You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இணையத் தாக்குதல் என்பதை ஆயுதமாக்கும் ரஷ்யா - பிரிட்டன் தாக்கு
மேற்குலக நாடுகளின் ஜனநாயகத்தையும், முக்கிய உள்கட்டுமானங்களையும் குறிவைத்து ரஷ்யா தொடர்ந்து இணைய தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக ஐக்கிய ராஜ்ஜியத்தின் பாதுகாப்பு அமைச்சர் சர் மைக்கேல் ஃபல்லோன் தெரிவித்திருக்கிறார்.
தன்னுடைய செல்வாக்கை அதிகரிக்வும், மேற்குலக நாடுகளின் அரசுகளை நிலைகுலைய செய்யவும், நேட்டாவை பலவீனப்படுத்தவும் தவறான தகல்களை ஆயுதங்களாக ரஷ்யா பயன்படுத்துவதாக அவர் கூறியிருக்கிறார்.
மேற்குலகின் "கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாளராக" புதின் மாறியுள்ளார்.
கூட்டணியின் உறுப்பு நாடுகள் எல்லாம் இணைய பாதுகாப்புகளை வலுப்படுத்தி கொள்வது முக்கியமானது என்று சர் மைக்கேல் கூறியுள்ளார்.
மால்டாவில் நடைபெறும் முறைசாரா உச்சி மாநாடு ஒன்றில், பாதுகாப்பு செலவுகளை அதிகரிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளை பிரிட்டன் பிரதமர் தெரீசா மே கேட்டுக்கொண்ட நிலையில், புனித ஆன்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தில் சர் மைக்கேலின் இந்த உரை இடம்பெற்றுள்ளது.
"ஒரே மாதியான தொடர் நடத்தை"
ரஷ்யாவால் பரப்பப்படும் இந்த "போலி தகவல்களை" சமாளிப்பதற்கு நேட்டோ அதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது என்று சர் மைக்கேல் தெரிவித்திருக்கிறார்.
வான்வெளியிலும், தரையிலும், கடற்பரப்பிலும் செயல்படுவதுபோல, இணையவெளியிலும் நேட்டா செயல்திறனுடன் தன்னை பாதுகாத்துகொள்ள வேண்டும். இதன் மூலம் இணையவெளி ஆயுதங்களை பயன்படுத்தினால், அதற்கான விலையை கொடுக்க வேண்டியிருக்கும் என்று எதிரிகள் அறிந்து கொள்வர் என்று அவர் மேலும் கூறினார்.
ரஷியாவோடு தொடர்புடைய இணையவெளி தாக்குதல்களை எடுத்துக்கூறி அவற்றில் "தொடர்கின்ற ஒரே மாதியான நடத்தையை''பாதுகாப்பு அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிரான்ஸின் டிவி5 மொன்ட் ஒளிபரப்பு, ஜெர்மனி நாடாளுமன்றத்தின் கீழவை ஆகியவற்றில் ரஷ்யா இணைய தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று சந்தேகப்படும் தாக்குதல்களில் உள்ளடங்குகின்றன என்று அவர் கூறினார்.
2016 ஆம் ஆண்டு பல்கேரியாவில் நடத்தப்பட்ட இன்னொரு இணையவெளி தாக்குதல், தென்கிழக்கு ஐரோப்பாவில் நடத்தப்பட்ட "கடுமையான" மற்றும் மிக "தீவிரமான" இணைய தாக்குதல் என்று அந்நாட்டின அதிபரால் விவரிக்கப்பட்டது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் முக்கிய அரசியல் கட்சிகள் இரண்டின் இணைய பக்கங்களில் புகுந்து தரவுகளை திருடியதாக ரஷ்யா சந்தேகத்திற்கு உள்ளாகி இருப்பதையும் சர் மைக்கேல் சுட்டிக்காட்டியுள்ளார்.
நேட்டோவுக்கு சோதனை
"இன்று பொய் தகவல்களை ஆயுதமாக்கியுள்ள ஒரு நாடு இந்த உண்மைக்கு-பிந்தைய காலத்தை உருவாக்கியிருப்பதைக் காணலாம்" என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
நேட்டோவையும், மேற்குலகையும் ரஷ்யா சோதித்து வருகிறது. அது தன்னுடைய பாதிப்பை விரிவுபடுத்தி, நாடுகளை நிலைகுலைய செய்து, கூட்டணியை பலவீனப்படுத்த எண்ணுகிறது"
"பல கூட்டணி நாடுகளின் தேசிய பாதுகாப்பையும், சர்வதேச சட்டங்களின் அடிப்படையிலான அமைப்பையும் அது குலைக்கிறது.''
"எனவே, ஐரோப்பா நேட்டாவை வலுவாக வைத்திருப்பதில் நம்முடைய நலன்கள் உள்ளடங்குவதால், ரஷ்யாவை பின்வாங்க வைத்து, அதனுடைய பாதையில் இருந்து அகற்றுவோம்" என்று அவர் பேசியுள்ளார்.
நேட்டா உறுப்பு நாடுகள் அனைத்தும் தங்களது ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதத்தை பாதுகாப்பிற்காக செலவிடும் கடமையை மதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்துள்ள அழைப்புக்கு சர் மைக்கேல் ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர :பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்