You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கத்தார் மீதான தடை: இந்தியர்களின் நிலை என்ன?
கத்தார் நெருக்கடி காரணமாக, அங்கு பல ஆண்டுகளாக வேலையில் உள்ள இந்தியர்களின் நிலை பற்றி தெரிந்துகொள்ள பல இந்திய குடும்பங்கள் பதற்றத்துடன் தொலைபேசி வழியாக அங்குள்ள நிலவரம் பற்றி விசாரித்து வருகின்றனர். ஆனால் பெரும்பாலானோர் கத்தாரில் சுமூகமான நிலை காணப்படுவதாகவே தெரிவித்துள்ளனர்.
கத்தாரில் வசித்து வரும் சுமார் ஏழு லட்சம் இந்தியர்களில் சுமார் பாதி அளவு மக்கள் தென் மாநிலமான கேரளாவை சேர்ந்தவர்கள். கேரளாவில் இருந்து வருபவர்கள் கத்தாரில் உள்ள கார்பரேட் நிறுவனங்கள் முதல் கட்டுமானத் துறை வரை என பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளனர்.
''விரைவில் எல்லாம் சகஜ நிலைக்கு திரும்பும் என்று என் கணவர் கூறினார். ஆனால் நேற்று இரவு அவர் மார்கெட்டுக்கு சென்றபோது அங்கு மீன் அல்லது கோழிக்கறி என எதுவும் கிடைக்கவில்லை என்றார். எல்லா உணவு பொருட்களும் சௌதி அரேபியவில் இருந்துதான் வருகின்றன,'' என்றார் நபீஸா.
தோகாவில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலைசெய்துவரும் தீபக் குமார் ஷெட்டிக்கும் இதே நிலைதான் ஏற்பட்டது.
அடுத்த பத்து நாட்களுக்கு தேவையான எல்லா பொருட்களையும் மக்கள் வாங்கி வைத்துக்கொண்டுள்ளனர் என்பது உண்மைதான். கோழிக்கறி மற்றும் பால் போன்ற பொருட்களை பெறுவதில் சில சிரமம் இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஆனால் இதைபற்றி கவலைப் படவேண்டாம் என அரசாங்கம் ஒரு அறிக்கை விடுத்துள்ளது,'' என்றார் தீபக் குமார் ஷெட்டி.
தொடர்புடைய கட்டுரைகள்:
கத்தாரில் இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் வளம் நிறைந்திருக்கிறது, ஆனால் உணவுப் பொருட்களுக்கு அண்டை நாடான சௌதி அரேபியாவைதான் முற்றிலும் சார்ந்துள்ளது. இந்த சிக்கலான நிலை தொடர்ந்தால், உணவு பொருட்கள் இரானில் இருந்து கொண்டுவரப்படும் என்று சில இந்தியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
''இங்கே எந்தவித பயமும் இல்லை. அமைதி நிலவுகிறது. கர்நாடகா மற்றும் தில்லி ஆகிய இடங்களில் உள்ள பல நண்பர்களிடம் இருந்து எனக்கு அதிகமான அழைப்புகள் வந்தன. இங்கு பாதுகாப்பாக இருப்பதை அவர்களுக்கு நான் உறுதிப்படுத்த வேண்டியிருந்தது, "என்று ஷெட்டி கூறினார்.
பெயர் குறிப்பிடவிரும்பாத, கத்தாரில் வசிக்கும் கேரளாவை சேர்ந்த மற்றொருவர், ''பல்வேறு விமான நிறுவனங்கள் டிக்கெட்டுகளை ரத்துசெய்துவிட்டன. ''இதனால் பல வணிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். அவர்களின் பயணம் மட்டுமல்ல, அவர்களின் முதலீடுகள் கத்தாரில் உள்ளன,'' என்றார் அவர்.
ஆனால் முன்னதாக வளைகுடா நாடுகளில் பணிபுரிந்து, தற்போது கத்தாரில் உள்ள சில இந்தியர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
''வருந்துவதற்கு ஒன்றும் இல்லை. நான் கடந்த 12 ஆண்டுகளாக இங்கு இருக்கிறேன். எந்த விதமான பதட்டமான சுழலும் இங்கு இல்லை. அத்தியாவசிய உணவு பொருட்களை பெற மக்கள் வரிசையில் நிற்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் இதே போன்ற ஒரு பிரச்சனை முன்பு 2014ல் உருவானது ஆனால் அது விரைவில் தீர்ந்துவிட்டது,'' என்றார் இந்திய கலாச்சார மையத்தின் தலைவர் கிரிஷ் குமார்.
''இந்திய அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்திய தூதரக அதிகாரிகளுடன் ஒரு சந்திப்பை மேற்கொண்டனர். உண்மையில் "எந்தத் தொந்தரவும் இல்லை என்று அவர்கள் கண்டறிந்தனர்," என்றார் அவர்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்