You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சர்ச்சைக்குரிய ஆடைகளை எரித்த ஆஃப்கன் பாடகி
ஆஃப்கன் நாட்டு பாடகியும், தொலைக்காட்சி நட்சத்திரமுமான அர்யானா சயீத், நிகழ்ச்சி ஒன்றில் அணிந்திருந்த ஆடை குறித்து மதப் பிரமுகர்களும், பொதுமக்களும் கடுமையான விமர்சனம் வைத்ததை அடுத்து, அவர் அந்த தோல் நிற ஆடையை பொதுவெளியில் வைத்து எரித்தார்.
தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அர்யானா சயீத் பதிவேற்றியிருந்த வீடியோப் பதிவில், சர்ச்சைக்குரிய அந்த உடையை தீயிட்டு எரிப்பது காட்டப்பட்டிருந்தது.
பாரீசில் மே மாதம் 13 ஆம் தேதி நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அர்யானா சயீத் அணிந்திருந்த இறுக்கமான உடை பல்வேறு விமர்சனங்களை எழுப்பியது.
தனது விருப்ப உடையை எரிப்பதற்கு அவருக்கு விருப்பமில்லை என்றாலும், "இந்த உடைதான் பிரச்சனைக்கு காரணம் என்று நீங்கள் நினைத்தால், இன்றே உங்களுக்காக இந்த உடைக்கு தீ வைக்கிறேன்" என்று தன்னை ஃபேஸ்புக்கில் தொடரும் 1.6 மில்லியனுக்கும் மேற்பட்டவர்களிடம் அர்யானா தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானில் புகழ்பெற்ற பாடகியான அர்யானா சயீத் ஆப்கான் பாடல்கள், பாப் பாடல்கள் மற்றும் ஹிப்-ஹாப் பாடல்களை பாடுவார். பாடல்களையும் எழுதும் அர்யானா, தொலைகாட்சி பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
காபூலைச் சேர்ந்த டோலோ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குரல் திறமைகளை வெளிக்காட்டும் நிகழ்ச்சியின் நடுவராகவும் பணியாற்றுகிறார் அர்யானா சயீத்.
உறுதியான அர்யானா சயீத்
அவரது நடவடிக்கைகள் சமூக ஊடகத்தில் வெவ்வேறு விதமான கருத்துகள் நிலவுகின்றன. சர்ச்சைக்குரிய ஆடை பிரச்சனை முடிவுக்கு வந்துவிட்டதாக சிலர் கூறுகின்றனர். "ஆடையில்லாமல் நிர்வாணமாக இருப்பது இஸ்லாமிய சமூகத்தில் தடை செய்யப்பட்டுள்ளது, இது தவறு என்று இஸ்லாமியர்கள் அனைவருக்கும் தெரியும்" என்று ஃபேஸ்புக் நண்பர் ஒருவர் கூறுகிறார்.
இருந்தலும், அர்யானாவுக்கு அவரது ரசிகர்களிடம் இருந்து ஆதரவும் கிடைத்துள்ளது. "ஆடையை எரிப்பது என்பது சரியல்ல என்றாலும், நியாயமற்ற முறையில் விமர்சித்தவர்களின் வாயை இதன் மூலம் அடைத்துவிட்டார் அர்யானா." என்ற ரீதியில் கருத்துக்கள் பகிரப்படுகின்றன சமூக ஊடகங்களில்.
"பழங்காலத்திலேயே இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் கொடுத்த அழுத்தத்தால் நான் இவ்வாறு செய்யவில்லை. ஆனால், நமது சமூகத்தில் முக்கியமான பல விசயங்கள் குறித்து விழிப்புணர்வு எழவேண்டும் என்பதற்காகவே இதைச் செய்தேன்" என்று தனது சமூக ஊடக நண்பர்களிடம் கூறும் அர்யானா உறுதியாக இருக்கிறார்.
இதையும் படிக்கலாம்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்