்பவம் தொடர்பாக புலனாய்வை தொடர்ந்து வருகின்றோம். கணினி வலையமைப்பை பாதுகாப்பதற்கு மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்" என்று இந்த செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.
தொலைக் கட்டுப்பாட்டு வசதி நிறுத்தம்
"உறுப்பினர்களையும், ஊழியர்களையும் பாதுகாக்கும் அமைப்புக்களை வைத்திருக்கின்றோம். நம்முடைய கணினி அமைப்புக்களை பாதுகாப்பதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்." என்றும் அவர் கூறியுள்ளார்.
"இந்த வலையமைப்பை பாதுகாத்துகொள்ள தொலைக் கட்டுப்பாட்டு வசதியை நிறுத்தியுள்ளோம்" என்று அவர் மேலும் கூறினார்.
தொலைவில் இருந்து கொண்டு தங்களுடைய நாடாளுமன்ற மின்னஞ்சல் கணக்குகளை திறக்க முடியவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் பிபிசியிடம் உறுதிப்படுத்தியுள்ளனர்.
லிபரல் ஜனநாயக கட்சியின் உறுப்பினர் லார்ட் ரெனார்டு அனுப்பிய டிவிட்டர் பதிவால் இந்த இணையத் தாக்குதல் வெளியே தெரிய வந்தது. அவசர செய்தியாக இருந்தால், தனக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்புவதற்கு தன்னை பின்தொடர்வோரை அவர் கேட்டிருந்தார்.
இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை வழங்கும் டிரஸ்டுகள் மீது இணையத் தாக்குதல் நடத்தப்பட்டு ஒரு மாதமே ஆகியிருக்கும் நிலையில் ஐக்கிய ராஜிய நாடாளுமன்ற வலையமைப்பில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது..
இணையத் தாக்குதலால், வருகின்ற அச்சுறுத்தல் ஐக்கிய ராஜியத்தின் நலன்களுக்கு எதிரான மிகவும் முக்கிய ஆபத்துக்களில் ஒன்றாகும் என்று அரசின் தேசிய பாதுகாப்பு திட்டமுறை 2015 ஆம் ஆண்டு தெரிவித்தது.
ஜிசிஹெச்கியு (GCHQ) உளவுத்துறையின் ஒரு பகுதியாக செயல்படுகின்ற தேசிய இணையப் பாதுகாப்பு மையம், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம்தான் செயல்படத் தொடங்கியது.
இணையத் தாக்குதல் மீண்டும் நடக்குமா? அச்சத்தில் அரசாங்கங்கள்
தொடர்புடைய செய்திகள்
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்