You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தென் ஆப்ரிக்கா: மீட்கப்பட்ட சர்க்கஸ் சிங்கங்கள் விஷம் வைத்து கொலை
தென் அமெரிக்க சர்க்கஸ் நிறுவனங்களிடம் இருந்து மீட்கப்பட்டு, தென் ஆப்ரிக்காவிற்கு கொண்டு வரப்பட்ட இரண்டு சிங்கங்கள் சட்டத்திற்கு புறம்பான வகையில் வேட்டைக்காரர்களால் கொல்லப்பட்டுள்ளன.
இந்த தகவலை அளித்துள்ளதற்கு வெகுமதி வழங்கலாம் என்று ஜோஸ் மற்றும் லிசோ என்று அழைக்கப்படும் இந்த சிங்கங்கள் உள்பட கடந்த ஆண்டு மொத்தம் 33 சிங்கங்களை இடம்பெயரச் செய்திருக்கும் சர்வதேச விலங்கு பாதுகாவலர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த சிங்கங்களின் தலைகள், தோல்கள், வால்கள் மற்றும் பாதங்கள் அகற்றப்பட்டிருந்தன. சில சடங்குகளை நிறைவேற்றுவதற்காக இவை கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை இது எழுப்பியுள்ளது.
இந்த குற்றம் குறித்து தென் ஆப்ரிக்க போலீஸூம், சட்டத்திற்கு புறம்பான வேட்டை தடுப்பு அமைப்புக்களும் தற்போது புலனாய்வு நடத்தி வருகின்றன.
இந்த இரண்டு சிங்கங்களும் கொல்லப்பட்டிருப்பதை அறிய வந்தபோது, இதயம் நொறுங்கி போய்விட்டதாக சர்வதேச விலங்கு பாதுகாவலர்கள் அமைப்பின் தலைவர் ஜான் கிரிமெர் தெரிவித்திருக்கிறார்.
“ஜோஸ் மற்றும் லிசோ சிங்கங்கள் சர்க்கஸில் நிறுவனத்தில் இருந்தபோது தவறான முறையில் பயன்படுத்தப்பட்டு துர்பாக்கியமான வாழ்க்கை வாழ்ந்துள்ளன. ஆப்ரிக்கா அவற்றின் வாழ்க்கைக்கு புதிய அத்தியாயத்தை அளித்தது" என்று இந்த குழுவினர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
சர்க்கஸ் நிறுவனத்தின் தலைவர் தலையில் அடித்ததால் ஜோஸ் என்கிற சிங்கத்திற்கு மூளை பாதிப்பு ஏற்பட்டிருந்தது.
தென் ஆப்ரிக்காவின் லிம்போபோ மாகாணத்தின் வட பகுதியிலுள்ள தனியார் பண்ணையின் 5 ஆயிரம் ஹெக்டேர் பகுதிக்குள் இருக்கும் இமோயா சிங்கங்கள் சரணாலயத்தில் இந்த இரண்டு சிங்கங்களும் வாழ்ந்து வந்தன.
மீட்கப்படும் விலங்குகளை 21 ஆண்டுகளாக தென் ஆப்ரிக்க சரணாலயங்களுக்கு இடம்பெயர செய்திருப்பதில், சிங்கங்கள் கொலை செய்யப்படுகின்ற சம்பவம் நடைபெற்றிருப்பது இதுவே முதல்முறை என்று சர்வதேச விலங்கு பாதுகாவலர்கள் அமைப்பு தெரிவித்திருக்கிறது.
பிற செய்திகள்
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்